வளர்ச்சி எப்படி இருக்க வேண்டும்? எம்.எஸ். சுவாமிநாதன் பதில்

உணவுப் பங்கீட்டு மானியம் குறைப்பு, விளைநிலங்களில் எரிபொருள் எடுப்பது என்று வேளாண்துறை பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்து வரும் இவ்வேளையில், சென்னை ஐ.ஐ.டி-யில் நாட்டு நலப்பணித் திட்டத்துக்காகச் சிறப்புரை ஆற்ற வந்தார் பசுமைப் புரட்சியின் தந்தை  என்று அழைக்கப்படும் பிதாமகர் 90 வயது தாண்டியும் பொது  நல சேவை செய்து வரும் எம்.எஸ். சுவாமிநாதன்.

அவரது பேச்சின் தொகுப்பு:

“இந்தியாவில் நாற்பது சதவிகித கர்ப்பிணிப் பெண்கள் சராசரி உடல் எடைக்குக் கீழே உள்ளார்கள். நாற்பத்து எட்டு சதவிகித கர்ப்பிணிப் பெண்கள் ரத்தசோகை நோய் உள்ளவர்களாக உள்ளார்கள். ஐந்து வயதுக்குட்பட்ட 39 சதவிகிதக் குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டுடன் இருக்கிறார்கள். ஒருபுறம் ஊட்டச்சத்துக் குறைபாடு இப்படி இருக்க, மற்றொருபுறம் நிறைய உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன.

முதலில் நம்முடைய உணவுக் கட்டுமானத்தின் வடிவமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். நம்முடைய நாட்டின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். நாட்டின் கலோரிக் குறைபாட்டினை எளிதாக நம்மால் போக்க இயலும். அரிசி மற்றும் கோதுமை, நமக்குத் தேவையான அளவு கிடைக்கின்றது. ஆனால், புரதத்தின் அளவிலும், நுண்ணூட்டத்தின் அளவிலும் நாம் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற அரசின் கொள்கைகளால் இதற்குத் தீர்வு காணமுடியும்.

உதாரணத்துக்கு, ஒரு ஹெக்டருக்கு உணவுத் தயாரிப்பை நான்கு டன்களில் இருந்து ஐந்து டன்கள் வரை உயர்த்தவும், தற்போது இருக்கும் உணவுத் தயாரிப்பை முந்நூறு சதவிகிதத்தில் இருந்து நானூறு சதவிகிதம்வரை அதிகரிக்க முடியும்.

உணவுப் பாதுகாப்பில் ஒரு முழுமையான சுழற்சி முறையைக் கடைபிடித்தால் நிச்சயமாக ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து நம் நாட்டை மீட்க முடியும். உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (World Intellectual Property Organization) போன்றவற்றில் நம்முடைய பாரம்பர்யப் பயிர்களுக்கான காப்புரிமையை நாம் பதிவுசெய்ய வேண்டும்.

பயிர் உற்பத்தியை அதிகரிப்பது என்பது எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு அவசியமானது, ஒவ்வொரு பயிரிலும் உள்ள ஊட்டத்தின் தரத்தை அதிகரிப்பதும், நிலத்தின் தரத்தை அதிகரிப்பதும், அதன் மூலமாகப் பயிரின் தரத்தை அதிகரிப்பதும் ஆகும்.

புதிய வேளாண்மை முறைக்கு மாறுங்கள்! 

இயற்கை விவசாயம் என்பதற்கு இன்று கிடைத்துள்ள எதிர்வினையைப் போலவே, சதுப்பு நிலத்தில் செய்யப்படும் வேளாண்மைக்கும், கடல் நீரில் செய்யப்படும் வேளாண்மைக்கும் கிடைக்க வேண்டும்.

விளைநிலங்களின் பரப்பளவு குறைந்துவரும் இந்தச் சூழ்நிலையில், மாற்றுவழி வேளாண்மையை நாம் கைக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.

உணவுப் பங்கீட்டுக்கு அளிக்கப்படும் மானியம் குறைக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் சமநிலையைக் கொண்டுவருவதற்கான ஒரு கருவியே மானியம். மக்களின் வரிப்பணத்தில் இருந்தே மானியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, யாருக்கு மானியத்தின் தேவை இருக்கின்றதோ, எப்படிச் செய்தால் சமுதாயத்தில் சமநிலை காக்கப்படுமோ அதற்கேற்ப மானியம் வழங்கப்பட வேண்டும். ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் மானியங்கள் மாற்றி அமைக்கப்படுவதும், அதற்கான கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுவதும் அவசியமான ஒன்றாகும்.

விளைநிலங்கள் குறைந்து வரும் இவ்வேளையில் மாற்றுவழி விவசாயத்தை அதிகப்படுத்த வேண்டும். அதேநேரத்தில், விளைநிலங்களில் இருந்து எரிபொருள் எடுப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நம் நாட்டுக்கு ஆற்றல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும் ஆகும். மக்களும், சுற்றுச்சூழலும் பாதிக்காத வகையில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். அதற்கானத் தொழில்நுட்பமும், கொள்கைகளும் கொண்டு வரப்படவேண்டும்” என்றார்.

நன்றி:பசுமை விகடன் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *