விஜய் மல்லையாவும் முருகையன் தாத்தாவும் !


உங்களுக்கு முருகையன் தாத்தாவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பக்கம் அவர் ஊர்.  ஒரு வேலி நிலம் வைத்திருந்தார். ஹோ… உங்களுக்கு வேலி கணக்கு தெரியாது அல்லவா, 6.17 ஏக்கர் நிலம். ஆம். வைத்திருந்தார்தான். அது இறந்த காலம் ஆகி இரண்டு தசாப்தம் ஆகிறது.

முருகையன் தாத்தாவை நான் சந்தித்தது, தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே. 2007-ம் ஆண்டு ஒரு நள்ளிரவு நேரத்தில், சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது, தூரத்தில் ஒரு உருவம் சரிந்து விழுந்தது… பெரும்பாலும் குடித்துவிட்டு விழுவார்கள் என்பதால், வழக்கமாக, இரவு நேரங்களில் இது போன்ற காட்சிகளில் கவனத்தை செலுத்தாமல், வண்டியை வேகமாக செலுத்தி வீட்டிற்கு சென்று விடுவேன். அன்று ஏதோ ஒரு உள்ளுணர்வு சொன்னதால் வண்டியை நிறுத்தி, நானும், நண்பன் முகிலனும் சரிந்து விழுந்த உள்ளீடற்ற ஓடாய் இருக்கும் அந்த தக்கையான உருவத்தை, பூங்கா வாசலில் ஓரமாக கிடத்தினோம். முகிலன், தண்ணீர் வாங்க பேருந்து நிலையத்திற்கு ஓட, நான் ஒரு பதற்றத்துடன் அவர் அருகே நின்றேன். உலர்ந்த உதடுகளும், ஒளி இழந்த சுருங்கிய விழிகளும் என் மனதை பிசைந்தது. முகிலன் வேகமாக தண்ணீர் போத்தலுடன் வந்தான். அவர் வாயில் தண்ணீரை மெதுவாக ஊற்றினோம், மெல்ல அவர் உதடுகள் அசைந்தது. அவர் பிழைத்துவிட்டார், இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திவிட்டு வீட்டிற்கு சென்றோம். போகும்போது, “நாளை காலையில் அவரை மீண்டும் வந்து பார்க்க வேண்டும்” என்றான் முகிலன். சுவாரஸ்யமற்று தலையசைத்தேன்.

இருவரும் அந்த விஷயத்தை மறந்து விட்டோம். இரண்டு நாட்கள் சென்றது. மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்த முகிலன், அவரை ஞாபகப்படுத்தினான். “மச்சி… போய் அவரை பார்க்கலாமா…?”

“டேய்… என்னடா சொல்ற… அன்னைக்கு அங்க கிடந்தாரு… இப்ப அங்க இருப்பாருன்னு என்னடா உறுதி..? சரி… உனக்கு ஏன் அவ்வளவு அக்கறை…?” என்றேன்.

“இல்லடா… அவரும் எங்க ஊருதான்… நிறைய நிலம் வச்சுருந்தாரு…பாதியை வங்கி ஏலம் விட்டுச்சு.. மிச்ச பாதியை அவரே வித்துட்டாரு… ரொம்ப நாளா அவரை பார்க்க முடியல… திடீர்னு, அன்னைக்கு அவரை பார்த்தது ஒரு மாதிரி ஆயிடுச்சுடா… அதான்”

குறும்படத்திற்காக வெறி கொண்டு கதை தேடிக்கொண்டிருந்த எனக்கு, அவன் சொன்ன விஷயம் சுவாரஸ்யமாக இருந்தது. அவரை பார்க்க சென்றோம்.

நாங்கள் எந்த இடத்தில் அவரை கிடத்தி விட்டு வந்தோமோ, அதே இடத்தில் படுத்து இருந்தார். உயிர் மட்டும் மிச்சம் இருந்தது. முகிலனை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. உணவு வாங்கி கொடுத்தோம். அவர் உண்ண மறுத்தார். தோல்வி அடைந்த மனிதனுக்கு முன், முகிலனும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள தயாராக இல்லை. அது அவரை இன்னும் அவமானத்தில் அழுத்தும் என்று எண்ணினான். நீண்ட வற்புறுத்தலுக்கு பின், உணவருந்தினார்.

மெல்ல… மெல்ல… எங்களுடன் பேச துவங்கினார்… அவமானங்கள் நிறைந்த அவரின் கதையை அவர் அனுமதி இல்லாமல் பகிரப் போகிறேன். முருகையன் தாத்தா என்னை மன்னிப்பீராக…!

முருகையன் தாத்தாவும், அந்த நீண்ட இரவும்…


நஞ்சையும், புஞ்சையும் கலந்த ஒரு வேலி நிலம் முருகையன் தாத்தாவுக்கு. மாப்பிள்ளை சம்பா உடலிற்கு நல்லது, சர்க்கரை நோயை போக்கும் மருத்துவ குணநலன்கள் கொண்டது என்று எதுவும் அவருக்கு தெரியாது. ஆனால் பல ஆண்டுகளாக, அவர்கள் நிலத்தில் ஆளுயரம் வளரும் மாப்பிள்ளை சம்பா நெல்லையே விதைத்து வந்திருக்கிறார். சோளம், கடலை, சிகப்பரிசி என்று புஞ்சை நிலத்திலும் வருடம் முழுவதும் விவசாயம் செய்திருக்கிறார். அவருடைய ஒரு மகன் விவசாயத்தில் நாட்டம் இல்லாமல் நகரம் செல்ல, அவருடைய இன்னொரு மகன் ராமநாதன், இவருக்கு உதவியாக விவசாயத்தில் இருந்திருக்கிறான். ராமநாதனின் தலையீட்டால், விவசாயத்தில் இவருக்கிருந்த முக்கியத்துவம் குறைந்தது. எந்த நெல் வகை நட வேண்டும், எந்த பூச்சி மருந்து அடிக்க வேண்டும் என்று எல்லாம் ராமநாதன் எடுக்கும் முடிவுதான். எல்லாம் நன்றாகவே சென்றிருக்கிறது, அந்த டிராக்டர் வாங்கும் வரை. ஆம். கடனிலும், மானியத்திலும் அந்த டிராக்டர் வாங்கும் வரை எல்லாம் நன்றாகவே இருந்தது. அந்த டிராக்டர் நிறுவனத்தின் பிரதிநிதியும், வங்கியும் கொடுத்த நம்பிக்கையில் , முருகையனின் பேசையும் கேளாமல் ராமநாதன் டிராக்டர் வாங்கினான். ஐந்து ஆண்டுகளில் கடன் தவணையை அடைக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை ஒழுங்காக அடைத்தான். பின் மழை பொய்த்தது, காவிரியிலும் சிக்கல். அதிகம் ரசாயனமும், பூச்சி மருந்தும் தேவைப்பட்டது.

ஒரு நாள் வங்கி அதிகாரிகள் அவன் வீட்டிற்கே வந்து விட்டார்கள். “ஒரு வாரத்தில் தவணையை செலுத்து, அல்லது டிராக்டரை ஜப்தி செய்து விடுவோம்” என்றார்கள். ஜப்தி அவமானத்தில் இருந்து தப்பிக்க, வெளியில் கடன் வாங்கினான். வங்கியில் செலுத்தினான்.இப்போது வெளிக்கடனை அடைக்க, வங்கியில் நிலத்தை அடமானம் வைத்தான்.

“கடன், வட்டி, நகை, அடமானம்…” என்று நாட்கள் சுழன்றது. டிராக்டர் அவனின் அவமானச் சின்னமானது. மீண்டும் ஒரு நாள் வீட்டிற்கு வந்த வங்கி அதிகாரிகள், அவன் கடன் தவணையை ஒழுங்காக செலுத்தவில்லை என்று டிராக்டரை ஜப்தி செய்தார்கள். கொஞ்சம் நாளில், அவன் நிலமும் ஏலத்திற்கு வந்தது.

அவமானம் நெஞ்சை அடைக்க, ராமநாதன் ஒரு நாள் இரவு தூக்கில் தொங்கினான். தீவிர வயிற்று வலியால், அவன் தற்கொலை செய்து கொண்டதாக, காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இருந்த மிச்ச நிலத்தையும் அவரது மூத்த மகன் விற்று பணத்தை எடுத்து சென்றுவிட்டான். இவை அனைத்திற்கும் மெளன சாட்சியாக இருந்த முருகையன்,  சொந்த ஊர் மக்களின் அவமான பார்வையிலிருந்து தப்பிக்க ஊரை விட்டு சென்று விட்டார். பல இடங்களில் விவசாயக் கூலியாக இருந்து, பின்பு சாலை போடும் தொழிலாளியாக உழைத்து, உடல் வலுவையெல்லாம் இழந்த, ஒரு நள்ளிரவில்தான் அவர் சரிந்து விழுந்தார்.

உரையாடல் முடிந்தபோது, நள்ளிரவு 2 மணி. நாங்கள் விடைப்பெற ஆயத்தமானோம்.

அப்போது அவர் முகிலனிடம், “தம்பி…. உங்கப்பா பூபதி நல்லா இருக்காரா… கடன் வாங்காம விவசாயம் பண்ணச் சொல்லு…” என்றார்.

முகிலனுக்கும் பகீரென்று இருந்தது. நாங்கள் இருவரும் மெளனமாக அங்கிருந்து கிளம்பினோம். கொஞ்ச நாட்களில் முருகையன் தாத்தாவும் இறந்துவிட்டார்.

இது ஒரு முருகையன் தாத்தாவின் கதை அல்ல. நீங்கள் நகரத்தில் பார்க்கும் குப்பை பொறுக்கும், பிளாட்பாரத்தில் வசிக்கும், ஹோட்டலில் தட்டு கழுவும் போன்ற எல்லோர் பின்னாலும் இது போல் ஒரு கதை இருக்கிறது.

வயிற்று வலியால், ஆண்மை இல்லாததால், காதல் தோல்வியால் தற்கொலை என போடப்படும் ஒவ்வொரு FIRக்கு பின்னாலும் இதுபோல் ஒரு கதை இருக்கிறது. ஆனால், நமக்கு இது குறித்த எந்த கவலையும் இல்லை.

முருகையன் தாத்தாவும், மல்லையாவும்:

நான் படித்த பள்ளியில் உள்ள வீதிதான், தஞ்சையில் முக்கியமான நகைக்கடைகள் இருக்கும் வீதி. என் பள்ளி நாட்களின் தொடக்கக் காலத்தில், விவசாயிகள் அறுவடை முடிந்து கூட்டம், கூட்டமாக நகை வாங்குவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் மேல்நிலைப்பள்ளியை முடிக்கும் போது, அதே விவசாயக் கூட்டம், நகைகளை அடகு வைப்பதற்கும் சாட்சியாக இருந்திருக்கிறேன். அந்த விவசாயக்கூட்டத்துடன் உரையாடிய போது, வாங்குவதற்கு, அடகு வைப்பதற்கும் இடைப்பட்ட அந்த இடைவெளியில் என்ன நடந்தது என்று தெரியும். வாய்ப்பிருந்தால், ஒரு முறை நீங்கள் ஒரு விவசாயியிடம் உரையாடி பாருங்கள். நடவிற்கு, கூலிக்கு, உரத்திற்கு, பூச்சி மருந்துக்கென அவர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள். அதற்கான முதலீட்டிற்கு அவர்கள் வங்கிகளை அணுகும்போது, அவர்கள் எவ்வளவு அவமானப்படுத்துகிறார்கள் என்று தெரியும்…

ஒவ்வொரு முறையும், விவசாயிகள் வரவு – செலவு கணக்கு போடும்போது, தங்கள் உழைப்பை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை… உரம், பூச்சி மருந்து, விதை, கூலி என்று கணக்கிடுபவர்களின் பட்டியலில், அவர்கள் உழைப்பிற்கான கூலி இருக்காது. ஆனால், அப்போது நஷ்ட கணக்கைதான் எழுதுவார்கள்.

“விவசாயத்துலதான் பிரச்னைன்னு தெரியுதுல, ஏன் இன்னும் அதுல கஷ்டப்படணும் வித்துட்டு நகரத்துக்கு வர வேண்டியதுதானே…?” என்கிறீர்களா… கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 2 லட்சம் விவசாயிகள், தங்கள் நிலத்தை விட்டு நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களில், பெரும்பாலானோர், தினக்கூலிகளாக எந்த அடிப்படை வசதியும் இல்லாமல், பிளாட்பாரங்களில் வசிக்கிறார்கள்.
வங்கிக் கடன் தவணையை கட்டத் தவறிய, சோழகன் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன், நிச்சயம் வங்கியை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், வங்கியில் கடன் வாங்கி இருக்க மாட்டார். ஆனால், துரதிஷ்டவசமாக கடனை திரும்ப செலுத்த முடியாமல் தடுமாறும் போது, காவல் துறையை ஏவி தாக்கும் வங்கிகள், அதுபோல் என்றாவது மல்லையாக்களிடம் நடந்து இருக்கிறதா…? ராமனாதனிடம் கராறாக கடன் வசூலித்து, அவர் மரணத்திற்கு காரணமான நிறுவனங்கள், இந்த கடுமையை என்றாவது மல்லையாவிடம் காண்பித்து இருக்கிறதா…?

 

 

 

 

 

 

மல்லையா அவமானப்பட வேண்டும் என்பதோ, அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதோ நம் நோக்கமல்ல… ஆனால், எப்படி ஒரு ஏழை விவசாயி, உரம் வாங்க திணறும்போது, இந்த தேசத்தில் மல்லையாவால், ஒரு தீவில் உல்லாசமாக காலண்டர் தயாரிப்பில் ஈடுபட முடிகிறது…?

மல்லையாவின் கடன்கள் - கோடிகளில் Courtesy: Vikatan
மல்லையாவின் கடன்கள் – கோடிகளில் Courtesy: Vikatan

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எப்படி கடன் பெற்று வாங்கிய பூச்சி மருந்தை குடித்து, கடனை செலுத்த முடியாத அவமானத்தில் ஒரு விவசாயி தற்கொலை கொள்ளும்போது, மலையாவால், நான் அம்பானியை விட குறைவாகத்தான் கடன் பெற்று இருக்கிறேன் என்று கூற முடிகிறது…?
நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *