நாகை மாவட்டத்தில் ஆழிப் பேரலையால் (சுனாமி) பாதிக்கப்பட்ட விளைநிலப் பரப்புகள் கடந்த பத்தாண்டுகளில் கடும் உழைப்பு, முயற்சிகளுக்குப் பின்னர் அதன் பாதிப்பில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வந்துள்ளது.
2004-ல் ஏற்பட்ட சுனாமியால் உப்பு நீரான கடல் நீர் விளை நிலங்களை மூழ்கடித்தது. அலையால் அடித்துவரப்பட்ட கடல் களிமண் படிமங்களாக நிலத்தை ஆக்கிரமித்தது. நாகை மாவட்டத்தில் மண் தூர்ந்தும், பயிர் பாதிப்புக்கும் உள்ளான 9,567 ஹெக்டேரில், வேதாரண்யம் பகுதியில் அதிக அளவாக 3,401 ஹெக்டேர் அடங்கும்.
குறிப்பாக, பெரியகுத்தகை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோவில்பத்து, நாலுவேதபதி உள்ளிட்ட இடங்களில் நெல் மற்றும் நிலக்கடலை, சவுக்கு சாகுபடி பரப்புகள் கடல் கரையில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டரை தாண்டி பாதிக்கப்பட்டன. அரசு தரப்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. சில இடங்களில் தூர்ந்த மண்ணை அகற்றும் பணியில் வேளாண்துறை மூலம் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இதுகுறித்து பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரா. சுப்பிரமணியன் (75) கூறியது: மலை மாதிரி தெரிந்த அலை, திடீரென ஊருக்குள்ளே புகுந்தது. தப்பித்து ஓடிவிட்டோம். திரும்பி வந்து பார்த்தபோது, ஆசை, ஆசையாக விதைத்து வைத்திருந்த நிலக்கடலை, நெற்பயிர், சவுக்கு எல்லாவற்றையும் சேறு மூடியிருந்தது. வரப்பு தெரியாத அளவில் உப்புத் தண்ணீர், கடல் களி வயல்களில் தேங்கியிருந்தது.
காய்ந்துபோன களிமண் பாலம்பாலமாக வெடித்திருந்தது. இதை அகற்றவும், ஒவ்வொரு வயல்களிலும், குட்டைகளிலும் தேங்கியிருந்த உப்புத் தண்ணீரை வெளியேற்றவும் தொண்டு நிறுவனங்கள் உதவின. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் யோசனைகள் நம்பிக்கை அளித்தன. சமுதாயக் கூடத்தில் சில நாள்கள் தங்கியிருந்த அவர், விவசாயிகளை அழைத்து பயிற்சி கொடுத்தார். வயலில் குறுக்கு வாய்க்கால் வெட்டி நிலத்தில் தேங்கிய உப்புக் கசிவை வெளியேற்றவும், உப்புத் தன்மையை அகற்ற தேங்காய் நார்க் கழிவு, எருக்கு போன்ற செடிகளை உழவில் போடவும் செயல் விளக்கம் செய்து காட்டினார்.
மண்புழு உரம், இயற்கை உரம் போன்றவைகளை கொடுத்ததோடு, பஞ்சகவ்யம் தயாரிக்கவும் சொல்லிக் கொடுத்தார், என்றார் விவசாயி சுப்பிரமணியன்.
தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பும், நம்மாழ்வாரின் வழிகாட்டுதலும் மாவட்டத்தின் பல இடங்களிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கைகொடுத்தது.
மேலும், உப்புத் தன்மையை தாக்குப்பிடிக்கும் பாரம்பரிய நெற்பயிர்களை பல விவசாயிகள் ஆர்வத்தோடு செய்து வருகின்றனர். இருந்தும் வயல்களில் உவர்ப்பு முற்றிலும் நீங்கிவிடவில்லை
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்