பார்த்தீனியம் என்ற பயிர்க்கொல்லி

பார்த்தீனியம் என்ற சொல் லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இச்செடியின் தாவரவியல் பெயர் ‘பார்த்தீனியம் ஹைடர்போரஸ்’ ஆகும். இவை செடிகளின் நட்சத்திர குடும்பமான ‘ஆச்டெரேசியே’ வகை பூக்கும் தாவரமாகும்.

வட அமெரிக்கா நாட்டை தாயகமாக கொண்ட இச்செடி ஒரு பருவகால செடி. இது மண்ணை ஆழமாக துளைத்து செல்லும் ஆணி வேரை கொண்டு உள்ளது. மென்மையான முட்களையும் கொண்டிருக்கும். இதன் பூக்கள் செடியின் மேல் பகுதியில் வெண்மை நிறத்தில் காட்சி தரும்.

லட்சம் விதைகள்

இச்செடியானது தனது வாழ்நாளில் ஒரு லட்சம் விதைகளை உற்பத்தி செய்யும் தன்மையை பெற்றுள்ளது. இதன் விதைகள் கருப்பு நிறத்தில் வெள்ளை செதில்களுடன் கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய அளவில் காணப்படும். இவை கரிசல் மற்றும் செம்மண் பூமியில் விளை நிலங்கள் மற்றும் சாலையோரங்களில் செழித்து வளரும். இவை குளிர்காலங்களில் அடர்ந்து வளர்கின்றன.

இவ்வாறு வளரும்போது பூக்களை அதிகமாக உற்பத்தி செய்து காற்றில் பரவ விடுகின்றன. ஆதலால் இவை மனிதர்களுக்கு சுவாசக்குழலுக்குள் சென்று ஒவ்வாமையை உருவாக் குகின்றன. இவற்றின் பூக்களின் மேலே ஒருவிதமான மேல் பயிர்கள் காணப்படுகின்றன.

இவை நமது உடலின் மேல்பட்டால் அரிப்பு போன்ற உணர்வு ஏற்படுகிறது. இச்செடிகளில் இருந்து ‘அம்புரோசின்’ என்ற நச்சு வேதிப்பொருட்களை சுரக்கிறது. இந்த நச்சு பொருட்களிடம் இருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் நமது நாட்டு தாவர இனங்கள் அழிந்து விடுகின்றன. இது மண்ணில் கசிய விடும் நச்சு பொருட்களின் மூலம் வேளாண் பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது.

உளுந்து மற்றும் பாசிப்பயறு போன்ற பயிர்களின் அருகில் இச்செடி வளரும்போது பயிர்களின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கிறது.

பயறு வகை பயிர்களின் வேர்களில் உள்ள வேர் முடிச்சுக்களில் ரைசோபியம் என்ற பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. இவை தழைச்சத்தை ஆகாயத்திலிருந்து தாவரங்கள் உறிஞ்சக்கூடிய அயனி நிலைக்கு மாற்றி்த்தருவதுடன் நைட்டிரஜன் சமநிலையை பேணியும் வருகின்றன.

பார்த்தீனிய செடிகளின் நஞ்சுகள் இந்த வேர் முடிச்சுகளையும் விட்டு வைப்பதில்லை என்று தாவரவியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். பார்த்தீனியம் செடிகள் கலந்த பசுந்தீவனங்கள் உண்ணும் கால்நடைகளின் பால் கசப்புத்தன்மை பெறுகிறது.

இவை கரியமில வாயுவை அதிகமாக வெளியிடுவதால் சுற்றுச்சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்து கிறது. இவை பல்லுயிர் பெருக்கத்தை அச்சுறுத்துகிறது.

அழிக்கும் முறைகள்

இவைகளை கைகளால் (கையுறை அணிந்து) பிடுங்கி பள்ளத்தில் இட்டு உப்புக்கரைசல் அல்லது ‘கமாக்சின்’ என்னும் வேதிப் பொருளை இட்டு குழிகளை மூடி அழிக்க வேண்டும்.

கேசியா இனத்தை சார்ந்த எதிரிச் செடிகளை வளரவிட்டு இவை பரவாமல் தடுக்கலாம்.

ஒரு கிலோ உப்பையும், ஒரு லிட்டர் சோப்பு ஆயிலையும் பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் இவை வாடி வதங்கி அழிந்து விடும். இதை பூக்கும் முன் தெளிக்க வேண்டும்.

இச்செடியின் தீமைகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அவற்றை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு பயிர்களையும், கால்நடைகளையும், மனிதர்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட உறுதி எடுப்போம்;

சுற்றுச்சூழலை காப்போம்; வேளாண்மை வளம் பெற பாடுபடுவோம்.

தொடர்புக்கு 9443570289

– எஸ்.சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பார்த்தீனியம் என்ற பயிர்க்கொல்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *