மென்பொருள் வேலையை விட்டு, பால் வியாபாரம் செய்பவர்

படித்து முடித்ததும் ஐ.டி. கம்பெனியில் வேலை, ப்ராஜெக்ட்டுக்காக வெளிநாட்டு பயணம், பிறகு அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவது. பெரும்பாலான இளைஞர்களின் வழி இப்படி மாறிக்கொண்டிருக்க, மென்பொருள் நிறுவன வேலையை விட்டுவிட்டு, மாடுகளை வைத்து பால் கறந்துகொண்டிருக்கிறார் எம்.டெக். பட்டதாரி.

கரூர் ராயனூரை சேர்ந்தவர் ர.பிரபு (29). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு கோவையில் எம்.டெக் படித்தார். படிப்பு முடிந்ததும், கடந்த 2011-ம் ஆண்டு ரூ.8,000 சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சென்னை, பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில், அவரது சம்பளம் ரூ.72,000 ஆக உயர்ந்திருந்தது.

இந்த நிலையில், ஐ.டி. வேலையை விட்டுவிட்டு, கரூர் கோடங்கிபட்டி அருகே தந்தை நடத்திய ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையை கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கி நடத்தி வருகிறார். ஏன் இந்த முடிவு? அவரே பகிர்ந்துகொள்கிறார்..

கரூர் கோடங்கிபட்டி அருகே 43 ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது. காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த தந்தை, குதிரை வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர். அதனால், குதிரைகள், ஆடுகளை வளர்த்து வந்தார். 2012-ல் அவர் மறைந்த பிறகு, விடுமுறை நாட்களில் மட்டும் பண்ணைக்கு வருவேன். ஆனாலும், என்னால் பராமரிக்க முடியவில்லை. அதனால், கால்நடைகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டேன்.

நம் திறமை, உழைப்பை அடுத்தவர் முன்னேற்றத்துக்கு செலவிடுவதற்கு பதிலாக, நாமே முழுமையாக பயன்படுத்திக்கொண்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. நான் படித்து முடித்துவிட்டு, சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கு போவதாகக் கூறியபோது எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், எனது இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டேன். ஊர் திரும்பினேன்.

கடந்த ஆண்டில் ஒரே ஒரு மாட்டுடன் மீண்டும் மாட்டுப் பண்ணையைத் தொடங்கினேன். தற்போது சாகிவால், தார்பார்க்கர், காங்கேயம் ஆகிய நாட்டு மாடுகள், சிந்து, டென்மார்க் ஹால்ஸ்டெயின் என 20 மாடுகள் உள்ளன. இவற்றுடன் இன விருத்திக்காக 3 காளைகளும் வளர்கின்றன.

தற்போது லிட்டர் ரூ.72-க்கு நாட்டு மாடுகளின் பாலை கண்ணாடி பாட்டில்களில் 50 பேருக்கு விநியோகம் செய்கிறோம். பல்வேறு ரசாயன மாற்றங்கள் செய்யப்பட்ட பாக்கெட் பாலைவிட, இந்தப் பாலை பலரும் விரும்பி, நம்பிக்கையாடு வாங்கிச் செல்கின்றனர். முக்கியமாக, பலரும் குழந்தைகளுக்காகவே எங்களிடம் பால் வாங்குகின்றனர். மோர், தயிர், நெய் ஆகியவற்றையும் விற்பனை செய்கிறோம்.

பால் கறக்க மெஷின் பயன்படுத்தப்படுவது இல்லை. பணியாளர்களைக் கொண்டுதான் கறக்கிறோம். நேரம் கிடைக்கும்போது நானும் கறப்பேன். பி.இ. பட்டதாரியான உறவினர் இத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கிறார். 4 பேர் பணியாற்றுகின்றனர்.

மாடுகள் மட்டுமின்றி, குதிரை, ஆடு, நாட்டுக்கோழி, கட்டு சேவல் எனப்படும் சண்டை சேவல் ஆகியவையும் பண்ணையில் இருக்கின்றன. அப்பா ஆசையோடு வளர்த்த கருப்பு குதிரை உள்ளிட்ட 7 ராஜஸ்தான் மார்வாரி பெண் குதிரைகளும் பண்ணையில் உள்ளன. கருத்தரித்த குதிரைகளை பராமரித்து குட்டிகளை விற்பனை செய்கிறோம். மாட்டு சாணத்தை நிலத்துக்கு இயற்கை உரமாக பயன்படுத்திக் கொள்கிறோம். குதிரை சாணத்தை விற்கிறோம். ஆட்டு புழுக்கை கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. கால்நடைகளுக்கு தேவையான சோளத்தட்டைகளை பயிரிட்டுக் கொள்கிறோம்.

ஆடு, மாடுகளை கட்டிப்போட்டு வைத்திருக்காமல் இயற்கையான முறையில் மேயவிடுகிறோம். மேய்ச்சலுக்காக ஏற்கெனவே உள்ள நிலத்துடன் 112 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்றுள்ளோம்.

கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டில் 40 சதவீத கால்நடைகள் அழிந்துவிட்டன. நாட்டின் பாரம்பரியமான கால்நடை இனங்களை அழிந்துவிடாமல் காப்பது நம் கடமை என்கிறார் பிரபு அக்கறையுடன்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *