‘உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்பார்கள். ஆனால், இப்போது உழவர்கள் கணக்குப் பார்த்து விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
‘என்னுடைய வயலில் தண்ணீர்ப் பாய்ச்சி, வரப்பு வெட்டி, நாற்று நட்டு, களையெடுத்து, அறுவடை செய்யும்போது அதற்கு விலை நிர்ணயம் செய்ய இன்னொருவர் எதற்கு? அப்படி விலை நிர்ணயம் செய்யும்போது, விளைவித்த பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டாமா?’ என்பதுதான், இன்றைக்கு இருக்கும் விவசாயிகள் பலரின் கேள்வி.
இந்த விலை கிடைக்காததால்தான் தற்போது விவசாயிகள் கொஞ்சம் சிந்தித்து, உரிய விலை கிடைப்பது போன்ற பயிர்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் சந்துரு!
நெல் விதைத்து… கடன் அறுவடை!
கடந்த பத்தாண்டுகளாகத் தஞ்சைத் தரணியில், அதுவும் காவிரியின் தென்கரையில் நெல் சாகுபடி மேற்கொண்டால் விவசாயிகளுக்கு ‘கடன்தான் அறுவடையாகக் கிடைக்கும்’ என்பதை உணர்ந்து, அதற்கேற்றவாறு மாற்றுப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார் இவர்.
காவிரி ஆறு பாயும் கும்பகோணத்தில் ஆலையடி பகுதியில் 15 ஏக்கரில், தன் தந்தையைப் போலவே சில காலத்துக்கு முன்புவரை நெல் சாகுபடியைத்தான் மேற்கொண்டு வந்தார். ஆனால், நெல் சாகுபடிக்கு ஆட்கள் பற்றாக்குறை, அதிகரித்த இடுபொருள் செலவு, மகசூல் கிடைத்தும் உரிய விலை இல்லாதது போன்ற பிரச்சினைகளைச் சந்தித்த அவருடைய தந்தை, ‘இனி எக்காரணம் கொண்டும் நெல் பயிரிடாதே. அதற்குப் பதில் நீயே விலையை நிர்ணயம் செய்யும் பயிர்களையே பயிரிடு. அதில்தான் உன்னுடைய உழைப்புக்கான விலை கிடைக்கும்’ என்றாராம்.
அன்றிலிருந்து சந்துரு, நெல் சாகுபடியை முற்றிலும் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதிலாக வாழை, துளசி, கரும்பு, தீவனப்புல் ஆகியவற்றைப் பயிரிட்டு வருகிறார்.
பணம் காய்க்கும் வாழை
“வாழைதான் நான் பயிரிடும் முக்கியமான மாற்றுப் பயிர். வாழைப் பழமாகவும் இலையாகவும் விற்பனை செய்வதைவிட, விசேஷங்களுக்குத் தேவையான வாழை மரங்களாக (வாழைப்பூ, தாருடன் கூடிய மரம்) விற்கிறோம். கும்பகோணம் முழுவதும் எங்களது தோட்டத்திலிருந்துதான் அதிகம் போகிறது.
இரண்டு வாழை மரங்களைக் கேட்டால், நாங்கள் அவற்றை வண்டியில் எடுத்துச் சென்று அவர்கள் கூறும் இடத்தில் கட்டிக் கொடுத்துவிட்டு வந்துவிடுவோம். இதனால் எங்களது வாழை மரங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டு வருகிறது. சில முகூர்த்த நாட்களில் ஒரே நாளில் 30 மரங்கள்கூட நாங்கள் கட்டியுள்ளோம். வாழைப் பழமாக விற்பனை செய்வதைக் காட்டிலும், இதில் அதிக வருமானம் கிடைக்கிறது” என்றவர், அதிக அளவில் துளசிச் செடிகளையும் வளர்த்து வருகிறார்.
துளசிச் செடிகளுக்கு அதிகத் தண்ணீரும் பராமரிப்பும் தேவையில்லை. தினந்தோறும் கோயில்களுக்குத் தேவைப்படுவதால் எங்களது இடத்துக்கு வந்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.
ஆலைக்கு அல்ல, சாறுக்கு!
வாழைக்கு அடுத்து, கரும்பை அதிக அளவில் பயிர் செய்கிறார் சந்துரு. ஆனால் கரும்பை, சர்க்கரை ஆலைக்குக் கொடுப்பதில்லை. மாறாக, ஆண்டுதோறும் கரும்பு ஜூஸ் வியாபாரிகளுக்குத் தினமும் விற்பனை செய்து, தினமும் வருவாய் பார்த்து வருகிறார்.
“கரும்புக்கு ஏற்ற உரங்கள், தண்ணீர் ஆகியவற்றை விட்டு, தோகை உரித்து, பராமரித்து வந்தோமானால் அதிக அளவு சர்க்கரை, நீர் சத்து போன்றவை கிடைக்கும். இதனால் கும்பகோணம் பகுதியில் கரும்பு ஜூஸ் கடை நடத்தும் வியாபாரிகளும் வெல்லம் தயாரிப்போரும் வந்து தினமும் வாங்கிச் செல்கின்றனர்” என்பவர், விதைக் கரும்பு உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறார். அவற்றை, ஆலை நிர்வாகம் பரிந்துரை செய்யும் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.
இவை மட்டுமல்ல; கடந்த ஓராண்டாகத் தீவனப்புல்லையும் பயிரிட்டு வருகிறேன். கால்நடைகளுக்குத் தேவையான இந்தத் தீவனப்புல்லை அறுத்து, அதைக் கிலோ கணக்கில் எடைபோட்டு விற்பனை செய்து வருகிறோம் என்றவரின் பண்ணையில், 15 பேர் வேலை பார்க்கிறார்கள்.
“அவர்களுக்குத் தினமும் வேலை இருக்கும். அதேபோல் அவர்களின் வேலைக்கேற்ற ஊதியமும் கொடுப்பதால் எனக்கு நல்ல ஒத்துழைப்பைக் கொடுக்கிறார்கள். நான் இந்த அளவுக்கு மாற்றுப் பயிர் சாகுபடியைக் கையாள என்னுடைய தொழிலாளர்கள்தான் காரணம்” என்கிறார் சந்துரு!
ஏற்றம் தரட்டும் இந்த மாற்றம்!
விவசாயி சந்துரு தொடர்புக்கு: 8282825333
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்