விவசாயிகள் தற்கொலையை அரசியலாக்கும் கட்சிகள்

டில்லியில் ஆம்ஆத்மி நடத்திய பேரணியின் போது விவசாயி கஜேந்திர சிங் என்பவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாட்டில் தொடர் கதையாகி வரும் விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வை காணும் முயற்சியில் இறங்காமல், அரசியல் தலைவர்கள் விவசாயி தற்கொலையை வைத்து அரசியல் நாடகத்தை மட்டுமே அரங்கேற்றி வருகின்றனர்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

மீடியாக்கள் முன்னிலையில், டிவி.,க்களில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு அரசியல் பொதுக் கூட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் அந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த விவசாயியின் பெயரும் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால், உண்மையில் பெயர் தெரியாத லட்சக்கணக்கான விவசாயிகள் பல ஆண்டுகளாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்வது விவசாயமும், விவசாயிகளும் என இந்தியர்கள் பெருமை பேசி கொண்டுள்ளனர். அத்தகைய விவசாய நாட்டில் விவசாயி ஒருவர் பலரது முன்னிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளது உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப் பெரிய அவமானத்தை தேடி தந்துள்ளது.

மூன்று குழந்தைகளுக்கு தந்தையான கஜேந்திர சிங் நேற்று தற்கொலை செய்து கொண்ட சமயத்தில் ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசையும், டில்லி போலீசாரையும் தாக்கி பேசிக் கொண்டிருந்தார். விவசாயிகளின் இந்த நிலைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், அவர்கள் கொண்டு வர நினைக்கும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவும் தான் காரணம் என கூறினார். அந்த விவசாயி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ஆம்ஆத்மி அந்த விவசாயியின் உயிரை காக்க தவறி விட்டது என குறை கூறினார்.

நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரசின் பிரதிநிதியாக மருத்துவமனைக்கு விரைந்த காங்., துணைத் தலைவர் ராகுலும், மத்திய அரசை குறை கூறிவிட்டு சென்றார். அந்த கட்சியைச் சேர்ந்த சச்சின் பைலட்டும் அதையே செய்தார். ஆனால் 2012ம் ஆண்டு மத்தியில் காங்., ஆட்சி செய்த போது, மகாராஷ்டிராவில் கஜேந்திரா என்ற விவசாயி, விவசாயிகளை வஞ்சிக்க்கும் காங்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு யாரும் ஓட்டளிக்காதீர்கள் என கிராமத்தாரை கேட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதை அவர் மறந்து விட்டார்.

தற்போது அரசியல் ஆதாயத்திற்காக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்ளும் இவர்கள், அடுத்தபடியாக ஓட்டு வங்கிக்காக தங்கள் கட்சி தான் விவசாயிகளின் பாதுகாவலர்கள் எனக் காட்டிக் கொள்ள உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதாக அடுத்த நாட்களுக்கு செய்திகளில் வருவார்கள். இந்த விவகாரத்தை பார்லி., அவையிலும் கிளப்பி ஒருவரை ஒருவரை தாக்கி பேசுவார்கள். பா.ஜ., காங்கிரஸ், ஆம்ஆத்மி என அனைவரும் விவசாயியின் தற்கொலையை அரசியல் ஆக்கி பார்க்கிறார்களே தவிர, இனியும் இது போன்ற விவசாயிகள் தற்கொலை தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என எந்த கட்சியோ, அரசியல் தலைவரோ இதுவரை பேசாதது விவசாயிகளை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. விவசாயிகள் நலன் பற்றி குரல் கொடுப்பது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *