காஞ்சிபுரம் : கறவை மாடுகளின் பால் மட்டும் அல்லாது, அவற்றின் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி வருமானத்தை இரட்டிக்கும் வழிகளை, காரைக்காலில் உள்ள ஒரு கோசாலை, விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி வருகிறது.இதன் மூலம், அந்த பகுதியில் கால்நடை வளர்ப்பு அதிகரித்து வருவதாக, அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, கறவை மாடுகளில் பால் வற்றிய பின், அவை பொருளாதார ரீதியாக பயனளிப்பது இல்லை. இதனால், அவற்றிற்கு தீவனம் வைத்து பராமரிப்பது, வளர்ப்போருக்கு இயலாத ஒன்றாகிவிடுகிறது.
இதுவே, பால் வற்றிய மாடுகள், இறைச்சிக்கு விற்கப்படுவதற்கான முக்கிய காரணமாகிவிடுகிறது. இப்படி விற்பதன் மூலம், வளர்ப்போருக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்கிறார், காரைக்கால் அருகே கோசாலை நடத்தும், கணபதி சுப்பிரமணியம்.
இது குறித்து, அவர் கூறுகையில், “”பாலை மட்டுமே பிரதானமாக வைத்து மாடுகளை வளர்த்தால் அதில் பெரும் வருமானம் பார்க்க முடியாது. சாணம், ஆகியவற்றில் இருந்து பொருட்கள் தயாரித்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அதை சரியாக செய்தால், பாலில் இருந்து வரும் வருமானத்தைவிடவும் அதிகமாக இருக்கும்,” என்றார்.
வழிகாட்டும் கோசாலைஇத்தகய வருமானத்தை ஈட்ட, காரைக்கால் நகராட்சி அருகே இயங்கி வரும் கோசாலையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இங்கு, ஒரு ஏக்கர் பரப்பில், 50 மாடுகள் பராமரிக்கப் படுகின்றன. கறவை மாடுகளோடு, பால் வற்றிய மாடுகளும் பராமரிக்கப்படுகின்றன.
மாடு இல்லாதோர், அவற்றை வளர்க்க ஆசைப்பட்டால், கோசாலை நிர்வாகம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில், கறவை மாடுகள் தானமாக வழங்கப்படுகிறன.
அந்த மாடுகளை பராமரிக்கவும், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அதே போல், பால் வற்றிய மாடுகளை பெற்றுக்கொண்டு, அவற்றிற்கு பதில் கறவை மாடுகளை கோசலை நிர்வாகம் வழங்கி வருகிறது.
இதன் மூலம், காரைக்கால் பகுதியில் மாடு வளர்ப்போரின் எண்ணிக்கையும், அவர்களுடைய வருமானமும் கணிசமாக அதிகரித்து உள்ளது.
வைக்கோல் விலை விண்ணை தொடும் இந்த நேரத்தில், இந்த கோசாலையால் பால் வற்றிய மாடுகளை எப்படி பராமரிக்க முடிகிறது என்பது, குறித்து, கணபதி கூறுகையில், “”இங்கு கிடைக்கும் சாணத்தை விபூதியாகவும், மக்கிய எருவாகவும் மாற்றி வருகிறோம். பசுநீரை (கோமியம்) சேகரித்து, பஞ்சகவ்யமாக மாற்றி வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தை ஆர்வம் உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம். இதன் மூலம் அவர்கள் கணிசமான வருவாயை ஈட்டி வருகின்றனர்,” என்றார்.
பயனடைந்தோர் ஏராளம்
இந்த கோசாலையில் பயிற்சி பெற்று, தற்போது, விபூதி தயாரித்து வருபவர், கண்ணபிரான்.
அவர் கூறுகையில், “”நான் விபூதி தயாரிப்பில் பகுதி நேரமாக ஈடுபட்டு வருகிறேன். தற்போது, எங்கள் வீட்டில் இரண்டு கறவை மாடுகள், ஒரு காளை மாடு மற்றும் இரண்டு கன்றுகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 15 கிலோ வரை சாணம் கிடைக்கிறது. இதை சேகரித்து, விபூதி தயாரிக்கிறேன்,” என்றார்.
மேலும், “”இவ்வாறு, செய்வதன் மூலம் மாதத்திற்கு 3,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இதுவே முழுநேரமாக செய்தால் மாதம் 10,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம்,” என்றார்.
அதே போல், கோமியம், பஞ்சகவ்யம் ஆகிய மருந்து பொருட்களை தயாரித்து வரும், முத்துலட்சுமி கூறுகையில், “”எனது கணவர் கடந்த 2003ம் ஆண்டு இறந்து விட்டார். கைக்குழந்தையுடன் தவித்த நேரத்தில், கோமியம், பஞ்சகவ்யம் தயாரிக்க கற்றுக் கொண்டேன். இவை விவசாயத்தில் பயன்படுத்தப் படுகிறன. இதன் மூலம் தற்போது கணிசமான வருவாய் கிடைக்கிறது,” என்றார்.
ஹோம கட்டிகள் தயாரித்து வரும் ராஜேஸ்வரி கூறுகையில், “”எனக்கு கோசாலையில் இருந்து இரண்டு கறவை மாடுகள் வழங்கியுள்ளனர். தினமும் ஆறு லிட்டர் பால் கிடைக்கிறது. அதன் மூலம் 126 ரூபாய் கிடைக்கிறது. மா, அரசன், வேம்பு, தர்ப்பை, வெட்டிவேர், மரிக்கொழுந்து ஆகியவற்றை சாணத்தில் கலந்து ஹோம கட்டிகள் தயாரிக்கின்றேன். இதன் மூலம் தினமும் 60 ரூபாய் கிடைக்கிறது,” என்றார்.
அதே போல், “”பசுநீர் பிடித்து கொடுப்பதன் மூலம், ஒரு நாளைக்கு 50 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆக மொத்தம் ஒருநாளைக்கு 236 ரூபாய் வருவாய் கிடைக்கிறது. பால் வற்றிய நேரங்களில் நாள் ஒன்றிற்கு 110 ரூபாய் கிடைக்கிறது.,” என்றார்.
இவ்வாறு, பாலை மட்டும் நம்பி இந்த பகுதி மக்கள் காலநடை வளர்க்காததால் வருமானம் கணிசமாக அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதே போல், மாடுகளை வளர்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பயிற்சி விவரங்களுக்கு : சாணத்தில் வைத்து அட்டைப்பெட்டி, கொசுவர்த்தி, ஊதுவர்த்தி, விபூதி உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பிற்கான இலவச பயிற்சி குறித்து அறிய; வெங்கடராமன் -09443495950 என்ற, எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்