பசுமை குடில் விவசாயத்தில் சாதிக்கும் இன்ஜினியர்!

விவசாய நிலங்களை பொறுத்தவரை நஞ்சை, புஞ்சை, மலைப்பிரதேசம், மானாவாரி என பருவநிலை மண் வளத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது. பசுமைக் குடில் தொழில் நுட்பத்தில் அனைத்து விவசாயத்தையும் செய்ய முடியும் என நிரூபித்து உள்ளார் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்த குமரன், 32.

சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு பசுமை குடில் விவசாயத்தில் 5 ஆண்டுகளாக சாதித்து வருகிறார். வயல் வெளியில் 5 ஏக்கரில் கிடைக்கும் மகசூலை இத்தொழில் நுட்பத்தில் ஒரு ஏக்கரில் பார்த்து விடுகிறார்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

அனைத்து ரக விவசாயம்

பசுமை குடில் தொழில்நுட்பம் குறித்து குமரன் கூறியதாவது:

பசுமைக் குடில் விவசாயத்தில் அனைத்து பருவ நிலையையும் கொண்டு வரலாம். மண்வளம், அதிக சூரிய ஒளி, குளிர், மழை, காற்று இவை எதுவும் அத்தியாவசியமில்லை.

மண் வளம் இல்லாத இடங்களில் கூட தேங்காய் நார் அடைத்த பைகளில் பணப் பயிர், தோட்டப் பயிர், பூ சாகுபடி செய்யலாம். துளசி, தூதுவளை போன்ற மூலிகைகளும் பயிரிடலாம்.

இந்த முறையில் குறைந்த நீர்ப்பாசனம், இயற்கை உரத்துடன், பூச்சி, நோய் கிருமிகள் வராமல் தடுக்க முடியும். சிக்கனமான விவசாயம் செய்யும் நிலை தானாகவே உருவாகிறது.

குடில் அமைப்பது எப்படி

இரும்பு பைப்புகள், இறக்குமதி செய்யப்பட்ட அல்ட்ரா வைலட் பிளாஸ்டிக் ஷீட்களை கொண்டு தேவையான அளவில் கூடாரம் அமைக்க வேண்டும். தோட்டத்தில் கிழக்கு, மேற்காக குடிலையும், வடக்கு, தெற்காக பாத்திகளையும் ‘ஏரோ டைனமிக்’ முறையில் அமைக்க வேண்டும். பக்கவாட்டிற்கு கொசுவலையை பயன்படுத்துவதன் மூலம் தேவையான காற்று, சூரிய ஒளி கிடைக்கும். இதனால் அதிக தட்ப, வெப்ப நிலையை கட்டுப்படுத்தலாம். குடிலின் உட்புறத்தில் நிழல் வலை (ஷேடோ நெட்), பாஹர், சொட்டு நீர், தெளிப்பானை பயன்படுத்தி சாகுபடி செய்ய வேண்டும்.

சிறிய இடம் நிறைந்த பலன்

குடிலின் உள்கட்டமைப்பால் பயிரில் சரியான ஈரப்பதத்துடன் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது. பூச்சி, நோய், எலி, பறவைகள் பாதிப்புகள் இல்லாமல், வயல் வெளியில் 5 ஏக்கரில் கிடைக்கும் மகசூலை குடிலுக்குள் ஒரே ஏக்கரில் பெற்று விடலாம். இக்குடிலை வீடுகள், சிறிய இடங்களிலும் அமைக்கலாம். வேளாண், தோட்டகலை துறை மூலம் குடிலுக்கான அரசு மானியம், விதைகள், தொழில் நுட்பங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
என்னுடைய நிலத்தில் வெள்ளரி, தக்காளியை ஆண்டு முழுவதும் பயிரிடுகிறேன். புனே, பெங்களூரு, குஜராத் ஆகிய இடங்களில் இத்தொழில் நுட்பத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அப்பகுதி விவசாயிகள் இங்கு வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர். தேவைப்படும் விவசாயிகளுக்கு நாங்களே குறைந்த செலவில் குடில் அமைத்துக் கொடுக்கிறோம் என்றார்.

தொடர்புக்கு 09344477715 .

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பசுமை குடில் விவசாயத்தில் சாதிக்கும் இன்ஜினியர்!

  1. செ. கிள்ளிவளவன் says:

    வாழ்த்துக்கள் நான் இந்த முறையில் சாகுபடி செய்ய உதவ வேண்டும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *