இன்று நிலவும் வெப்பமான சூழல் பயிரில் பலவித சேதங்களை ஏற்படுத்தும். குறிப்பாக பூக்கள் மலட்டுத்தன்மையாகி விடுவதும், வறண்ட காற்றால் இலைகள் காய்ந்து விடுவதால் உடனடி நிவாரணம் எதுவும் செய்து பயிரைக்காப்பது அரிது.
வறட்சி தாங்க உதவும் பலவித உத்திகள் இருந்தும், வந்த பின் காத்திட அவை உதவுவதில்லை என்பதே உண்மை.
தானிய பயிர்களில் வறட்சியை தாங்கும் தன்மையை விதை கடினப்படுத்துதல், விதை முலாம் பூசுதல், முளை கட்டிய விதை பயன்பாடு, உயிர் உரங்கள் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் அடி உரமாக பொட்டாஷ் இடுதல், ஆழக்கால், அகலக்கால் பாத்தி அமைந்து சாகுபடி, இரட்டை வரிசை சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி, பல் பயிர் சாகுபடி என பல உத்திகள் உள்ளன.
அடி உரமாக அதிக அளவு வறட்சி தாங்கிய, நன்கு மட்கிய தொழு உரம் இடுவதும், ஊட்டமேற்றிய தொழு உரம் பயன்படுத்துவதும் நல்லது. காய்கறி பயிர்களில் வறட்சி தாங்கிட பொட்டாஷ் உரம் இடுதல் உதவும்.
வேர் வளர்ச்சி அதிகரித்திட அகோஸ் பைரில்லம் பயன்படுத்துவது அவசியம். இதனை திரவ வடிவிலும் வாங்கலாம். உயிர்ச்சத்து பெருகிட ‘ஹியுமிக் ஆசிட்’ ஒரு ஏக்கருக்கு 500 மில்லி பயன் படுத்தலாம்.
மண்புழு உரம் இடுதல் மற்றும் பஞ்சகவ்யா இடுதல் மிக சிறந்த முறையில் அனைத்து பயிரையும் காக்க உதவும். இதில் மண்புழு உரம் இடும்போது அரை அடி ஆழம் குழிதோண்டி உரத்தை இட்டு மூடினால் நல்ல பயன் பெறலாம்.
வாய்ப்புள்ள இடங்களில் காற்றை குறைத்திட தடுப்பான்கள், செயற்கையாக பசுமை வலைகள், நைலான் வலைகள் பொருத்துதல் நல்லது.
உயரமாக வளரும் சில்வர் ஓக், இளவம்பஞ்சு, முள் இல்லா மூங்கில், சீத்தா, நாவல் மற்றும் கொடுக்காப்புளி கன்றுகள் முதலியன நடுவதற்கு திட்டம் தீட்டி குழிகள் தோண்டி வைத்து மழை வரும்போது நடவு செய்யலாம்.
நிலப்போர்வை உத்தி மற்றும் நிறைய பயிர் கழிவுகளை மேற்பரப்பில் பரப்பியும் வறட்சியை சமாளிக்கலாம்.
– பா.இளங்கோவன்,
தோட்டக்கலை உதவி இயக்குனர்,
உடுமலைப்பேட்டை,
அலைபேசி: 09842007125
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்