விவசாய மசோதாக்கள் சாதக, பாதகங்களை விளக்கும் விவசாயிகள்

விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதா, விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா, அத்தியாவசிய பொருள் திருத்தசட்ட மசோதா… இந்த மூன்று மசோதாக்களும் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டன.

ராஜ்யசபாவில் அத்தியாவசிய பொருள் திருத்தசட்ட மசோதா தவிர மற்ற இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று மசோதாக்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம், நஷ்டம் குறித்து விவசாய சங்கத்தினரிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது:

விற்பனைக்கு தடையில்லை;விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

பெருமாள், தேசிய செயலாளர், பாரதிய கிசான் சங்கம், மதுரை:

விவசாய விளைபொருள் வர்த்தக மேம்பாட்டு மசோதா பற்றி முதலில் சொல்ல வேண்டும். ஏற்கனவே இருந்த சட்டத்தில் ஒரு மாநிலத்தில் விளையும் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது பிற மாநிலத்திற்கு அனுப்ப தடை இருந்தது.

உதாரணமாக மதுரையில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு இருக்கும் போது இங்கிருந்து பிறமாநிலங்களுக்கு விவசாயிகள்அனுப்ப முடியாது. அதற்கு மாநில அரசு அனுமதி தராது. புதிய மசோதாவில் அந்த தடையில்லை. இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் விவசாயிகள் செல்லமுடியும். எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கு சென்று விற்க முடியும். இங்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் மாநில அரசு தடை விதிக்க முடியாது.

உதாரணமாக மதுரையில்ஒரு தேங்காய் ரூ.12க்குவிற்கிறோம். இதுவே டெல்லி ஆசாத் மார்க்கெட்டில் ரூ.45க்கு விற்கப்படுகிறது என்றால் மதுரை விவசாயி டெல்லிக்கு சென்று தேங்காய்களை விற்று லாபம் பார்க்கலாம். இதை வரவேற்கிறோம்.
விளைபொருட்களுக்கு உரிய விலையை உறுதிசெய்யும் விவசாயிகள் ஒப்பந்த மசோதாவைப் பற்றி சொல்வதென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களோடு விவசாயிகள் ஒப்பந்தம் செய்து விவசாயம் செய்தால் லாபம் கிடைக்கும் தான். பயிர் சாகுபடிக்கு முன்பே இவ்வளவு தான் விலை என இரு தரப்பும் ஒப்பந்தம் போடுவர். இது சாதகமான அம்சமாக தெரிந்தாலும் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு மேலே தான் வாங்க வேண்டும் என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

உதாரணமாக ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.19.35 என மத்தியஅரசு விலை நிர்ணயம் செய்தது. அதற்கு குறைவாக ஒப்பந்தம்செய்தால் செல்லாது என அறிவிக்க கோருகிறோம்.இருதரப்பு ஒப்பந்தம் போட்டபின் கார்ப்பரேட் நிறுவனங்கள்விளைபொருளை வாங்காவிட்டால் விவசாயிகளுக்கு பெருநஷ்டம் ஏற்படும்.

ஏனென்றால் கரும்பு விவசாயிகளுக்கு இந்த இரண்டாண்டுகளில் ஆலைகள்தரவேண்டிய ஒட்டுமொத்த நிலுவைத்தொகை ரூ.25 ஆயிரம் கோடி. தமிழகத்தில் மட்டும் ரூ.2300 கோடி. இந்த நிலையை தவிர்க்க கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ‘பாங்க் கேரண்டி’ தர வேண்டுமென அரசு சட்டதிருத்தம் செய்ய வேண்டும்.

அந்தந்த மாநில அரசுகளிடம் பதிவுசெய்த நிறுவனங்கள் மட்டுமே விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.விளைபொருளை விற்பதற்கு ‘விவசாய விளைபொருள் மார்க்கெட்டிங் கமிட்டி’ மூலம் ஏலம் விடப்படும். பருத்தி கிலோவுக்கு ரூ.55 என அரசு விலை நிர்ணயித்திருந்தால், அதற்கு மேல் தான் ஏலம் கேட்க வேண்டும். பணம் உடனடி பட்டுவாடா செய்வதற்கு ‘பாங்க் கேரண்டி’ தரவேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள்செலவிடுமா

செல்வராஜ், தலைவர், அத்திக்கடவு கவுசியா நதி மேம்பாட்டு சங்கம், கோவை:

விவசாயிகள் விவசாயம் செய்யவே நேரம் போதவில்லை. எப்படி வியாபாரியாக மாற முடியும். ‘ஆப், இ – காமர்ஸ்’ மூலம் விவசாயிகள் விற்பனை செய்யலாம் என்றாலும் எதிர்முனையில் இருப்பவரும் வியாபாரி என்பதால் விலை நிர்ணயம் லாபமா என கூறமுடியாது. விவசாயி, நுகர்வோர் இடையேயான இடைவெளி குறைந்து விடும். இது பெரிய விவசாயிகள், பெரிய வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தை தரும்.

அவர்கள் நினைத்தால் எந்த இடத்தில் இருந்தும் எந்த பொருளையும் கொண்டு சென்று விற்க முடியும்.சிறு, குறு விவசாயிகளிடம் குறைந்தளவே விளைபொருள்இருப்பதால் அவர்களால் வேறிடம் கொண்டு சென்று விற்க முடியாது. கோழிப்பண்ணை ஒப்பந்தம் ஓரளவு நியாயமாக நடைபெறுகிறது. ஆனால் கரும்பு விவசாய ஒப்பந்தத்தில் விவசாயிகள் தோல்வியை தான் சந்தித்து வருகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்யும் போது நவீனத் தொழில்நுட்பத்திற்கு மாற அதிகம் வாய்ப்புள்ளது என மத்திய அரசு நினைக்கிறது. ஆனால் அதற்கான செலவை யார் ஏற்பது. உதாரணத்திற்கு சொட்டுநீர்ப் பாசனத்திற்கு அரசு மானியம் தருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அப்படி செய்யுமா என்பதையும் அரசு யோசிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநிலத்திலும் தண்ணீரின் தேவைக்கேற்பவே விவசாய செலவு கூடும், குறையும்.எனவே மாநில அரசு விலையை கட்டுப்படுத்த முடிந்தது. புதிய மசோதாவில் மாநில அரசின் பங்கு குறைந்து விட்டது. முன்பு போல ஊருக்கு ஊர் சந்தைகளை அதிகப் படுத்தினாலே சிறு, குறு விவசாயிகள் லாபம் பெற முடியும்.

தமிழக விவசாயிகளுக்குபலன்தராது

நிக்கோலஸ், தலைவர், திண்டுக்கல்மாவட்ட விவசாய சங்கம்:

தமிழகத்தில் சிறு, குறு விவசாயிகளின் எண்ணிக்கை தான் அதிகம்.விற்பனையும் உள்ளூரில் தான் செய்கின்றனர். நாடு முழுக்க விற்கலாம் என்பது நவீன மாற்றத்திற்காக சொல்லப் பட்டாலும் யதார்த்தத்தில் பலன் தராது. தமிழக விவசாயிகளுக்கு பொருத்தமாக இருக்காது. தண்ணீர்ப் பிரச்னை, விலை கிடைக்காத நிலை, ஆட்கள் பற்றாக்குறை என அல்லாடும்போது இந்த திட்டங்கள் காப்பாற்றுமா என தெரியவில்லை.

சத்தான உணவு கிடைக்கும் வாய்ப்பு குறையும்

தர்மராஜ், முன்னோடி விவசாயி, மதுரை:

பெரிய நிறுவனங்களுடன் விவசாய ஒப்பந்தம் செய்வது லாபகரமாக தெரிந்தாலும் நுணுக்கமாக பார்க்க வேண்டும். நிறுவனங்கள்தரும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை தான் விவசாயிகள் பயிரிட வேண்டும்.அவர்கள் கேட்கும் விலைக்குத் தான் விளைபொருளை விற்க முடியும்.பாரம்பரிய விதைகள் மொத்தமாக அழிந்து போகும். மொத்தத்தில் ஆரோக்கியமில்லாத, சத்துஇல்லாத உணவை சாப்பிடும்நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *