காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணி: இடைக்காலத் தடை

மீத்தேன் திட்டமென்ற பூதம் எப்படி தஞ்சை மாவட்டத்தை அழிக்கும் என்று முன்பே படித்தோம். இதை எதிர்த்து  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர பட்டுள்ள வழக்கில் இடை கால தடை கொடுக்க பட்டு  உள்ளது.இது ஒரு ஆரம்பமே. நீண்ட வழக்குக்கு நாம் தயார் செய்து கொள்ள .வேண்டும். இதை பற்றிய செய்தி இதோ…

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் பணியை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையிலுள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், திருவாரூரைச் சேர்ந்த பி.எஸ்.பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்ட காவிரி டெல்டா பகுதியில் மத்திய அரசு நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ஓ.என்.ஜி.சி),தனியார் நிறுவனத்துடன் இணைந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு முறையான அனுமதியை மாநில அரசிடம் இருந்தும், சுற்றுச் சூழல் துறையிடம் இருந்தும் பெறவில்லை. எனவே, இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தாக்கல் செய்த வழக்கு ஆகும். இந்த வழக்கில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமதி சங்கமித்திரை ‘மீத்தேன் திட்டத்தால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று கூறினார். அப்பொழுது வைகோ எழுந்து,

‘மீத்தேன் எரிவாயுத் திட்டம், காவிரி தீரத்தை அடியோடு பாழாக்கும் திட்டம் ஆகும். அதிக ஆழத்தில் குழிகளைத் தோண்டி 635 நச்சுத் தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களைத் தண்ணீரோடு கலந்து பலத்த அழுத்தம் கொடுத்துச் செலுத்தப் போகிறார்கள்; அதனால் விளைநிலங்கள் பாழாகும்; தண்ணீர் நஞ்சாகும்; கட்டடங்கள் இடியும். அதனால்தான், அமெரிக்காவில் நியூ யார்க் மாநில ஆளுநர் 2014 டிசம்பர் 17 இல் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை, நியூ யார்க் மாநிலம் முழுமையும் தடை செய்து விட்டார்.

மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசனோடு  ஒப்பந்தம் செய்தது.

நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் திட்ட அபாயம் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, இடைவிடாது ஒரு மாத காலம் ஊர் ஊராகச் சென்று நான் பிரச்சாரம் செய்தேன்; மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தத் திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை.

கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் அறிவித்த காலத்திற்குள் மீத்தேன் எரிவாயு திட்டத்தைத் தொடங்காததால், அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் மீத்தேன் எரிவாயு திட்டத்தைக் கைவிடவில்லை.

தற்போது, மேற்கூறிய மூன்று மாவட்டங்களிலும், இராமநாதபுரம் சிவகங்கை அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களிலும் மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓஎன்ஜிசி)  மூலமாக மீத்தேன் எரிவாயுக் கிணறுகளைத் தோண்டுவதற்கு ஏற்பாடுகளைத் தந்திரமாகச் செய்து வருகிறது. இதனை விவசாயிகளும், பொதுமக்களும், நாங்களும் எதிர்க்கிறோம். எனவே, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு தேசிய தீர்ப்பு ஆயம் தடை விதிக்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டார்.

இதன்பின் அந்த அமர்வில் இருந்த நீதிபதி ஜோதிமணி, தொழில் நுணுக்க நிபுணர் நாகேந்திரன் கலந்து பேசி, ‘மீத்தேன் எரிவாயு வழக்கில் பசுமைத் தீர்ப்பு ஆயத்திற்கு, வைகோ அவர்கள் ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று ஜோதிமணி அறிவித்தார். தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது ஓ.என்.ஜி.சி. சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகளுக்கு மாநில மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தேவையில்லை. இத்திட்டம் தொடங்கும்போது அனுமதி பெறப்படும் என்று கூறியுள்ளனர்.
இதை ஏற்க முடியாது. எனவே, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் பணிக்கு வரும் திங்கள்கிழமை வரை இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்.
மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, வேறு ஒரு வழக்கிற்காக ஆஜராகி இருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மீத்தேன் எரிவாயு திட்டத்தை அமல்படுத்தினால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடும்.
அப்பகுதியை 30 நாள்கள் நேரில் சென்று ஆய்வு செய்ததாகவும் கூறினார். எனவே, அவரை இந்த வழக்கில் இந்தத் தீர்ப்பாயத்துக்கு உதவும் நபராக நியமிக்கிறோம். விசாரணை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *