தரிசு நிலத்தில் ஆத்தூர் கிச்சடி சம்பா!

ராமநாதபுரத்தில் இருந்து 12 கி.மீ., மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அழகிய கிராமம் எட்டிவயல். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீமை கருவேல மரங்கள் மண்டிக்கிடந்தன. களிமண் நிலத்தில் கருவேல முள் செடிகளை தவிர வேறு தாவரங்கள் வேரூண்ட வாய்ப்பில்லை என்ற நிலையில் ‘பொன்னு விளையும் பூமி’ என்பதை தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பால் நிரூபித்து சாதனை படைத்து வருகிறார் ராமநாதபுரம் இயற்கை விவசாயி எஸ்.முருகேசன். இவர் ‘டேர் பவுண்டேஷன்’ என்ற தன்னார்வ அறக்கட்டளையை நிறுவி, இயற்கை விவசாயம், யோகா பயிற்சியை அளித்து வருகிறார்.

 

 

 

பண்ணை குட்டைகள்

அவர் கூறியதாவது: இப்பகுதியில்,25 ஏக்கர் நிலத்தை இயற்கை விவசாயம் செய்வதற்காக வாங்கினேன். ‘களிமண் நிலத்தில் என்ன செய்யப்போகிறார்,’ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. தற்போது, வறட்சியால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. எங்குமே நெல் விளைச்சலை பார்க்க முடியாத நிலையில், எட்டிவயல் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் 10 ஏக்கரில் ஆத்துார் கிச்சடி சம்பா சாகுபடி செய்துள்ளேன். நெற்கதிர்கள் வளர்ந்த நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள 6 பண்ணை குட்டைகள் தான். பருவ மழை பெய்த போது, பண்ணை குட்டைகளை நிரப்பினேன். ஆறில் மூன்று பண்ணை குட்டைகளின் தண்ணீரை நெல் சாகுபடிக்கு பயன்படுத்தினேன். மீதம் மூன்று குட்டை நீரை காய்கறி சாகுபடி, பயன்தரும் மரங்களை வளர்க்க பயன்படுத்தி வருகிறேன்.

நிழற்போர்வை முறை

கத்தரி, தக்காளி, வெண்டை, வெங்காயம், தட்டைப்பயறு, அவரை, கொத்தவரை, பீர்க்கன், பூசணி, புடல், மிளகாய் பயிர்களை சொட்டு நீர் பாசன முறையில் வளர்க்கிறேன். ஒரு காய்கறி செடிக்கு அடுத்து மற்றொரு வகை காய்கறி செடி வளரும் போது, ஒன்றுக்கு தேவைப்படும் சத்து மற்ற செடிக்கு தேவைப்படாது. நோய் தாக்குதலும் ஏற்படாது. பல பயிர் சாகுபடி முறையில், தற்போது 4 ஏக்கரில் கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரை, மிளகாய், வேர்க்கடலை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, மொச்சை, அவரை சாகுபடி செய்துள்ளேன். இவை அனைத்திற்கு சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் கிடைக்கிறது. நிலத்தில் பல்லுயிர் பெருகி வளர, நிழற்போர்வை முறையை பின்பற்றுகிறேன். தவிர, மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரும் மகோகனி, வேங்கை, செம்மரம், சந்தன மரங்களையும், மா, வாழை, கொய்யா உள்ளிட்ட பழமரங்களை வளர்க்கிறேன்.

காங்கேயம் நாட்டு மாடு

நாட்டுக்கோழி, சிறந்த மருத்துவ குணம் கொண்ட கருங்கோழிகள் வளர்க்கிறேன். கலப்பின பண்ணை முறையில், விவசாயத்தோடு, காங்கேயம் வகை நாட்டு மாடுகள் 60 உள்ளன. இவற்றை மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பதால் மாடுகள் ஆரோக்கியமாக உள்ளன. பால் கறப்பதற்கு தனியாக ஆட்களை நியமித்துள்ளேன். கருங்கோழி மருத்துவ குணம் கொண்டது. இதன் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாய், நாட்டுக்கோழி முட்டை 12 ரூபாய். முட்டை, காய்கறிகளை ராமநாதபுரத்தில் கடை அமைத்து விற்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள் என்பதால், ஒன்றிரண்டு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து விடுகிறது, என்றார். இயற்கை விவசாய தொழில்நுட்பம் குறித்து 09443465991 ல் தொடர்பு கொள்ளலாம்.

– எஸ்.பழனிச்சாமி, ராமநாதபுரம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *