பழ/பூ வகை செடிகள் உற்பத்தியில் கருமந்துறை அரசு பழப்பண்ணை முதலிடம்

பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை உள்ள அரசு பழப்பண்ணை, பழ வகை மற்றும் பூச்செடி உற்பத்தியில், ஆசியா அளவில், இரண்டாவது இடமும், தமிழக அளவில், முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தமிழக தோட்டக்கலை, வேளாண்துறை மூலம், 54 பழப் பண்ணை, பலன் தரும் பழ வகை, மலர் செடிகள் வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த கல்வராயன்மலையில் உள்ள கருமந்துறையில், 1,036 ஏக்கர் பரப்பளவில், தோட்டக் கலைத்துறையின் பழப்பண்ணை உள்ளது.

இங்கு, மா, கொய்யா, கோ-கோ, பலா, பாக்கு, மிளகு, கிராம்பூ, சப்போட்டா உள்ளிட்ட பழ வகை, ரோஜா, குண்டு மல்லிகை மலர் ரக வீரிய ரகம் மற்றும் ஒட்டு ரக செடிகள் வளர்த்து வருகின்றனர். இதில், மா, கொய்யா, பலா வீரிய ரக செடிகள், சேலம், கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களுக்கு சப்ளை செய்கின்றனர்.

கருமந்துறை பழப்பண்ணையில் மட்டும், ஆண்டுக்கு, பத்து லட்சத்துக்கு மேல் பழம், பூ வகை செடிகள் வளர்க்கப்பட்டு, தோட்டக்கலை துறை மூலம் மானிய விலைக்கு வழங்குகின்றனர்.

மேலும், சேலம் மாவட்ட தோட்டக்கலைத்துறையில், ஆத்தூர் முல்லைவாடி, மணியார்குண்டம், கருமந்துறை, ஏற்காடு, சிறுமலை என, ஆறு இடங்களில் பழவகை விதைகள் மூலம், வீரிய ரகம், ஒட்டு ரக செடிகள் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்குகின்றனர்.

கருமந்துறை அரசு பழப்பண்ணையில், அதிகளவில் பழ வகை, பூ செடிகள் உற்பத்தி செய்து, 75 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளனர். அதனால், ஆசியா அளவில் கருமந்துறை பழப்பண்ணை, இரண்டாம் இடமும், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து, கருமந்துறை பழப்பண்ணை அலுவலர்கள் கூறியதாவது:

  • கருமந்துறை அரசு பழப்பண்ணையில், பழ வகை நாற்று செடிகளும், பூ வகை வீரிய ரக ஒட்டு செடிகளும் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • மத்திய பாக்கு ஆராய்ச்சி நிலையத்தின் மூலம், மங்களா, ஸ்ரீமங்களா, சுப மங்களா, முகித்மெகன் போன்ற வீரிய ரக பாக்கு நாற்றுகள் வளர்க்கப்படுகிறது.
  • அதேபோல், பலா செடிகளில், பன்னியூர், கரிமுண்டா, சிங்கப்பூர், வேலி, பர்லியா போன்ற வீரிய ரக பலா செடிகள் உள்ளன. இவ்வகை பலா செடிகள், மூன்று முதல், ஐந்து ஆண்டுகளில் காய்கள் பிடிப்பதுடன், அதிக அளவில் விளைச்சல் இருக்கும்.
  • தவிர, மிளகு, கோ-கோ போன்ற செடிகளும், வீரிய ரகம், ஒட்டு ரகம் உற்பத்தி செய்து, மானிய விலையிலும், அரசின் இலவச திட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது.
  • கருமந்துறை பழப்பண்ணை, பழ வகை மற்றும் பூ வகை நாற்றுக்கள் உற்பத்தியில், கடந்த ஆண்டு தேசிய அளவில், இரண்டாவது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *