வேளாண்மை புரட்சி செய்த நூல்

தமிழில் வேறு எந்தச் சுற்றுச்சூழல் – விவசாயம் சார்ந்த நூல்களைவிடவும் அதிகப் பதிப்புகளைக் கண்ட நூல் ஜப்பானைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’. தமிழகத்தில் இயற்கை வேளாண்மை வேர்விட ஆரம்பித்ததற்கு ஃபுகோகாவும் இந்தப் புத்தகமும் முக்கியக் காரணம். ‘பூவுலகின் நண்பர்கள்’ இயக்கத்தினரால் 1991-ம் ஆண்டே ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது.

Courtesy: Hindu
Courtesy: Hindu

25 மொழிகளில் 10 லட்சம்

உலகெங்கும் மாற்றங்களின் பத்தாண்டுகளாகக் கருதப்படும் 1970-களில் ஜப்பானிய மொழியில் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூல் எழுதப்பட்டது. 1978-ம் ஆண்டில் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானபோது, ஃபுகோகாவின் இயற்கை வேளாண் முறை மீது உலகின் கவனம் திரும்பியது. தமிழ் உட்பட உலகெங்கும் 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம், 10 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளது.

இந்த நூல் உலகில் ஏற்படுத்திய தாக்கம் யாரும் கற்பனை செய்து பார்க்காதது. இயற்கை வேளாண்மை ஒரு சர்வதேச இயக்கமாக வளர்வதற்கு இந்தப் புத்தகம் ஓர் அடிப்படைக் காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

எதுவும் செய்யாத வேளாண்மை

ஷிகோகு என்ற ஜப்பானியத் தீவைச் சேர்ந்தவர் மசானபு ஃபுகோகா, 25 வயதில் சுங்கத் துறை கண்காணிப்பாளர் பதவியைத் துறந்து தன் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பினார், விவசாயம் செய்வதற்காக.

பிறகு தனது மனதில் உருக்கொண்டிருந்த ஒரு புதிய இயற்கை வேளாண் நடைமுறையை அவர் செயல்படுத்திப் பார்க்க ஆரம்பித்தார். வயலை அவர் உழவில்லை, பூச்சிக்கொல்லிகளையோ, வேதி உரங்களையோ போடவில்லை, வயல் முழுக்கத் தண்ணீரைத் தேக்கி வைக்கவும் இல்லை. அவருடைய இந்தப் புதிய நடைமுறை ‘எதுவும் செய்யத் தேவையற்ற வேளாண்மை’ (Do nothing farming) என்றழைக்கப்பட்டது.

அவருடைய இந்த வேளாண் முறை ஜப்பானியச் சராசரி அறுவடை அளவை மட்டுமல்லாமல், பல நேரம் அதிக அறுவடை செய்த வயல்களையும் தாண்டிச் சென்றது.

புதிய வெளிச்சம்

அவருடைய இயற்கை வேளாண் முறையும், அதன் கொள்கை ஆவணம்போல விளங்கும் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூலும் கடந்த 40 ஆண்டுகளாக உலகெங்கும் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

பலரும் நம்புவதுபோல, ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ வெறுமனே வேளாண்மை புத்தகமல்ல. அது ஃபுகோகாவின் வாழ்க்கைப் பயணம், அவருடைய தத்துவம் என்றொரு புதிய வாழ்க்கை முறையைப் பற்றிய வெளிச்சத்தை உலகுக்குப் பாய்ச்சியது.

2008-ம் ஆண்டில் 95 வயதில் இறக்கும்வரை இயற்கை வேளாண் இயக்கத்துக்கு ஃபுகோகா நேரடியாக உத்வேகம் அளித்து வந்தார். அவருடைய பிரதிபலிப்பாக இருக்கும் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூல், காலாகாலத்துக்கும் புத்தொளி பாய்ச்சிக் கொண்டுதான் இருக்கும்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *