“”நமது பாரம்பரிய தானியங்களை பயிரிட வேண்டும்,’ என பயிலரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வனக்கல்லூரி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் சார்பில் முழுமையாக பயன்படுத்தாத பயிர்களை சாகுபடி செய்வது குறித்த ஒரு நாள் பயிலரங்கம் ஊட்டியில் நடந்தது.
ஊட்டி தோட்ட கலைத்துறை வளாகத்தில் நடந்த பயிலரங்கத்துக்கு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினர் அர்ஜூணன் தலைமை வகித்து பேசுகையில்,
“” கூக்கல்தொரையில் 250 விவசாயிகள் பாரம்பரிய தானிய பயிர்களான ராகி, சம்பா, கோதுமை, சாமை, பாப்பரை மற்றும் கீரை வகைகளை பயிரிட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு விதைகள் வழங்கப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மைக்கு உகந்த இடுபொருட்களான பஞ்சகாவ்யா, தசகாவ்யா, உயிர் உரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவுப்படுத்தப்படும். மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த ஆகாரம் கிடைக்க பல்வேறு வகையான கீரை விதைகள் வழங்கப்படும்,” என்றார்.
வனவியல் கல்லூரி முதல்வர் துரைராசு பேசுகையில்,””நமது உணவு பழக்க மாற்றத்தால் ரத்த கொதிப்பு, இதய நோய்கள், சர்க்கரை நோய் ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகிறோம்
பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.நமது பாரம்பரிய தானியங்களை விவசாயிகள் பயிரிட வேண்டும்.
பனிவறகு, வறகு, சாமை, கம்பு மற்றும் கீரை வகைகளை பயிரிட வேண்டும். தண்டு கீரையில் நாம் கீரையை மட்டும் பயன்படுத்துகிறோம். இந்த கீரையின் விதையில் ஜிங்க், சோடியம், போட்டாசியம் மற்றும் புரத சத்துக்கள் உள்ளன. இந்த விதைகளை வெல்லத்துடன் இணைந்து சத்துணவு தயாரிக்கலாம்,” என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்