‘பசுமைப் புரட்சியின் கதை‘ நூலின் வழியாக இந்திய வேளாண்மை குறித்த ஆழமான விவாதங் களைச் சங்கீதா ராம் முன்வைக்கிறார். இந்நூல் நம் மண்ணையும் மக்களையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க உதவுகிறது.

இந்திய வேளாண் மையைச் சீரழித்தது அமெரிக்க, பிரித்தானிய வணிகச் சக்திகளின் சதி என்னும் கருதுகோளை அப்படியே ஏற்றுக்கொள்வதில் பலருக்குத் தயக்கம் இருக்கலாம்.
சதித் திட்டங்கள் சார்ந்த கோட்பாடுகள் பலவற்றைப் போலவே, இதுவும் மிகைப்படுத்தலின் சுமையால் பலவீனப்பட்டிருப்பதாகத் தோன்றலாம். ஆனால் கூடங்குளம், தூத்துக்குடி, இயற்கை வளம் நிரம்பிய காட்டுப் பகுதிகள் முதலானவற்றில் பன்னாட்டு நிறுவனங்களும் வெளிநாடுகளின் செயல்திட்டங்களும் செயல்படும் விதத்தை உன்னிப்பாக கவனிக்கும் எவரும் இந்தச் சதித்திட்டக் கருதுகோளை, அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.
அமெரிக்காவில் கார் விற்பனையைப் பெருக்குவதற்காக அமெரிக்காவின் ரயில்வே சேவையையே கிட்டத்தட்ட ஒழித்துக்கட்டிய தனியார் நிறுவனங்களின் திட்டமிட்ட சதியைப் பற்றி அறிந்தவர்கள், பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வணிக நோக்கங்களைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும்.
இதுவரை அதிகம் கேள்விக்கு உட்படுத்தப்படாத சங்கதிகளைக் கூர்மையான கேள்விகளுக்கு உட்படுத்துகிறது இந்த நூல். ‘பசுமைப் புரட்சி இந்தியாவுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்’ என்னும் கருத்து திரும்பத் திரும்ப முன்வைக்கப்படும் நிலையில், இந்தக் கேள்விகள் முக்கியமானவை.
சங்கீதா முன்வைக்கும் ஆதாரங்களும் வாதங்களும் பொருட்படுத்தியாக வேண்டியவை.
இவற்றை முன்வைத்து விவாதம் நடப்பது இந்திய வேளாண்மைக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
வெளியீடு: காலச்சுவடு, தொடர்புக்கு: 04428441672 .
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்