சிறையில் பசுமைப் புரட்சி

பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் திறந்தவெளி தரிசு நிலமெல்லாம் பச்சை பசேலென்று காட்சியளிக்கிறது. தென்னை, வாழை, காய்கறிகள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், கடலை வகைகள் என பல்வேறு பயிர்களை பயிரிட்டு, பொன்விளையும் பூமியாக இச்சிறை வளாகத்தை மாற்றியுள்ளனர் இங்குள்ள சிறைவாசிகள்.

பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் 20 ஏக்கருக்கு மேல் காலி நிலம் உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை தரிசாக கிடந்த இந்நிலம் இப்போது விளைநிலமாக மாறி இருக்கிறது. மொத்தம் 17 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. இங்குள்ள 3 கிணறுகள் மற்றும் 2 ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர் பெறப்படுகிறது.

வறட்சிக்கு பெயர்பெற்ற திருநெல்வேலியில், தண்ணீருக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில், இங்கு கைதிகளின் உழைப்பால் தொடர்ந்து சாகுபடி நடைபெறுகிறது. சிறையில் தண்டனை பெற்ற 610 கைதிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயப் பின்னணி கொண்டவர்கள். அவர்களுக்கு மறுவாழ்வையும், மனமாற்றத்தையும் உருவாக்கும் நோக்கத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் நடைபெறும் விவசாயப் பணியையும், அதில் ஈடுபடும் கைதிகளையும் கண்காணித்து வழிநடத்தும் தலைமைக் காவலர் அ.சுப்பிரமணியன் கூறியதாவது:

வாழை, தென்னையுடன், கத்தரி, தக்காளி, வெண்டை, பூசணி, கீரை, குச்சிக்கிழங்கு என பல்வேறு வகை பயிர்களும் ஏக்கர் கணக்கில் பயிரிடப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்ப, வேளாண் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்பட்டு, நல்ல மகசூல் பெறப்படுகிறது.

தற்போது வழக்கத்தைவிட இருமடங்கு மகசூல் பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மத்திய சிறை கண்காணிப்பாளர் ரா.கனகராஜ் கூறியதாவது: விவசாயத் தொழில்நுட்பத்தை சிறைவாசிகளுக்கு பயிற்றுவிக்கும் நோக்கத்தில் `திறந்த வெளி சிறை’ என்ற திட்டத்தின் தொடர்ச்சியாக, விவசாயப் பின்னணி கொண்ட சிறைவாசிகள் தோட்டப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு விவசாயத் தொழில் தொடர்பு விட்டுப்போகாமல் இருக்கும் வகையிலும், சிறைவாசிகளுக்கு தண்டனை குறைப்பு மற்றும் வருமானம் ஈட்டும் வகையாகவும் சிறைத் துறையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தோட்ட உற்பத்தி மூலம் கிடைக்கும் விளைபொருள்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்காக சிறைக்கு வெளியே கடை திறக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், பொதுமக்களுக்கு தரமான காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனால் சமூக நலன் மற்றும் முன்னேற்றத்துக்கு சிறைவாசிகளின் பங்களிப்பும், அவர்களுக்கு மனநிறைவும், மனமாற்றமும் கிடைக்கிறது என்று தெரிவித்தார்.

Courtesy: Hindu


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *