நிழல் வலையில் சாகுபடி

வேளாண்மையில் நிழல்வலை அமைத்து தரமான பொருட்களை உற்பத்தி செய்ய விருத்தாசலம் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களிலிருந்தே விதைகளை நேர்த்தி செய்து, நாற்றுவிட்டு சாகுபடி செய்யும் முறையை மரபாக கொண்டுள்ளனர்.
  • உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதால் நோய், பூச்சித் தாக்குதல் அதிகரிப்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.
  • தரமான பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் தடையாக உள்ளன. இதனைத் தடுக்க வேளாண் விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
  • வேளாண்மையில் மகசூலை அதிகரிக்க வீரிய ரக விதைகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த விதைகள் அதிக விலை கொடுத்து வாங்கி சாதாரணமாக நாற்றுவிட்டு சாகுபடி செய்வதால், சூரிய ஒளி தாக்கம், நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் முளைப்புத் திறன் குறைவதுடன், மகசூல் பாதிக்கிறது.
  • இதனால், வேளாண் விஞ்ஞானிகள் பூ, காய் மற்றும் பழ வகை சாகுபடியில் அதிக மகசூலைப் பெற மிதமான சூரிய ஒளியில் நாற்றுவிடுதல், சாகுபடி செய்ய நிழல் வலையை சிபாரிசு செய்கின்றனர்.
  • இதற்கான நிழல் வலை தேசியத் தோட்டக்கலை இயக்கம், நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, அண்ணாகிராமம், திட்டக்குடி, நெய்வேலி பகுதிகளில் நிழல்வலை அமைத்து காய்கள், பழங்கள், பூக்கள் சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. மேலும், நிழல் வலை மூலம் ஒரு பரு கரும்பு நாற்றுகள் வளர்க்கப்படுகின்றன.
  • விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு முன்மாதிரியாக நிழல்வலை மற்றும் சில்பாலின் ஷீட் ஷெட் அமைத்து பூக்கள், காய்கறி செடிகள் வளர்க்கப்படுகிறது.
  • வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் நிழல்வலைகள் மூலம் பழங்கள், காய்கறிகள், பூக்கள் சாகுபடி செய்வது சிறந்தது.
  • இதனால் பயிர்களுக்குத் தேவையற்ற சூரிய ஒளியை தடுத்து நிறுத்துகிறது. இதனுள் விதைக்கப்படும் விதைகள் முளைப்புத் திறன் அதிகரிக்கும். அருகிலுள்ள வயல் வெளிகளிலிருந்து பூச்சி மற்றும் நோய் தாக்குவது தடுக்கப்படும்.
  • கடலூர் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிழல் வலையைப் பயன்படுத்தி பூக்கள், காய், கனி உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களையும், கரும்பு நாற்றாங்கால் அமைத்துள்ளனர். நிழல்வலை அமைக்கத் தேவையான பொருட்கள் புதுச்சேரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கின்றன. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் தரமாக இருக்கும்’ என்றார்.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *