புரதத்தை இழந்த உணவு வளர்ச்சி – II

இந்த பதிப்பின் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்.

கடந்த மாதம் “”ஹங்காமா” என்ற அறிக்கையை (ஹங்கர் – மால்நியூட்ரிஷன்) நந்தி அறக்கட்டளை இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை வழங்கியுள்ள தகவல்படி இந்தியக் குழந்தைகளில் (5 வயதுக்குள்பட்டோர்) 42 சதவிகிதம் புரதம், தாதுப்பு போன்ற போஷாக்கு இல்லாமல் எடை குறைந்தும், போதிய உயரம் இன்றியும், அதிகமான நோய்க் குறிகளுடனும் வளர்வதாகக் கூறப்பட்டுள்ள விஷயத்தைப் படித்த பாரதப் பிரதமர் “”வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்று வாய்திறந்து பேசியுள்ளார். சிறார் இறப்பு விகிதம் நைஜீரியா, சோமாலியா போன்ற ஏழை நாடுகளுக்கு இணையாக உள்ள இந்தியாவை எவ்வாறு வளரும் பொருளாதார நாடு என்று கூற முடியும்?இந்தியத் தாய்மார்களுக்கு ரத்தசோகை, மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் எல்லாம் என்னவோ ஜலதோஷம், ஜூரம் என்று சொல்வதுபோல் சாதாரணமாகப் பேசப்படும் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியது.இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ள இந்தியப் பெரும்பான்மைக்கு இயற்கையும் விவசாயமும் தரக்கூடிய மருந்தை மறந்துவிட்ட பொருளாதார நிபுணர்கள் விவசாயத்தைப்பற்றி எழுதும்போது கூறப்படும் கருத்துகள் இதைவிடக் குரூரமானவை. “”விவசாயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அமெரிக்கத் தரத்தில் இல்லை என்பதால் அதற்கு ஏற்ப துண்டு நில விவசாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுப் பெரிய பெரிய பண்ணைகள் உருவாகி பயோடெக் என்ற போர்வையில் பி.ட்டி விதைகள் அறிமுகமாக வேண்டும். சிறு – குறு விவசாயிகளை நகரத்துச் சேரிகளுக்குத் துரத்தி அனுப்பிவிட வேண்டும்”.மற்றுமொரு அறிஞர், “”அரிசி, கோதுமை உற்பத்தி போதும். சுற்றுச்சூழலுக்கு மாசு நிகழாதபடி ஏற்றுமதிப் பயிர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அமெரிக்க – ஐரோப்பிய சந்தைகளைப் பிடிக்க வேண்டுமென்கிறார். அப்போதுதான் ஜி.டி.ப்பியில் விவசாய வருமானத்தின் பங்கு உயரும்” என்கிறார். எந்த ஓர் அறிஞரும் இந்திய யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு எழுதுவதாகத் தெரியவில்லை. சற்று யோசித்துப் பார்ப்போம்.நெல், கோதுமை, கரும்பு, மக்காச்சோளம் ஆகிய உணவுப்பயிர்களில் மட்டுமே உற்பத்தியில் வளர்ச்சி உள்ளது. புஞ்சைத் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்து உற்பத்தியில் வீழ்ச்சி உள்ளது. நெல் போன்ற பயிர்களின் வளர்ச்சிக்கு அரசு தலையீடு காரணம். அங்காடி வீழ்ச்சியுறுவதல்ல.ரூ. 1,000 கொடுத்து குவிண்டால் நெல் வாங்கி, மேலும் ரூ. 1,000 செலவழித்து அரிசியாக்கி மக்களுக்கு கிலோ ரூ. 20 மதிப்புள்ள அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கரும்புக்கு ஆண்டுதோறும் அரசு விலை நிர்ணயித்து வழங்கப்படுகிறது. மக்காச் சோளத்தை மான்செண்டோ கவனிக்கிறது. அங்காடிக்கு உத்தரவாதம் உள்ளது. ரூ. 20 மதிப்புள்ள அரிசி 20 கிலோ என்றால் குடும்பத்துக்கு ரூ. 400 மானியம் உள்ளது. இதற்குப் பதிலாக இதே ரூ. 400-க்குள் அடக்கமாகும்படி 15 கிலோ அரிசி வழங்கி மீதி 5 கிலோ துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, சுண்டக்கடலை, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு 1 கிலோ வீதம் வழங்கலாம்.எவ்வாறு நெல் கொள்முதலாகிறதோ அவ்வாறே பருப்புகளையும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும். நுகர்வோர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டாம். கிலோ ரூ. 30 என்று விநியோகிக்கலாம். இதில் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய 5 கிலோ அரிசியைக் குறைத்துக்கொண்டு அரிசிக்கு வழங்கப்படும் அதே 20 ரூபாய் மானியம் வழங்கலாம்.புஞ்சைத் தானியங்கள் கால்நடை உணவு என்பதால் ரேஷன் கடைகளில் விலை போகாது. நிலக்கடலைப் பருப்பு, எள் ஆகியவற்றை அரசு கொள்முதல் செய்து வெளி அங்காடிக்கு வழங்கலாம். எவ்வாறு கொள்முதலாகும் கோதுமையை உணவுக் கார்ப்பரேஷன் வெளி அங்காடிக்கு விற்கிறதோ அவ்வாறே புஞ்சைத் தானியங்களையும் நிலக்கடலைப் பருப்பு,
எள் ஆகியவற்றை நேரிடையாக வெளி அங்காடிக்கு விற்கலாம். இப்படிச் செய்தால்தான் புரத உணவு சாகுபடி ஊக்கம் பெறும்.இரண்டாவதாக, புஞ்சைத் தானியங்களிலும், எள், நிலக்கடலை போன்ற பயிர்களும் நல்ல விளைச்சல் பெற நுண்ணீர்ப்பாசனம் கட்டாயப்படுத்தலாம். நுண்ணீர்ப்பாசனம் செய்யப் பெரிய பண்ணை தேவையில்லை. மேற்படிப் பயிர்கள் எல்லாம் மேட்டு நிலங்களில் வறட்சிப் பயிர்களாக சாகுபடியாகின்றன.என்னதான் வறட்சிப்பயிர் என்றாலும் முழுக்கவும் மானாவாரி என்ற நிலை மாறி நுண்ணீர்ப்பாசனம் என்பது நீர்சிக்கன நடவடிக்கை. வாய்க்கால் மூலமோ, குழாய்வழியோ இல்லாமல் பயிர்களின் வேர்களுக்கு மட்டும் நீர் கிட்டுமாறு “ஸ்ப்ரிங்ளர்’ அமைத்தல். முதலமைச்சரின் பல்வேறு இலவசத் திட்டங்களில் நுண்ணீர்ப்பாசனமும் ஒன்று. அவற்றை வறண்ட பயிர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்பட வேண்டும். இன்று நுண்ணீர்ப்பாசனம் பழ சாகுபடி மற்றும் மலர் சாகுபடிக்கு மட்டும் பயனாகிறது. இவையெல்லாம் லாபம் கருதி அமைந்தவை. ஆனால், வறண்ட பயிர்களுக்கு வெகு சிலரே நுண்ணீர்ப்பாசனத்தை மேற்கொள்கின்றனர்.முடிவாக கவனிக்கும்போது, ஏற்றுமதிப் பயிர்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை வறட்சியான புஞ்சைப்பயிர்கள் – குறிப்பாக துவரை, உளுந்து, பாசிப்பயறு, சுண்டல்கடலை, நிலக்கடலை, எள், கடுகு ஆகிய புரதப்பயிர்களின் உற்பத்தி வளர்ச்சிக்கு வழங்க வேண்டும்.எல்லோருக்கும் உணவு என்ற உணவுக்கு உத்தரவாதச் சட்டம் அரிசி, கோதுமை போன்ற மாவுப்பொருள்களில் மட்டும் அடக்கமாகாது. போஷாக்கு நிரம்பிய புரத உணவுக்கும் உத்தரவாதச் சட்டம் தேவை.

 

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *