விவசாயிகள் விஞ்ஞானிகளாக மாறுவது அவசியம்: எம்.எஸ். சுவாமிநாதன்

ஒவ்வொரு விவசாயியும் விஞ்ஞானியாக மாற வேண்டும் என்றார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேயுள்ள பசுபதி கோவில் கிராமத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பண்ணைப் பள்ளித் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:

பருவ மழை குறைவு, காவிரி நீர் பிரச்னை போன்றவற்றால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் விவசாயிகள் தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்தப் பண்ணைப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் இல்லாதபோது என்னென்ன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கலாம் குறைந்த அளவில் கிடைக்கும் தண்ணீரை எப்படி பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்வது நில வளத்தை மேம்படுத்தும் முறை, அதற்காக என்ன செய்வது உள்ளிட்டவை தொடர்பாக விவசாயிகள் கருத்துப் பரிமாறிக் கொள்ள இந்தப் பள்ளி உதவியாக இருக்கும்.

இதன் மூலம், விவசாயி கடந்த காலத்தில் தண்ணீர் இல்லாதபோது வெற்றிகரமாகச் சாகுபடி மேற்கொண்டதை மற்ற விவசாயிகளுக்குத் தெரிவிக்க வாய்ப்பாக இருக்கும்.

இதுபோல ஒரு விவசாயி மற்ற விவசாயியிடம் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது தொழில்நுட்பத் தகவல் விரைவாகவும், எளிதாகவும் சென்றடையும்.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது சொட்டு நீர் பாசனம் செய்யும் முறையைப் பின்பற்ற வேண்டும். ஒரு சொட்டுத் தண்ணீரில் அதிக அளவில் மகசூல் பெறலாம்.

இப்போது கிராமவாசிகள் அனுபவ ரீதியான கல்வியாளர்களாக இருக்கின்றனர்.

விவசாயிகள் களத்தில் இறங்கி வேலை செய்வதால், ஆய்வகத்தில் பணியாற்றுபவர்களைவிட அவர்களுக்கு அனுபவம் அதிகமாக இருக்கிறது. மேலும், ஒவ்வொரு விவசாயியும் விஞ்ஞானியாக மாற வேண்டும்.

விவசாயிகள், விஞ்ஞானிகள், வங்கியாளர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் ஆகிய 5 பேரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நாடு முன்னேற்றமடையும்.

80 சதவீத விவசாயிகள் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயத்தில் கிடைக்கக்கூடிய வருவாய் மூலம்தான் விவசாயிகள் தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைப்பது உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்கின்றனர். எனவே, விவசாயிகளின் கஷ்டத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தில் அரிசி, கோதுமையைப் போல கம்பு, கேழ்வரகு, சாமை, திணை போன்ற சிறு தானியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

எனவே, இதுபோன்ற சிறு தானியங்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும் என்றார் சுவாமிநாதன்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *