டெல்லியில் சிறந்த விவசாயிக்கான விருதை, தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண் விவசாயி பூங்கோதைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். அப்போது, பூங்கோதையை குனிந்து கும்பிட்டு பிரதமர் ஆசி பெற்றார்.
டெல்லியில் விவசாயிகள் முன்னேற்ற மாநாடு நேற்று தொடங்கியது. கடந்த நிதியாண்டில் விவசாயத்தில் சாதனைகளை புரிந்த விவசாயிகளுக்கு பிரமதர் மோடி கிருஷி கர்மண் விருதுகளை வழங்கி கவுரவித்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண் விவசாயி பூங்கோதையை குனிந்து கும்பிட்டு பிரதமர் ஆசி பெற்றார்.
இது குறித்து டெல்லியில் இருக்கும் விவசாயி பூங்கோதையிடம் பேசியபோது, “கீழே உக்காந்திட்டு இருந்தேன். மேடைக்கு வரச் சொன்னாங்க. மேலே போனதும், ஐயாவை(பிரதமர்) பாத்து குனிஞ்சு கும்பிட்டேன். அவரும் குனிஞ்சு காலை பாத்து கும்பிட்டாரு. பிறகு விருதும் கொடுத்தாங்க. இந்த விருது வாங்கினது பெரிய சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு. நான் பெரிசா படிப்பெல்லாம் படிக்கல. எனக்கு விவசாயம் மட்டும்தான் தெரியும். நெல், பருத்தி, சோளம்னு பயிர் செய்வேன். இதோட மக்காச்சோளமும் பயிர் செஞ்சேன். அதுக்கு இந்த விருது கொடுத்து கௌரபடுத்தியிருக்காங்க” என்றார்.
இந்த பெண் விவசாயியோடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெத்தண்ணன் என்ற விவசாயிக்கும் கிருஷி கர்மண் விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு வேளாண்துறை இயக்குனர் மு. ராஜேந்திரன் பேசியபோது, “ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு மத்திய அரசின் கிருஷி கர்மண் விருது வழங்கப்படுவது வழக்கம். 2014-15ம் ஆண்டில் அதிக மகசூல் எடுத்த இரண்டு விவசாயிகள் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரம், அகரம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை என்ற பெண் விவசாயி மக்காச்சோளத்தில் அதிக மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவர் என்.கே.-6240 என்ற மக்காச்சோள ரகத்தில் ஹெக்டேருக்கு 14,256 கிலோ(14.2 டன்) மகசூல் எடுத்துள்ளார். வழக்கமாக 8 லிருந்து 10 டன் விளைச்சல்தான் எடுப்பார்கள். இவர் அதை தாண்டி 4 டன் மகசூல் கூடுதலாக எடுத்ததற்காக இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டாரத்தைச் சேர்ந்த பி.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெத்தண்ணன் என்பவர் வீரிய ரக சோளத்தில் அதிக விளைச்சல் எடுத்தமைக்காக இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஹெக்டேருக்கு 8333 கிலோ(8.3 டன்) விளைச்சலை எடுத்துள்ளார். வழக்கமாக 6 டன் தான் எடுப்பார்கள். இவர் 2 டன் கூடுதலாக விளைச்சல் எடுத்தமைக்காக இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர்கள் இரண்டு பேரும் ரசாயன உரங்களின் அளவைக் குறைத்து அசோஸ் ஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் நுண்ணூட்ட கலவைகளை இடுபொருட்களாக பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வேளாண் வட்டார அளவிலும் விவசாயிகளுக்கு போட்டிகளை நடத்தி இந்த விருதுக்கு தேர்ந்தெடுத்தோம்.
இரண்டு பேருக்கும் தலா 2 லட்ச ரூபாய் விருதுக்கான தொகையாக வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இந்த விழா நேற்று (19ம் தேதி) நடைபெற்றது. விவசாயிகளை கௌரவிக்கும் விதமாக பிரதமர் இந்த விழாவில் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். பல மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். தமிழகத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மாநில, தேசிய அளவில் விவசாயிகளுக்கான அதிக மகசூல் எடுக்கும் போட்டிகள் வேளாண்துறை மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்க முன்வரவேண்டும்” என்றார்.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்