கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின் காரணமாக தமிழக விவசாயிகள் அதிகளவு பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கடலோரப் பகுதி தமிழகத்திலும், காவிரி பாசனப் பகுதிகளிலும் வெள்ளத்தினால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.
இதே சூழலில் வங்கதேசத்தில் அடிக்கடி ஏற்படும் கனமழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் இருந்து பயிர்கள் பாதுகாக்க அங்குள்ள விவசாயிகள் புதிய முறையான மிதவை விவசாயத்தை மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
- வங்கதேசத்தில் உள்ள பாசுதேவ்பூர் கிராமத்தில் அதிகளவு வேளாண் தொழிலாளர்கள் மிதவை வேளாண் சாகுபடிப் பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு தங்களது உணவு தேவை மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்து வருகின்றனர்.
- மிதவை விவசாயம் செய்ய தேவையான மிதவை படுக்கைகள் விவசாயிகளிடம் உள்ள வேளாண் இடுபொருள்களை கொண்டே தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தயாரிக்கும் முறை:
- முதலில் மூங்கில்களை நன்றாக சீவி ஒரு படுக்கை போல் தயார் செய்யப்படுகிறது.
- பின்னர் வைக்கோல் அல்லது ஆகாயத்தாமரை கழிவுகளின் மேல் போட்டு ஒரு படுக்கை போன்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது.
- இப்படுக்கையின் அளவு தண்ணீரில் கிடக்கும் காலத்தை ஒட்டியே அமைக்கப்படுகிறது.
- சுமார் 20 முதல் 30 நாள்களில் தயார் செய்யப்படும் படுக்கையின் மேல் பயிர் சாகுபடிப் பணிகள் தொடங்கப்படுகிறது, விவசாயிகள் விதைகளை தூவியும், நாற்றங்கால் நடவு செய்யும் முறையை தங்களின் தேவைக்கேற்ப பின்பற்றுகின்றனர்.
- இவ்வாறு மிதவை வேளாண்மையில் 20 வகை காய்கறிகள் வரை சாகுபடி செய்யலாம்.
- வெண்டை, தக்காளி, கத்திரி, புடலை வகை காய்கறிகள், கொத்தமல்லி, பூசணிக்காய், முள்ளங்கி போன்றவற்றை எளிதாக சாகுபடி செய்யலாம்.
- இதுதவிர நிலத்துக்கு உள்ளே விளையும் இஞ்சி, உருளை, மற்றும் மஞ்சள் சாகுபடியையும் மிதவை வேளாண் வாயிலாக மேற்கொள்ள முடியும்.
- இவ்வாறு மிதவை படுக்கைகள் மூலம் விவசாயம் செய்யும் போது ரசாயான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது கிடையாது.
- குறிப்பாக 1988 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் வங்க தேசத்தை பெரும் அளவில் இயற்கை சீற்றங்கள் தாக்கியபோது மிதவை விவசாய படுக்கைகள் மேல் கூடாரம் அமைத்து இரண்டு மாதங்கள் வரை தங்கி தங்களது பொருள்களையும், கால்நடைகளையும் இவர்கள் பாதுகாத்துள்ளனர்
சவால்கள்:
- மிதவை படுக்கைகள் தயார் செய்ய நீண்ட அளவு கொண்ட வைக்கோல்கள் தேவை. தற்போது குறுகிய கால குட்டை ரகங்களே அதிகளவு சாகுபடி செய்யப்படுவதால் மிதவை படுக்கைகள் தயார் செய்வது எளிதல்ல.
- ஆகாயத்தாமரை கொண்டு தயார் செய்யப்படும் சூழலில் கடல் தண்ணீர் வெள்ளத்துடன் கலக்கும் போது அவற்றின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும்.
- எனவே நீண்ட வைக்கோல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் வாயிலாகவே மிதவைப் படுக்கைகள் மற்றும் மிதவை விவசாய பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றார் ராஜ்பிரவீன்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்