நவீன கரும்பு சாகுபடி: குறைந்த நீரில் அதிக மகசூல்

குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை வேளாண் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் கூறிய தகவல்கள்:

முக்கிய அம்சங்கள்: ஒரு விதைப்பரு சீவல்களிலிருந்து நாற்றங்கால் தயாரித்தல் வேண்டும். இளம் (25 முதல் 30 நாள்) நாற்றுகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். வரிசைக்கு வரிசை 5 அடி, நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் உரமிடுதல், ஊடு பயிரிட்டு மண் வளம், மகசூல் அதிகரிக்க வழி செய்ய வேண்டும். இயற்கை சார்ந்த உரங்கள், பயிர் பாதுகாப்பு, பராமரிப்பு முறைகளுக்கு போதிய அளவு முக்கியத்துவம் அளித்தல் வேண்டும்.

நாற்றுகள் தயார் செய்யத் தேவையானப் பொருட்கள்:

5000 ஒரு விதைப்பரு சீவல்கள், 100 குழித்தட்டுகள் (ஒவ்வொன்றிலும் 50 குழிகள்) 150 கிலோ கோகோபிட்.

கரும்பு நாற்றங்கால்.  Courtesy: Dinamani
கரும்பு நாற்றங்கால். Courtesy: Dinamani

ஒரு விதைப்பரு சீவல்களை தெரிவு செய்தல்:

ஆரோக்கியமான 7 முதல் 9 மாதங்களான கரும்பிலிருந்து, கணுக்களுக்கிடையே 7 முதல் 8 அங்குலம் இடைவெளியுள்ள விதைப் பருக்களை தேர்வு செய்ய வேண்டும். நோய் தாக்கிய, பழுதடைந்த விதைப் பருக்களை தவிர்ப்பது அவசியம். தேவையான அளவு கரும்பை வெட்டி எடுத்துக் கொள்ளவும், வெட்டப்பட்ட கரும்பிலிருந்து ஒரு விதைப்பரு சீவல்களை வெட்டுக்கருவி கொண்டு வெட்டி எடுக்கவும்.

சீரான நாற்றுகளைப் பெற வழிமுறைகள்:

விதைப்பரு சீவல்களை வெட்டி எடுத்தவுடன், அவற்றில் சிலவற்றை 1 சதவீத சுண்ணாம்புக் கரைசலில் நனைத்து ஈரமான ஒரு சாக்குப்பையில் 3 முதல் 4 நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும். 4-வது நாளின் இறுதியில் சாக்குப்பையை திறந்து அவற்றில் நன்கு முளைவிட்ட ஆரோக்கியமான விதைப் பருக்களை தேர்வு செய்யவும். ப்ளாஸ்டிக் ட்ரேக்களில் முளைவிடாது போன விதைப்பருக்களுக்கு பதிலாக இந்த ஆரோக்கியமான பருக்களை எடுத்து வைக்கலாம். இந்த முறை மூலம் தரமான நாற்றுகளை பெறுவதும், சீரான வளர்ச்சியும் சாத்தியமாகிறது.

நாற்று தயார் செய்தல்:

6 மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் ரகங்களிலிருந்து மொட்டுகளை சேகரிக்க வேண்டும். அதில் 5,000 மொட்டுகளை (ஒரு விதைப்பரு சீவல்கள்) எடுத்து டிரைக்கோடெர்மா விரிடி (1 லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம்) கலந்த தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் 15 நிமிடம் உலர வைக்க வேண்டும். பின்னர் இந்த மொட்டுகளை கோணிப்பையில் இறுகக் கட்டி நிழலில் 5 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு குழித்தட்டுகளில் பாதியளவு கோகோ பீட் எரு கொண்டு நிரப்பி அதில் விதை மொட்டுகள் மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை கோகோபீட் கொண்டு நிரப்ப வேண்டும். நிழல் வலை அல்லது மர நிழலில் வைத்து 25 முதல் 30 நாள்கள் வரை நீர் தெளிக்க வேண்டும்.

நிலம் தயார் செய்தல்:

பயிர்க் கழிவுகளை நீக்கியவுடன் நிலத்தில் உள்ள மண் கட்டிகளை உடைக்க வேண்டும். டிராக்டர் உதவியுடன் ஆழமாக ஒன்று அல்லது இரண்டு உழவுகள் (30 செ.மீ.க்கு மேல்) செய்ய வேண்டும். பின்பு சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமப்படுத்த வேண்டும். இயற்கை உரங்களான தொழுஉரம் ஏக்கருக்கு 8 டன் முதல் 10 டன்கள் அளிப்பததோடு அதனுடன் ட்ரைகோடெர்மா அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிரிகளை ஏக்கருக்கு ஒரு கிலோ கலந்து இடவேண்டும். பார்களை 5 அடி இடைவெளியில் அமைக்க வேண்டும்.

நாற்று நடவு செய்தல்:

25 முதல் 30 நாள்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவுக்கு ஒரு நாள் முன்பு நாற்றுகளுக்கு நீர் கொடுப்பதை நிறுத்த வேண்டும். இப்படி செய்வதால் நாற்றுகளை எளிதாக எடுக்கலாம். நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தை பொருட்டு நீர் பாய்ச்ச வேண்டும். அதே போல் நடவுக்குப் பின்பும் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். 15-க்கும் மேற்பட்ட தூர்கள் 2 மாதத்திற்குள் உருவாகும். 2 அல்லது 3 தூர்கள் வந்தவுடன் முதலில் வந்த தாய்ச்செடியை வெட்டி நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கினால் அதிக பக்க தூர்கள் வெளிவரும்.

மண் அணைத்தல், சோகை உரித்தல்:

நடவு செய்த 45-வது நாள் மற்றும் 90-வது நாளில் மண் அணைப்பு செய்தல் வேண்டும். ஒளிச்சேர்க்கைக்கு, மேற்புறமுள்ள 8 முதல் 10 இலைகளே தேவைப்படுகின்றன. எனவே, கீழ்ப்புறமுள்ள காய்ந்த, சில காயாத இலைகளை 5-வது, 7வது மாதத்தில் உரித்து பார் இடைவெளிகளில் இட வேண்டும். வேலையாட்கள் கொண்டோ, கருவிகள் மூலமாகவோ நடவுக்குப் பின் 30, 60, 90-வது நாள்களில் களை எடுக்க வேண்டும்.

மூடாக்கு:

மூடாக்கு போடுவதன் மூலம் மண்ணிலுள்ள களைகள் கட்டுப்படுவதுடன் மண்ணுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. கரும்பு சோகைகள் ஏக்கருக்கு 1.5 டன் அளவு நடவுக்கு 3 நாள்களுக்கு பின் பரப்பி விட வேண்டும். அதே போல், சோகை உரித்த பின் அவைகளை பார் இடைவெளிகளில் பரப்பி விடவேண்டும்.

நீர் மேலாண்மை:

கரும்பு பயிருக்கு அதன் மொத்த வளர்ச்சிப் பருவத்தில் ஏக்கருக்கு 60 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சொட்டு நீர்ப்பாசனம் மூலம் 90 சதவீதம் வரை நீர் உபயோகிப்புத் திறனை அதிகரித்து 40 முதல் 70 சதவீதம் வரை நீரை சேமிக்க முடியும். நடவுக்குப் பின் மண்ணின் தன்மையைப் பொறுத்தும் பயிரின் வயதைப் பொறுத்தும், மழை மற்றும் ஈரப்பதத்தை பொறுத்தும் நீர்ப் பாய்ச்ச வேண்டும். கிளை விடும் பருவத்தில் (36 முதல் 100 நாள்கள்) 10 நாள்களுக்கு ஒரு முறையும், அதிக வளர்ச்சி பருவத்தில் (101 முதல் 270 நாள்கள்) 7 நாள்களுக்கு ஒரு முறையும், முதிர்ச்சிப் பருவத்தில் (271 நாள் முதல் அறுவடை வரை) 15 நாள்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

சொட்டு நீர்ப்பாசனம்:

நீடித்த நவீன கரும்பு சாகுபடியின் மகசூல் அதிகரிக்க சொட்டு நீர் உரப் பாசனம் சாலச் சிறந்தது. 3 நாள்களுக்கு ஒரு முறை சொட்டு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். 10 நாள்களுக்கு ஒரு முறை உரப் பாசனம் செய்ய வேண்டும். இம்முறையில் 45 சதவீதம் பாசன நீரை (1,200 மி.மீ.) சேமிக்க முடியும்.

இயற்கை உரம் அளித்தல்:

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை இயற்கை முறையில் உரம் அளித்தலை அதிகரிக்கிறது. இதன் மூலம் மண்ணுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் கிடைப்பதோடு, மண்ணின் உயிர்த்தன்மையும் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை உரங்களான தொழு உரம் அல்லது மக்கிய உரம் அல்லது மக்கிய ப்ரஸ் மட் ஆகியவற்றை ஏக்கருக்கு 8 முதல் 10 டன் என்ற அளவிற்கு கொடுப்பது நல்லது.

தழைச்சத்து ஒரு ஏக்கருக்கு 112 கிலோ கிடைக்கும் அளவிற்கு சரிபார்த்து மேற்கண்ட உரங்களை இடுவது நல்லது. இயற்கை உரங்களோடு ட்ரைகோடெர்மா அல்லது சூடோமோனாஸ் நுண்ணுயிரிகளை ஏக்கருக்கு 1 கிலோ அளவில் கலந்து கொடுப்பது மிகவும் நல்லது.

ஊடுபயிர்:

நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளி இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள், பயறு வகைகள், வெள்ளரி, தர்ப்பூசணி, பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்ய முடிகிறது. ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களைக் கட்டுப்பாடு, மண்வளத்தைப் பெருக்க முடியும்.

மகசூல்: மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தொழில் நுட்பங்களையும் சரியாகக் கடைப்பிடித்தால் ஒரு மொட்டிலிருந்து குறைந்தது 30 கிலோ கரும்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் மொட்டுக்கள் எனக் கணக்கிடும் போது 150 டன்கள் வரை மகசூல் பெற வாய்ப்பு உள்ளது

 

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *