ஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்..லட்சக்கணக்கில் வருமானம்!

 பட்டதாரிகளின் ‘பலே’ பால் பண்ணை

நாட்டு ரக விதைகளைப் பசுமைப்புரட்சி அழித்ததுபோல… நாட்டு மாடுகளை அழித்துக் கலப்பினங்களைப் பெருக்கியது, வெண்மைப்புரட்சி. கடந்த சில பல ஆண்டுகளாக ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார், ‘ஜீரோபட்ஜெட் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் உள்ளிட்ட பல இயற்கை ஆர்வலர்கள் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு காரணமாக… பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். அப்படி இயற்கைக்கு மாறும் விவசாயிகள் அனைவருமே, இயற்கை இடுபொருள்கள் தயாரிப்புக்காக நாட்டு மாடுகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதே நேரத்தில், பாரம்பர்ய உணவு குறித்து விழிப்பு உணர்வு பெருகி வருவதால், சத்தான நாட்டு மாட்டுப்பாலுக்கான சந்தை வாய்ப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால், இயற்கை இடுபொருள்களின் தேவைக்காக வளர்ப்பதோடு, பாலுக்காகவும் நாட்டு மாடுகளைப் பலர் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பெரும்பாலான நாட்டு மாடுகள் குறைந்தளவில் பால் கறக்கக்கூடியவை என்பதால், தமிழக விவசாயிகள் பலரும் வட மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட அதிகப்பால் கறக்கக்கூடிய நாட்டு மாடுகளை, பால் உற்பத்திக்காக வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், வெளி மாநிலப்பசுக்களை வளர்த்து வருகிறார்கள் ராஜேஷ் கார்த்திக் மற்றும் பிரகாஷ் ஆகிய நண்பர்கள்.

ஆஸ்திரேலியா நாட்டில் கட்டடப் பொறியாளராகப் பல ஆண்டுகள் இருந்து வந்தவர், ராஜேஷ் கார்த்திக். தற்போது வேலையை உதறிவிட்டு, நாட்டுமாடுகள் வளர்ப்பில் இறங்கியுள்ளார். பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஆவின் நிறுவனத்தில் செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி எடுத்துக்கொண்டு… கிராம நிலைப் பணியாளராக 16 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், பிரகாஷ். இவர்கள் இருவரும் இணைந்து, கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள சூலூர் முத்துக்கவுண்டன் புதூர் கிராமத்தில் 6 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து நாட்டுப்பசுக்களை வளர்த்து வருகிறார்கள். ஒருநாள் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த நண்பர்களைச் சந்தித்தோம்.

முதலில் பேசியவர், ராஜேஷ் கார்த்திக். “எனக்குச் சொந்த ஊரு செஞ்சேரி மலை. அங்க 6 ஏக்கர் தோப்பு இருக்கு. சின்ன வயசில இருந்தே ஆடு, மாடு, கோழிகள்னா ரொம்ப இஷ்டம். பள்ளிக்கூடம் முடிஞ்சு சாயங்காலம் வீடு வந்ததும், நேரா தோட்டத்துக்குத்தான் போவேன். அங்க ஆடு, மாடுகளுக்குத் தீனியை அள்ளிப் போட்டுட்டுதான் வீட்டுக்கு வருவேன். அதுக்குப்பிறகு வீட்டுப்பாடத்தை எழுதுவேன். அதேமாதிரி ஸ்கூல் லீவு விட்டால் போதும், பண்ணையாளுங்ககூடச் சேர்ந்து மாடுமேய்க்கப் போயிடுவேன். அப்பவே எனக்குப் பெரிய பால்பண்ணை வைக்கணும்னு ஆசை. இஞ்சினியரிங் முடிச்ச பிறகு, ஆஸ்திரேலியாவுல வேலை கிடைச்சது. அங்க 6 வருஷம் வேலை பார்த்தேன். அப்பவும் எனக்குப் பால் பண்ணை மேலதான் ஆசை இருந்துச்சு. நேரம் கிடைக்கிறப் போவெல்லாம்… விவசாயம், கால்நடை சம்பந்தமான செய்திகளைத்தான் இன்டர்நெட்ல தேடித் தேடிப் படிப்பேன்.

அதோட, ‘பசுமை விகடன்’ உள்பட விவசாயம் சம்பந்தமான புத்தகங்களையும் தொடர்ந்து படிச்சுட்டு இருந்தேன். இடையில திருமணமும் முடிஞ்சுடுச்சு. ஒரு கட்டத்துல தாய்நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலை வந்தது. ஊர் திரும்புனதும் பால்பண்ணை ஆரம்பிக்கிறதுக்கான முயற்சிகள்ல இறங்கினேன். ஆரம்பத்திலேயே நாட்டுமாடுகளைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அதிகப்பால் கொடுக்கக்கூடிய கிர், சாஹிவால், தார்பார்க்கர், காங்கிரேஜ் ரகங்களைப் பத்தியும் இன்டர்நெட்ல விஷயங்களைச் சேகரிச்சு வெச்சுருந்தேன். அந்தச் சமயத்துலதான் எனக்குக் கறவை மாடுகளுக்குச் செயற்கைக் கருவூட்டல் செய்றதுக்காக எங்க ஊருக்கு அடிக்கடி வந்துக்கிட்டுருந்த பிரகாஷ் எனக்கு அறிமுகமானார். அவர் சூலூருக்குப் பக்கத்துல இருக்குற ராசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்குக் கறவை மாடு வளர்ப்பில் நல்ல அனுபவம் இருந்ததால, அவரையும் தொழில்ல இணைச்சுக்கலாம்னு முடிவு பண்ணுனேன். அவருக்கும் என்கூடச் சேர்றதுல விருப்பம் இருந்துச்சு.

எங்க பூர்வீக நிலத்துல தண்ணீர் வசதி குறைவு. அதனால, அதிகளவு பசுந்தீவனம் உற்பத்தி செய்றதுக்காகத் தண்ணீர் வளம் இருக்குற நிலத்தைத் தேட ஆரம்பிச்சோம். அப்போதான் இந்த 6 ஏக்கர் நிலம் வருஷக் குத்தகைக்குக் கிடைச்சது. இங்க தண்ணீருக்குப் பிரச்னையில்லை. முதல் வேலையா தீவனப்பயிர்களை நடவு செஞ்சோம். அடுத்து கொட்டகைகளை அமைச்சோம். அதுக்கப்புறம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களுக்குப் போய், அங்குள்ள விவசாயிங்ககிட்ட நேரடியா விலை பேசி… 11 கிர் மாடுகள், 6 சாஹிவால் மாடுகள், 8 காங்கிரேஜ் மாடுகள்னு மொத்தம் 25 கறவை மாடுகளை வாங்கிட்டு வந்தோம். அந்த மாநிலங்கள்ல இருந்தே குடும்பமா 10 தொழிலாளிங்களையும் கூட்டிட்டு வந்துட்டோம்” பால் பண்ணை அமைத்த கதை சொன்ன ராஜேஷ் கார்த்திக், பண்ணைக்குள் நம்மை அழைத்துச் சென்று மாடுகளைக் காட்டியபடியே பேச்சைத் தொடர்ந்தார்…

“மாடுகளை வாங்கிட்டு வந்தபிறகு, பாலை மார்க்கெட் பண்றது தொடர்பா, சில பால் வியாபாரிகள்கிட்ட பேசினோம். அவங்க எல்லோருமே நாட்டு மாட்டுப்பாலுக்கு நல்ல தேவை இருக்குனு சொன்னாங்க. எங்க பண்ணையில பால் கொள்முதல் செய்யறதுக்கும் சம்மதிச்சாங்க. ‘எங்களுக்கு லிட்டர் நூறு ரூபாய்னு கொடுங்க. நாங்க டவுன்ல லிட்டர் 120 ரூபாய்னு விற்பனை செய்வோம்’னு கேட்டாங்க. நாங்க கணக்குப் போட்டுப் பார்த்ததுல, அந்த விலை கட்டுபடியாத்தான் இருந்துச்சு. ஆரம்பத்துல 25 கறவை மாடுகள்ல இருந்து தினமும் 150 லிட்டர் வரை பால் கிடைச்சது. பெரும்பாலும் பாலாவே விற்பனை செஞ்சுட்டோம்.

எப்போவாவது பால் மீதமாச்சுனா, அதைத் தயிராக்கி… பாரம்பர்ய முறைப்படி கடைஞ்சு, வெண்ணெய், நெய்னு தயாரிச்சு விற்பனை செஞ்சுடுவோம். 17-20 லிட்டர் பால்ல இருந்து 1 கிலோ அளவு நெய் கிடைக்கும். ஒரு கிலோ நெய் 1,600 ரூபாய்னு விற்பனையாச்சு. இங்கயே மசாலா மோர் தயாரிச்சு அதைத்தான் பண்ணைக்கு வர்றவங்களுக்குக் குடிக்கக் கொடுப்போம்” என்றார்.

Image may contain: one or more people, horse and outdoor

ராஜேஷ் கார்த்திக்கைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ், “பண்ணையில எப்பவும் தொடர்ச்சியா பால் கிடைச்சுட்டே இருக்கணும்னா 25 மாடுகள் பத்தாதுனு யோசிச்சு, மாடுகளோட எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு பண்ணினோம். அதுக்காகப் பேங்க் லோன் கேட்டுப் போனோம். பல பேங்க்குகள்ல நாட்டு மாடுகளுக்கு லோன் இல்லைனு சொல்லிட்டாங்க.

இருந்தாலும் தளராம அலைஞ்சோம். அதுக்குப் பலன் கிடைச்சது. செஞ்சேரிமலையில இருக்குற ‘பேங்க் ஆஃப் பரோடா’ மேனேஜர் லோன் கொடுக்கச் சம்மதிச்சார். பண்ணையை நேர்ல பார்த்த பிறகு அவங்களுக்குத் திருப்தியா இருந்ததால… உரிய ஆவணங்களை வாங்கிட்டு 40 லட்சம் ரூபாய் லோன் சேங்க்‌ஷன் பண்ணினாங்க. உடனடியா, கிளம்பிப்போய் மாடுகளை வாங்கிட்டு வந்தோம். இப்போ எங்க பண்ணையில 25 கறவை மாடுகள், 25 கன்னுக்குட்டிகள், 25 சினை மாடுகள்னு மொத்தம் 75 உருப்படிகள் இருக்கு.

இப்போ ஒரு வருஷத்துக்கு 50,000 லிட்டர் பால் கிடைக்குது. ஒரு லிட்டர் 100 ரூபாய்ங்கிற கணக்குல வருஷத்துக்கு 50,00,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். எரு விற்பனை மூலமா வருஷத்துக்கு 2,50,000 ரூபாய் கிடைக்குது. நெய் விற்பனை மூலமா வருஷத்துக்கு 50,000 ரூபாய் கிடைக்குது. ஆக, ஒரு வருஷத்துக்கு மொத்தமா 53,00,000 ரூபாய் கிடைக்குது. ஒரு மாட்டுக்குத் தினமும் ஒன்றரை கிலோ பருத்திப் பிண்ணாக்கு,

1 கிலோ கோதுமைத் தவிடு, 1 கிலோ கருக்காய் தவிடு, அரைக்கிலோ உளுந்து குருணை, அரைக்கிலோ மக்காச்சோள மாவு, 30 கிலோ பசுந்தீவனம், 30 கிலோ வைக்கோல்னு தீவனமாக் கொடுக்குறோம். ஒரு கறவை மாட்டுக்கு ஒரு நாளைக்குத் தீவனத்துக்கு 140 ரூபாய்ச் செலவாகும். சினை மாட்டுக்கு 100 ரூபாய்ச் செலவாகும். தீவனம், பணியாளர்களுக்குச் சம்பளம், பணியாளர்கள் வீடுகளுக்கு வாடகை, போக்குவரத்து, குத்தகை, மருந்துகள், மின் கட்டணம், எல்லாம் சேர்த்து 35,00,000 லட்சம் ரூபாய் வரை செலவாகிடுது. இப்போதைக்கு வருஷத்துக்கு 15 லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்குது” என்றார்.

நிறைவாகப் பேசிய ராஜேஷ் கார்த்திக், பிரகாஷ் ஆகியோர், “அடுத்து பக்கத்து மாவட்டங்கள்லயும் பண்ணையை விரிவுபடுத்தலாம்னு இருக்கோம். ஐ.டி கம்பெனிகள்ல வேலை பார்க்குற சில இளைஞர்களோட சேர்ந்து, சென்னையடுத்த பழைய மகாபலிபுரம் சாலையில் ஓர் இடத்துலயும், மீஞ்சூருக்குப் பக்கத்துல இருக்குற தத்தமஞ்சிங்கிற இடத்துலயும் நாட்டு மாட்டுப்பண்ணைகளை ஆரம்பிச்சுருக்கோம். அதேமாதிரி, காரைக்குடியிலயும் ஒரு பண்ணை ஆரம்பிச்சிருக்கோம். இப்போ பாக்கெட்கள்ல அடைச்சு நாங்களே நேரடியா மார்க்கெட் பண்ற முயற்சியிலயும் இறங்கியிருக்கோம். உத்தரப் பிரதேச மாநிலம், ‘ராய்பர்லி’ங்கிற இடத்துல ஒரு நண்பர்கூடச் சேர்ந்து ஒரு எருமைப் பண்ணையை ஆரம்பிச்சுருக்கோம். 1,000 மாடுகள் வெச்சுப் பண்ணை ஆரம்பிச்சு அந்தப்பண்ணையில தயிர், வெண்ணெய், நெய், அர்க், சாம்பிராணி, சோப்பு, அமிர்த சஞ்சீவினு எல்லாப் பொருள்களையும் தயாரிச்சு நாடு முழுக்கச் சந்தைப் படுத்தணுங்கற ஆசையில இருக்கோம்” என்றார்.

தொடர்புக்கு

செல்போன்: பிரகாஷ்: 9943770000 , ராஜேஷ் கார்த்திக்:8072977532

– ஜி.பழனிச்சாமி

படங்கள்: தி.விஜய், வ.இரா.தயாளன்

நன்றி: பசுமை விகடன், முகநூல்

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *