பராமரிப்பு குறைவு நிறைந்த லாபம்!

நாகை மாவட்டம், நரசிங்கநத்தம் கிராமத்தை சேர்ந்த, பாரம்பரிய விவசாய முறையை கடைபிடித்து வரும் விவசாயி, ஞானப்பிரகாசம் கூறுகிறார் :

எங்கள் தோட்டம், களிமண் பூமி. 40 ஆண்டுகளாக, இலை, தழை, மாட்டு எருவை மட்டுமே பயன்படுத்துவதால், செழிப்பாக உள்ளது.

‘வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்’ என்ற அடிப்படையில், 3 அடி உயரமும், 5 – 10 அகலமும் இருப்பது போல், வரப்பு அமைத்துள்ளோம். மொத்தமுள்ள, 1 ஏக்கர், 30 சென்ட் நிலத்தில், 30 சென்ட் வரப்பு தான் உள்ளது. வரப்பின் மேல் பகுதியை, 45 டிகிரி அளவில் சரிவாக அமைத்துள்ளதால், வரப்பில் விழும் மழை நீர், நிலத்துக்குள் வந்துவிடும்.

இந்த, 30 சென்ட் வரப்பில், தென்னை, வாழை, முருங்கை, கொய்யா, நெல்லி, நாவல் என, பல வகை மரங்களும், கொஞ்சம் காய்கறிப் பயிர்களும் உள்ளன. மீதி, 1 ஏக்கரில், நெல் சாகுபடி செய்கிறோம்.

மூன்று, நான்காண்டுக்கு ஒருமுறை வரப்பில் மட்டும், 15 டன் மாட்டு எரு போடுவோம். மழை இல்லாத சமயங்களில், ‘போர்வெல்’ தண்ணீரை பயன்படுத்திக் கொள்வோம். 1 அடி இடைவெளியில், குத்துக்கு மூன்று நாற்று என, நடுவோம். எந்த பராமரிப்புமின்றி, தண்ணீர் பாய்ச்சுவது மட்டுமே வேலை.

வரப்பில் இருக்கும் சத்துக்களே, நெல்லுக்கு போதுமானதாக உள்ளது. அடுத்து, அறுவடை மட்டும் தான்.சம்பா பட்டத்தில், ஒட்டடையான் ரகத்தையும், குறுவைப் பட்டத்தில் பூங்கார், அறுபதாம் குறுவை ரகங்களையும், சில சமயங்களில், வீரிய ரகங்களையும், சாகுபடி செய்கிறோம்.ரெண்டு போகம் நெல் சாகுபடி மூலமாக, ஆண்டுக்கு, 3,000 கிலோவுக்கு குறையாமல் மகசூலாகிறது.

அதை அரிசியாக அரைத்தால், 1,500 கிலோவுக்கு மேல் கிடைக்கும். ஒரு கிலோ அரிசி, 65 ரூபாய்க்கு விற்றால், 98 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். சாகுபடி செலவு போக, 75 ஆயிரம் ரூபாய் வரை லாபமாக நிற்கும்.

இது போக, மாட்டுக்கான வைக்கோல், தவிடும் கிடைக்கிறது.இதுதவிர, தென்னை காய்களை கொப்பரையாக மாற்றி எண்ணெய் ஆட்டுகிறோம். ஆண்டுக்கு, 150 லி., கிடைக்கும் எண்ணெயை, 1 லி., 300 ரூபாய்க்கு விற்பதால், 45 ஆயிரம் ரூபாயும், வாழை மரங்களில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயும் வருமானம் கிடைக்கும்.

எப்படிப் பார்த்தாலும், 1 ஏக்கர், 30 சென்ட் நிலத்தில், ஆண்டுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துவிடும். எந்தப் பராமரிப்பும் இன்றி இந்தளவு லாபம் கிடைப்பது பெரிய விஷயம் தானே! தொடர்புக்கு: 09360551353 .

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *