இயற்கை விவசாயத்தில் ஆண்டு முழுவதும் திராட்சை!

இயற்கையின் எழில் கொஞ்சும் திண்டுக்கல் சிறுமலை அடிவாரம். அங்கே மூன்று ஏக்கரில் விரிந்து கிடக்கும் ஜானகிராமனின் திராட்சைத் தோட்டத்தில் ஆண்டு முழுவதும் திராட்சை கொத்துக்கொத்தாய் காய்த்துத் தொங்குகிறது. எல்லாம் இயற்கை விவசாயத்தில் விளைந்தவை.

இயற்கை விவசாயத்தில் திராட்சையெல்லாம் சாத்தியமா?

’’மதுரையில் எங்களுக்கு ஜவுளி வியாபாரம். போதிய அளவுக்கு வருமானம் இருக்கு. எஞ்சிய காலத்துக்குச் சும்மா இருக்க வேண்டாமேன்னுதான் நண்பர் ஒருவரோட ஆலோசனைப்படி இந்தத் தோட்டத்த வாங்கினேன். ஏற்கெனவே, இங்கே ரசாயன உரம் பயன்படுத்தித் திராட்சை போட்டிருந்தாங்க. வருசத்துக்கு மூன்று தவணை மகசூல் எடுப்பாங்க.

இந்தத் தோட்டத்தின் முந்தைய உரிமையாளர் என்கிட்ட விக்கிறப்ப, “சார்… திராட்சை விவசாயத்துல முதல் தவணைக்கு ரூ. 43 ஆயிரம் செலவழிச்சேன். ரூ. 29 ஆயிரம்தான் வருமானம் கிடைச்சுது. அதனால, இந்த இடத்துல விவசாயம் பண்ண நினைச்சீங்கன்னா நட்டப்பட்டுப் போவீங்க.

பிளாட் போட்டு வித்தீங்கன்னா நல்ல லாபம் பாக்கலாம்’னு சொன்னார். ஆனா, நாங்க தோட்டத்த வாங்கினதுமே ஏக்கருக்கு லட்ச ரூபாய் தர்றோம். எங்களுக்குத் தோட்டத்த குத்தகைக்குக் குடுங்க’ன்னு சில பேரு வந்து கேட்டாங்க. ’லாபம் இல்லாமலா இப்படிக் கேப்பாங்க?’ன்னு உள்ளுக்குள்ள ஒரு யோசனை. என்ன வந்தாலும் வரட்டும்னு நாங்களே திராட்சை போட்டோம்’’ என்கிறார் ஜானகிராமன்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

பதினேழும் ஐம்பதும்

ரசாயன உரங்கள் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்துடன் களத்தில் இறங்கிய ஜானகிராமன் திராட்சைக்கும் இயற்கை உரங்களையே பயன்படுத்தி இருக்கிறார். இதைப் பார்த்துவிட்டு அக்கம்பக்கத்துத் தோட்டக்காரர்கள், ‘இதெல்லாம் இங்க சரிப்பட்டு வராது. நல்லா வாங்குபடப் போறீங்க’ என்று எச்சரித்திருக்கிறார்கள்.

தோட்ட வேலைக்கு வந்தவர்கள்கூடக் கிண்டல் அடித்திருக்கிறார்கள். ‘காசு போனாலும் போகுது. நான் ரசாயன உரம் போடமாட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார் ஜானகிராமன். அவரது முயற்சிக்கு உரிய பலன் கிடைத்தபோது அருகிலுள்ள தோட்டத்துக்காரர்கள் மூக்கின் மீது விரலை வைத்தார்கள்.

“ரசாயன உரங்களைக் கொட்டி ஒரு தவணைக்கு அவர்கள் 7 டன் திராட்சை அறுவடை செய்தார்கள். அதே அளவு நிலத்தில் எந்த உரமும் போடாமல் நான் மூன்றரை டன் திராட்சை எடுத்தேன். அதிகமாய்ச் செலவு செய்து அவர்கள் உற்பத்தி செய்யும் திராட்சையைக் கிலோ 17 ரூபாய்க்கு விற்கிறார்கள். ஆனால், பெரிய அளவில் செலவில்லாமல், இயற்கை விவசாயத்தில் நாங்கள் விளைவிக்கும் திராட்சை கிலோ 50 ரூபாய்க்குப் போகிறது.

இது மருந்து

எங்களது திராட்சையை அப்படியே சென்னையிலுள்ள ஆர்கானிக் கடைகளுக்கு அனுப்பிவிடுவோம். இப்ப திராட்சைக்கு நடுவில் வல்லாரையை ஊடு பயிராகப் போட்டிருக்கோம். அதை கிலோ 200 ரூபாய்க்கு எடுக்கிறார்கள். திராட்சைக்கு ஒரு தடவை கவாத்து செய்தால், அடுத்த நாலாவது மாதத்தில் அறுவடை எடுக்கலாம். ஒட்டு மொத்தத் தோட்டத்தையும் ஒரே நேரத்தில் கவாத்து செய்தால், ஒரே நேரத்தில் மகசூல் கிடைத்துவிடும். இப்படி ஒரே நேரத்தில் மொத்தமாகத் திராட்சையை விளைவித்தால், அதை சந்தைப்படுத்துவது சிரமம்.

அதனால், தோட்டத்தில் எந்த நேரமும் திராட்சை இருப்பது போல் விளைவிக்கத் திட்டமிட்டோம். அதன்படி கவாத்து முறைகளை மாற்றியதால், இப்போது எங்கள் தோட்டத்தில் மாதா மாதம் திராட்சை அறுவடை செய்கிறோம். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கும் திராட்சைகள் கேன்சர் போன்ற நோய்களை உண்டாக்குவதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இயற்கை விவசாயத்தில் நாங்கள் விளைவிக்கும் திராட்சைகள் கேன்சருக்கு மருந்தாகப் பயன்படுது. பணம் காசு கெடக்கட்டும். நாம விளைவிக்கிற பொருளால யாருக்கும் எந்தக் கெடுதலும் வரக் கூடாது, அதுதான் முக்கியம்’’ என ஆத்மார்த்தமாகப் பேசுகிறார் ஜானகிராமன்.

தொடர்புக்கு: 09150009998

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை விவசாயத்தில் ஆண்டு முழுவதும் திராட்சை!

Leave a Reply to Rajasekar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *