2.5 ஏக்கரில் 12 லட்சம் வருமானம்… அசத்தும் இளைஞர்!

2.5 ஏக்கரில் 12 லட்சம் வருமானம்... 'அடுக்கு விவசாயத்தில்' அசத்தும் இளைஞர்!

இவர் பயிரிட்ட தக்காளி 15 அடி உயரத்துக்கு வளர்ந்து, ஒரு செடியில் இருந்து ஒரு நாளைக்கு 10 முதல் 12 கிலோ வரை மகசூல் கிடைத்தது.

த்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள டில்லி கிராமத்தில் குறுவிவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆகாஷ் செளராஷ்யா (Akash Chourasiya). டில்லி கிராம மக்கள் முழுவதும் பீடி சுற்றுவதைத்தான் தொழிலாகச் செய்துவந்தனர். ஆனால், ஆகாஷ் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கத் தொடங்கினார்.

மருத்துவம் படித்து மக்களுக்கு உதவ வேண்டும் என முயற்சி மேற்கொண்டார். எய்ம்ஸ் மருத்துவர் படிப்புக்குத் தன்னைத் தயார் செய்தபோதே, குறிக்கோளை அடைய முடியாது எனக் கைவிட்டுவிட்டார். ஆனால், மக்களின் உடல்நிலையை மருத்துவர் தவிர, விவசாயியாலும் காப்பாற்ற முடியுமே எனத் தோன்றவே தந்தையின் நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

விவசாயம்

ஒரு நபரின் உடல்நலம் தட்டில் இருக்கும் உணவில் இருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் ரசாயனம் இல்லாத உணவைக் கொடுக்க நினைத்தார். இந்த முடிவை எடுத்தபோது அவரது வயது 20. மருத்துவப் படிப்பு முயற்சியைக் கைவிட்டு, விவசாயத்தை மேற்கொள்ள முன்வருவதை அவரது குடும்பமோ, நண்பர்களோ ஏற்கவில்லை. இதைக் கண்டு சிறிதும் கலங்காமல் விவசாயத்தை நோக்கித் திரும்பினார்.

விவசாயத்தில் ரசாயன உரங்களைத் தவிர்ப்பதைக் கடைப்பிடித்ததுபோலவே, புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நினைத்தார். புதிய தொழில்நுட்பங்களையும், அடுக்கு முறை விவசாயத்தையும் கடைப்பிடித்ததால்தான் இன்று வருடத்துக்கு 12 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார். இன்று 2.5 ஏக்கரில் ஐந்து அடுக்குகளாகப் பயிரிட்டு விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்.

ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் கைவிட்டு விவசாயத்தைத் தொடரும்போது, கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இது அவரது குடும்பத்துக்குப் பிடிக்கவில்லை ஆனாலும், ஏதோ புதிதாக முயல்கிறார் என்று ஆதரவளித்தனர். இந்த ஆதரவுதான் சுத்தமான பொருள்களை விற்பனை செய்வதுடன், நிலையான வருமானத்தைப் பெறவும் வழிவகுத்தது. 2011-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி விவசாயத்தில் இறங்கினார்

. முதல் ஆறு மாதங்கள் கடுமையான பாதிப்பு இருந்தது. இயற்கை விவசாயத்துக்கு மாறியவுடன் உடனே வருமானத்தைப் பெற முடியாது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. முதல் முயற்சியாகத் தக்காளியை பயிரிட்டார். பொதுவாகத் தக்காளி பயிரிட்ட 50 முதல் 60 நாளில் நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பிக்கும். ஆனால், ஆறு மாதங்களாகியும் இவருக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை.

அடுக்கு விவசாயம்

அதற்குப் பின்னர்தான் இவர் பயிரிட்ட தக்காளி 15 அடி உயரத்துக்கு வளர்ந்து, ஒரு செடியில் இருந்து ஒரு நாளைக்கு 10 முதல் 12 கிலோ வரை மகசூல் கிடைத்தது. பழத்தின் அளவு, சுவை மற்றும் தரம் ஆகியவை அனைவரிடமும் கவனம் ஈர்த்தது. அதன் பின்னர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் இவரது தோட்டத்தைப் பார்வையிட வந்தனர். முதன்முதலில் இரண்டு பயிர்களை அடுக்கு முறையில் பயிரிட்டு வெற்றிகண்டார்.

இரண்டு பயிர்களும் நல்ல மகசூலைக் கொடுத்தன. அடுக்கு முறை விவசாயம் கைகொடுக்க ஆரம்பித்ததால், அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுக்கு விவசாயத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். அதன் பலன் இன்று 2.5 ஏக்கரில் 5 அடுக்குகள் கொண்ட பண்ணையை அமைத்திருக்கிறார்.

வயலைச் சுற்றிலும் மூங்கில் மரங்கள் ஓர் அடுக்காகவும், இரண்டாம் அடுக்காக இஞ்சி, மூன்றாம் அடுக்கு காய்கறிகள், நான்காம் அடுக்கு கீரை வகைகள், ஐந்தாம் அடுக்காகப் பந்தல் காய்கறிகளைப் பயிரிட்டிருக்கிறார்.

இந்த முறையில்தான் பயிர்களை சுழற்சி முறையில் பயிரிட்டுக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் களைச்செடிகள் வருவதும், அதற்கான செலவும் குறையும், தண்ணீரும் அதிகமாகச் செலவாகாது. ஒரு செடிக்கு பாய்ச்சும் தண்ணீரின் ஈரப்பதமே அடுத்த செடியைக் காப்பாற்ற வாய்ப்புண்டு. இது ஒரு தோட்டம் மாதிரியான அமைப்பு இல்லாமல், பல்லுயிர்ச் சூழலை உருவாக்கும் சூழல் மண்டலமாக மாறிவிடுகிறது. இப்படிச் செய்தாலே ஐந்து ஏக்கரில் பெறும் வருமானத்தை ஒரு ஏக்கரில் பெற முடியும். முதலீட்டுச் செலவும் குறைவுதான்.

விவசாயம்

12 முதல் 15 லட்சம் வரை வருமானம் கிடைத்தாலும், அதில் தோட்டத்துக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகிவிடும். அதனால் 8 – 10 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். இதுபோக மண்புழு உரமும் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். வருடம் முழுவதும் 40 டன் மண்புழு உரங்களைத் தயாரிக்கிறார்.

அதில் தனது பண்ணைக்கு 5 டன் போக, மீதம் இருக்கும் 35 டன் மண்புழு உரத்தை டன்னுக்கு 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். இதன் மூலமே 1,75,000 ரூபாய் கிடைத்துவிடுகிறது. இடுபொருள்களாக மண்புழு உரமும், பூச்சிகளுக்கு வேப்பெண்ணெய், இஞ்சி பூண்டு கரைசல் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறார். இதுபோக தனது பண்ணைக்கு விரும்பி வரும் விவசாயிகளுக்கு யுக்திகளைச் சொல்லிக்கொடுத்தும் வருகிறார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “2.5 ஏக்கரில் 12 லட்சம் வருமானம்… அசத்தும் இளைஞர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *