எலுமிச்சை பயிரின் நோய்கள்

எலுமிச்சை மரங்களைத் தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது சொறி நோயாகும். இந்நோய் எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இந்நோய் ஒருவித பாக்டீரியாவினால் ஏற்படுகின்றது.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 


நோயின் அறிகுறிகள் :

  • இலை, கிளை, சிறு கிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப்புள்ளிகள் தோன்றும். குச்சிகளில் தோன்றும் சொறிப் புள்ளிகளினால் குச்சிகள் காய்ந்து விடும்.
  • காய்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளைச் சுற்றிலும் மஞ்சள் நிற வளையம் தோன்றும். பழங்களில் தோன்றும் சொறிப் புள்ளிகளில் வெடிப்புகள் தோன்றும். நோயினால் பழங்களின் தோல்பகுதி பாதிப்பிற்கு உள்ளாகின்றன. பழங்களில் சாறின் அளவும் குறைகின்றது.
  • சொறி நோயுற்ற பழங்களின் சந்தை மதிப்பு வெகுவாகக் குறைகின்றது. பழத்திலுள்ள சொறிப்புள்ளிகள் மற்றும் வெடிப்புகள் மற்ற அழுகல் நுண்ணுயிர்கள் உட்புக வழி உண்டாக்குகின்றன.
  • சொறி நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியா, இலைத்துளைகள் மூலமாகவோ அல்லது பூச்சி அல்லது முட்களினால் ஏற்படும் காயங்கள் மூலமாகவோ, உட்புகுந்து தாக்குதலை துவங்குகின்றது. நோய் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு மழைத்துளிகள், காற்று மற்றும் இலைதுளைக்கும் பூச்சிகள் மூலம் பரவுகின்றது.

    கட்டுப்படுத்தும் நுட்பங்கள் :

  • நோயுற்று கீழே உதிர்ந்து விழுந்து கிடக்கும் இலைகளையும், சிறு குச்சிகளையும் சேகரித்து எரித்துவிட வேண்டும்.
  • மரங்கள் சிறப்பாக வளர நன்கு பரிந்துரைக்கப்பட்ட அளவு உரமிட்டு முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
  • பழத் தோட்டங்களில் நோயுற்ற மரங்களிலிருந்து நோயுற்ற சிறு குச்சிகளை வெட்டி தீயிட்டு அழிக்கவும்.
  • பின் கவாத்து செய்த உடன் 0.30 சதம் தாமிர ஆக்ஸிகுளோரைடு மருந்து தெளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து மூன்று முறை ஸ்ட்ரெப்டோசைக்கிளின் 100 பிபிஎம் (100 மிலி கிராம் / 1 லிட்டர் தண்ணீர்) மற்றும் 0.30 சதம் தாமிர ஆக்ஸி குளோரைடு கலந்து ஒருமாத இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • மரம் துளிர்விடும் ஒவ்வொரு சமயமும், மரத்தின் அனைத்து பகுதிகளும் நன்றாக நனையுமாறு சூடோமோனஸ் புளுரசன்ஸ் 0.2 சத கரைசல் (2 கிராம் / 1 லிட்டர் தண்ணீர்) தெளித்தல் அவசியம். இவ்வகை பாக்டீரியா நோயைக் கட்டுப்படுத்த சூடோமோனஸ் புளுரசன்ஸ் 0.2 சத கரைசல் (2 கிராம் / 1 லிட்டர் தண்ணீர்) தெளிக்கவும். 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும்.
  • எலுமிச்சையில் தோன்றும் இலைத்துளைப்பான்கள் இந்நோயைப் பரப்புவதால் அவற்றை பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து கட்டுப்படுத்துவது அவசியம். வேப்பம் பிண்ணாக்கு (5 விழுக்காடு) கரைசலைத் தெளித்தும் இந்நோயினை பரப்பும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு திருவில்லிபுத்தூர், பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் ம.குணசேகர் கேட்டுக் கொள்கிறார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

4 thoughts on “எலுமிச்சை பயிரின் நோய்கள்

  1. வெங்கடேசன் says:

    எனது வீட்டில் உள்ள இரண்டு எலுமிச்சை மரங்களில் ஒன்று பட்டுப்போய்விட்டது. இதனை வெட்டி விட்டேன். என்ன காரணம் என்றே தெரியவில்லை. திடீரென இலைகள் முழுவதும் காயத்தொடங்கியது. இது அடுத்த மரத்திற்கும் பரவுமா? தற்போது கீழே வேப்பம்பிண்ணாக்கு+கலப்பு உரம் இட்டுள்ளேன். போதுமா? ஆலோசனை கூறவும். நன்றி.

  2. பூபாலன் சீ says:

    ஐயா எனது வீட்டில் உள்ள எலுமிச்சை மரம் பிசினை நிறைய இறங்கியது பழம் சைஸில் சிறியதாகி விட்டது போன சீசன்ல பழம் பெரிதாக இருந்தது ஒரு 100 கிராம் அளவுபழம் உள்ளதாக மரம் பிசினி அதிகமாக இருக்கிறது கட்டுப்படுத்தும் மருந்து என்ன பயன் படுத்தலாம் தகவல் தெரிவிக்கவும் ஐயா

Leave a Reply to ARAVIND Cancel reply

Your email address will not be published. Required fields are marked *