ஆமணக்கு சாகுபடி

ஆமணக்கு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா பரப்பளவிலும், உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் 3 ஆயிரத்து 750 டன் ஆமணக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,100 ஹெக்டர் பரப்பளவில் ஆமணக்கு சாகுபடி செய்யப்படுகிறது.

  • ஆமணக்கு எண்ணெய் உண்ணா வகையைச் சார்ந்தது. இதில் 50 சதவீதத்துக்கும் மேலாக எண்ணெய்ச் சத்து உள்ளது. ஆமணக்கில் இருந்து மருந்துப் பொருள்கள் தயாரிக்கபபடுகின்றன.
  • இந்த எண்ணெய் பெயின்ட், வார்னிஷ் தயாரிக்கவும் மூலப் பொருள்களாகப் பயன்படுகிறது.
  • மேலும், இதரப் பயிர்களுடன் பொறிப் பயிராக பயிரிடும் போது அந்தப் பயிர்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

ஆமணக்கு சாகுபடி செய்வது தொடர்பாக டாக்டர் பெருமாள் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தரராஜ் கூறும் வழிமுறைகள்:

பருவம்:

  • ஆமணக்கு தனிப் பயிராகப் பயிரிட மானாவாரி-ஜூன், ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவை செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்தவையாகும். ஊடு பயிராக எல்லாப் பருவங்களிலும் பயிரிடலாம்.

ரகங்கள்:

  • டெஎம்வி-4 (105 நாள்கள்), டெஎம்வி-5 (120 நாள்கள்), டிஎம்வி-6 (160 நாள்கள்), எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்), ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்) ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.

நிலத் தன்மை:

  • டிராக்டர் அல்லது நாட்டுóக் கலப்பை மூலம் 2-3 முறை நிலத்தை நன்கு கட்டி இல்லாமல், புழுதிபட உழ வேண்டும்.
  • வடிகால் வசதியுடன் கூடிய கார, அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை.
  • கடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். தனிப் பயிரானால் நிலத்தை பார்கள் அமைத்து நீர் பாய்ச்ச ஏதுவாக தயார் செய்ய வேண்டும்.

விதை:

  • சிறந்த தரமான விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு ஹெக்டருக்கு தனி பயிரானால் 10 கிலோ விதை தேவைப்படும்.
  • கலப்புப் பயிராக அல்லது ஊடு பயிராக இருந்தால் 3 கிலோ விதைகள் போதுமானது. வீரிய ஒட்டு ரகமானால் 5 கிலோ விதைகள் தேவைப்படும்.
  • ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் உயிர்ப் பூசணம் டிரைக்கோடெர்மா கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைப்பு:

  • விதைகளை விதைக்கும் முன்பு 24 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து விதைத்தால் முளைப்புத் திறன் அதிகரிக்கும்.
  • ஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது. விதைகளை பரிந்துரை செய்யப்பட்ட இடை வெளியில் விதைக்க வேண்டும்.
  • மானாவாரிப் பயிராக இருந்தால் 90-க்கு 60 செ.மீ. இடைவெளியிலும், இறவையில் பயிரிட்டால் 120-க்கு 90 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.

plant2

 

 

 

 

 

 

உரமிடுதல்:

  • பொதுவாக மண் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில், பரிந்துரைக்கப்பட்ட அளவான ரகத்திற்கு 30:15:15 கிலோ தழைச்சத்து, மணி சத்து, சாம்பல் சத்து இட வேண்டும்.
  • மானாவாரி ஒட்டு ஆமணக்கிற்கு 45:15:15 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டும்.
  • இதில் 30:15:15 அடியுரமாகவும், மீதமுள்ள 15 கிலோ தழைச் சத்தை மேலுரமாக மழை வரும் போது 40-60 நாள்களுக்குள் இட வேண்டும்.
  • இறவை வீரிய ஒட்டு ஆமணக்கிற்கு 60:30:30 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இட வேண்டும். இதில் 30:30:30 கிலோ தழை, மணி, சாம்பல் சத்தை அடி உரமாகவும், மீதமுள்ள 30 கிலோ தழைச்சத்தை 2 தவணைகளாகப் பிரித்து 30ஆவது நாளும், 60ஆவது நாளும் இட வேண்டும்.

நீர் நிர்வாகம்:

  • விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 15 நாள்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

களை நிர்வாகம்:

  • விதைத்த 3 நாள்களுக்குள் ஏக்கருக்கு புளுகுனோரலின் 800 மி.லி தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம். மருந்து தெளிக்காதபட்சத்தில் விதைத்த 20 மற்றும் 40ஆவது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுóக்க வேண்டும்.

ஊடுபயிர்:

  • ஆமணக்கை ஊடுபயிராகவும் பயிரிடலாம்.
  • ஆறு வரிசை நிலக்கடலை, உளுந்துக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிரிடலாம்.

அறுவடை:

  • பயிரின் வயதைக் கொண்டு அறுவடை செய்யலாம். குறுகிய கால ரகம் 120-140 நாள்களில் அறுவடை செய்யலாம். நடுத்தர கால ரகம் 150-160 நாள்களில் அறுவடை செய்யலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “ஆமணக்கு சாகுபடி

  1. V.Balasubramanian says:

    ஆமணக்கு சாகுபடியை பற்றி விரிவால தகவல் கொடுத்ததற்கு நன்றி விதை மற்றும் அனுபவங்களை தெரிந்து கொள்ள சம்பந்த பட்ட கை பேசி ஏன் விலாசம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இனி வரும் காலங்களில் கூடுதல் வேண்டுகோளை செய்து கொடுப்பீர்கள் என்று நம்புகிறோம்
    நன்றி

Leave a Reply to V.Balasubramanian Cancel reply

Your email address will not be published. Required fields are marked *