தென்னை விவசாயிகளுக்குப் புதிய ஆலோசனைகள்

‘பெற்ற பிள்ளை கைவிட்டாலும் நட்ட தென்னை கைவிடாது’ என நம்பிய டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகளின் நம்பிக்கையை  நொறுக்கிவிட்டது கஜா புயல். அரசு வழங்கும் நிவாரணம் தற்காலிகத் தேவையை வேண்டுமானால் தீர்க்கலாம். ஆனால், தொலைத்த எதிர்காலத்தை மீட்டெடுக்க என்ன வழி உள்ளது எனத் தெரியாமல் தவிக்கும் அவர்களுக்குக் குறுகிய காலத்தில் பலனுக்கு வரும் தென்னை ரக சாகுபடி, ஊடுபயிர் சாகுபடி குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அரசு வழங்க வேண்டியது அவசியம்.

தென்னை மரங்கள் மற்ற மரங்களை போல ஆணி வேர் அமைப்பைக் கொண்டது அல்ல. அதிகப்படியான சல்லிவேர் அமைப்பைக் கொண்டவை. டெல்டா பகுதியின் மண், பலவீனமானது. தென்னங்கன்றுகளை வேளாண் அறிவியல் முறைப்படி நடவுசெய்யாமல், மண்வெட்டியால் மேலோட்டமாக 2 அடி ஆழத்துக்குக் குழி தோண்டி நடவு செய்துள்ளனர்.

இதனால் கஜாவின் வேகத்தை இந்த மரங்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்தும், மரங்களின் தண்டுகள் உடைந்தும், குருத்துகள் பாதிக்கப்பட்டும் உள்ளன. இதில் முற்றிலும் வேரோடு சாய்ந்த மரங்கள் மீண்டும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை.

“வேர்ப் பகுதிகள் வெளியே தெரியாமல் சாய்ந்துள்ள தென்னை மரங்களில், 3 வயதுக்குட்பட்ட மரங்களின் வேர்ப் பகுதிகள் உயிர்ப்புடன் இருந்து, அடிப்பகுதியின் உட்பகுதியில் திசுக்கள் காயமடையாமல் இருந்தால் அவற்றை மறுநடவு செய்யலாம்.

ஆனால், அவற்றின் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 50 சதவீதம் மட்டுமே உள்ளது” என்கிறார் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ராஜமாணிக்கம்.

தமிழகத்தில் தென்னை நடவு செய்ய சதுர முறை, செவ்வகமுறை, முக்கோணமுறை, வரப்புமுறை, சமதளக் கால்வாய் முறை ஆகிய நடவு முறைகள் பின்பற்றப்படுகின்றன. மண் வகை, பருவநிலை, மற்றும் குட்டை, நெட்டை, கலப்பின ரகங்களுக்கு ஏற்ப நடவு முறைகள் மாறுபடுகின்றன.

எந்த நடவு முறையைப் பின்பற்றினாலும் நீர், சூரிய வெளிச்சம் ஆகியவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவுமுறை அமைய வேண்டும். ஒழுங்கற்ற நடவுமுறைகளால் மகசூல் பாதிக்கப்படுவதுடன் பெரும் இயற்கைச் சீற்றங்களுக்கு மரங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் வேருடன் சாய்ந்துவிடும். தென்னங் கன்றுகளை நடவு செய்யும் முறையில் விவசாயிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் ராஜமாணிக்கம் சொல்கிறார்

தென்னை நடவு செய்ய குழி எடுக்கும் முறை

தென்னை நடவுசெய்ய வயலை நன்றாக உழவுசெய்த பின்னர் குட்டை, நெட்டை ரகங்களுக்கு 25×25 அடி இடைவெளியும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 27×27 அடி இடைவெளியில் 3x3x3 நீளம், அகலம், உயரத்துக்குக் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு குழிக்குத் தொழு உரம், ஆற்றுமணல் மற்றும் செம்மண் ஆகியவற்றைக் குழியில் போட்டு வேளாண் பல்கலைக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் தென்னை நாற்றுப்பண்ணையில் வழங்கப்படும் தரமான தென்னங்கன்றுகளைத் தேர்வு செய்து நட வேண்டும்.

இளங்கன்று பருவத்தில் அசோஸ்பைரில்லம் 100 கிராம், பாஸ்போபாக்டிரியா 100 கிராம், டிரைக்கோடெர்மா விரிடி 100 கிராம், சூடோமோனஸ் 100 கிராம், வேம்பு 100 கிராம் என்ற அளவில் கலந்து குழியைச் சுற்றிப் போட வேண்டும்.

நடவு செய்யப்படும் குழிகளில் வேப்பம் புண்ணாக்கு இடுவதால் பூச்சிகள், எறும்புகள் ஆகியவற்றின் தாக்கம் கட்டுப்படும். மேலும் குழிக்கு 1 கிலோ உப்பு போட்டு கரையானைக் கட்டுப்படுத்தி ஈரப்பதத்தைச் சேமிக்கலாம்.

டெல்டா பகுதிக்கு வழங்க உள்ள நெட்டை ரக தென்னங்கன்றுகள்.

உர நிர்வாகம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்களைப் பயிர் பாதுகாப்பு மேலாண்மை மூலம் மீட்டெடுக்கும் வழிமுறையையும் அவர் பகிர்ந்துகொண்டார். 1 முதல் 3 வயதுடைய சாய்ந்த தென்னை மரங்களை முட்டுக்கொடுத்து நிறுத்த வேண்டும். பின்னர் ஒரு மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்பேட், 3.5 கிலோ மியூரியேட் ஆப் பொட்டாஷ், 0.5 மக்னீசியம் சல்பேட், 0.05 கிலோ போராக்ஸ், 1 கிலோ ஜிப்சம், 50 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 100 கிராம் டிரைகோடார்மாவிரிடி, 50 கிலோ மக்கிய தொழுஉரம், 100 கிராம் சூடோமோனாஸ், புளுரசன்ஸ் மற்றும் வேம்பு 50 கிராம் ஆகியவற்றைக் கொண்டு உர நிர்வாகம் செய்ய வேண்டும்.

மகசூல் இழப்பைத் தடுக்க:

தென்னை மரங்களில் மகசூல் இழப்பைத் தவிர்க்க மரம் ஒன்றுக்கு 200 மி.லி. வீதம் 6 மாத இடைவெளியில் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் வேர் மூலம் அளிக்க வேண்டும். தென்னையில் சாறு வடிதலை கட்டுப்படுத்த வேர் மூலம் ஹெக்ஸகோனசால் மருந்தையும், பூஞ்சாண் தாக்குதலைக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு பசையும் பயன்படுத்தலாம்.

தென்னையில் ஊடுபயிர்:

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் தென்னை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டதால், புதிய கன்றுகளை நடவு செய்து 8 ஆண்டுகள் வரை தென்னையில் ஊடுபயிராக சோளம், நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு, இஞ்சி, வாழை போன்ற பயிர்களையும், 8 முதல் 15 ஆண்டுகள் வரை நிழலை நேசிக்கக்கூடிய கொள்ளு, தட்டைப்பயிறு, நேப்பியர், கினியா புல் போன்ற தீவன பயிர்களையும் 15முதல் 20 வயது வரை ஜாதிக்காய், அன்னாசி, கறிபலா எலுமிச்சை, செடி முருங்கை ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் வருவாய் பெறலாம் என்றார்.

இயற்கைச் சீற்றத்தால் எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் டெல்டா பகுதி மக்களுக்கு, வயிற்றுப் பசிக்கு உணவும், வாடைக் காற்றுக்குப் போர்வையும் தந்து உடனடித் தேவையைப் போக்கலாம், புயல் காற்றோடு போன ஒரு தலைமுறை உழைப்பையும் அடுத்த தலைமுறைக்கான சேமிப்பையும் மீட்டெடுக்க வழி தெரியாமல் அச்சத்துடன் உள்ள விவசாயிகளுக்கு, மீண்டெழ வீரிய ரக விதைகள், அறிவியல் சார்ந்த ஆலோசனைகள், வேளாண் தொழில்நுட்பங்கள், பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி வழிக்காட்டுவதே கஜா ஏற்படுத்திய காயத்துக்கு மருந்தாக அமையும்.

:நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தென்னை விவசாயிகளுக்குப் புதிய ஆலோசனைகள்

  1. Rajangam says:

    அய்யா நான் குட்டை நெட்டை தென்னங்கன்றுகளை நடவிரும்புகிறேன்.வேப்பங் குளம் ஆராய்சிப்பண்ணையில் க்க்குமா? 350 கன்றுகள் தேவை. தொலைப்பேசி எண்ணை தெரிந்து
    கொள்ள முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *