மக்களை பாதிக்கும் மக்காச் சோள ஜவ்வரிசி

முன்பைவிட உணவு குறித்தான விழிப்பு உணர்வு ஓரளவு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு காரணம்,நம்மாழ்வார். ஆனால், மறுபக்கம் உணவில் ஏகமாக கலப்படம் நடப்பதும், உணவை வைத்து அரசியல் நடப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில்,”இப்போது ஜவ்வரிசி தயாரிப்பில் மக்காச்சோளத்தை பயன்படுத்துகிறார்கள். அதை அரசு கண்காணிக்க வேண்டும்” என்று புதுக் குண்டை தூக்கி போட்டிருக்கிறார் விவசாயி ‘கள்’ நல்லசாமி. ஒரு நிகழ்ச்சிகாக கரூர் வந்த அவரிடம் பேசினோம்.

“இப்போது இளைஞர்களிடம் உணவு குறித்த, உணவை வைத்து நடக்கும் அரசியல் குறித்த விழிப்புஉணர்வு வந்திருக்கிறது. நல்ல விசயம். இருந்தாலும், உணவு பங்கிடலும் கார்ப்பரேட் கைகளுக்குள் போய்விட்டதை அவர்களால் எப்படி தடுக்க முடியும் என்று தெரியவில்லை. அந்த வகையில், ஜவ்வரிசி தயாரிப்பில் மக்காச்சோளம் பயன்படுத்துவதில் ஏகப்பட்ட தீமைகள் இருக்கின்றன.

Courtesy: Pasumai Vikatan

ஜவ்வரிசியை முறைப்படி மரவள்ளிக் கிழங்கில் இருந்துதான் தயாரிக்க வேண்டும்.

ஆனால், மக்காச்சோளத்தில் தயாரிக்கிறார்கள். இது ஆபத்தானது.

போர்ச்சுக்கீசியர் காலத்தில் மரவள்ளிக்கிழங்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

மழைப் பற்றாக்குறை அதிகம் உள்ள மாநிலமான நம் தமிழ்நாட்டுக்கு இது ஏற்ற பயிர். குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிக மகசூலை தரவல்லது.

அதிக அளவில் உயிர் காற்றான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பயிரான இந்த மரவள்ளிக் கிழங்கை தமிழகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் அதிகம் விவசாயிகள் விளைவிக்கிறார்கள். அதோடு, மரவள்ளியைக் கொண்டு ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இந்த மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளன.

ஜவ்வரிசி கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிறமாக இருந்தால் மட்டுமே விற்பனைச் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். அப்படி வெள்ளை நிறத்தில் கிடைக்க ஏதுவாக துணிகளை வெளுக்க பயன்படுத்தும் சோடியம் ஹைப்போ குளோரைடு, கால்சியம் ஹைப்போ குளோரைடு போன்ற ரசாயனங்களை கலக்கிறார்கள். அது உடம்புக்கு அவ்வளவு கேடு. இப்படி அதிக அளவில் ரசாயனங்களை சேர்ப்பதால், ஜவ்வரிசியை மக்கள் பயன்படுத்துவது குறைந்து போயுள்ளது. அதேபோல், ஜவ்வரிசியை உணவு பாதுகாப்பு விதிப்படி மரவள்ளிக் கிழங்கில் இருந்துதான் தயாரிக்க வேண்டும். ஆனால்,முக்கால்வாசி இடங்களில் மக்காச்சோள மாவை கலப்படம் செய்து தயாரித்து, விற்பனை செய்யும் கொடும் போக்கு இருக்கிறது. ஏனென்றால், மரவள்ளிக் கிழங்கைவிட மக்காச்சோளத்தின் விலை குறைவு. அதனால், மக்காச்சோள மாவை கலப்படம் செய்து விற்பனை செய்கிறார்கள்.

இதனால்,மரவள்ளிக்கிழங்கை உற்பத்தி செய்யும் விவசாயிகளும்,நேர்மையான ஜவ்வரிசி உற்பத்தியாளர்களும், வாங்கும் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். இந்தக் கலப்படம் வட இந்திய நுகர்வோர்களுக்குத் தெரிய வந்தால், ஜவ்வரிசி நுகர்வு பெருமளவு குறையும். ஏனென்றால், தங்கள் அன்றாட உணவில் அவர்கள்தான் அதிக அளவில் ஜவ்வரிசியைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால், ஜவ்வரிசியில் நடக்கும் மக்காச்சோள மாவு கலப்படம் தெரிய வந்தால், அவர்களின் ஜவ்வரிசி பயன்பாடு வெகுவாக குறையும். அப்போது, ஜவ்வரிசி தொழில் நசியும். மரவள்ளிக் கிழங்கு விவசாயம் செய்து வரும் இந்த பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படும்.

நேர்மையாக ஜவ்வரிசி விற்பனை செய்யும் வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். ஜவ்வரிசியை பயன்படுத்தும் மக்களும் பாதிக்கப்படுவர். இதனால், இப்பிரச்னையில் அரசு தனி கவனம் செலுத்தி ஜவ்வரிசி தயாரிப்பில் மக்காச்சோளம் கலந்தால், உடனடியாக சேகோ ஆலை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் ஜவ்வரிசி தயாரிப்பும்,பயன்பாடும் அழிந்து போகும்” என்று எச்சரிக்கை மணி அடித்து முடித்தார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *