நெல்லி சாகுபடியில் லாபம் எடுக்கும் விவசாயி

திண்டுக்கல் – தாடிக்கொம்பு ரோட்டில் உள்ளது பூதிப்புரம். இங்குள்ள விவசாயி ராஜூவின் நெல்லித்தோட்டம் 2.5 ஏக்கரில் உள்ளது. இதில் ஒரு ஏக்கரில் 265 பெருநெல்லி மரங்களும், மூன்று சிவப்பு நெல்லி மரங்களும் நட்டுள்ளார்.
சிவப்பு நெல்லி (பி.எஸ்.ஆர்.1) மரங்களிலுள்ள பூக்களில் ஆண் மகரந்த தூள்கள் உள்ளன. அவை பெருநெல்லி மரங்களின் மகரந்த தூளுடன் சேர்ந்து மகசூலை அதிகரிக்கின்றன. இதனை முறையாக பயன்படுத்தி ஆட்டுச் சாணம், மக்கிய தொழு உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நெல்லி சாகுபடியில் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு லட்சம் லாபம் பெற்று அசத்துகிறார் விவசாயி ராஜூ!
அவர் கூறியதாவது:

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

நிலத்திற்கு ஏற்றாற்போல் நன்கு இடைவெளி விட்டு மரங்களை நட்டு, வளர்த்தோம். வளரும் பருவத்தில் ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கு தண்ணீர் விட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நீர் பாய்ச்ச சொட்டு நீர்ப்பாசனத்தை ரூ.58 ஆயிரம் செலவில் அமைத்தோம்.
இதற்கு தோட்டக்கலைத்துறை மூலம் மானியமாக ரூ.12 ஆயிரத்து 500 கிடைத்தது. பின் ஒன்றரை ஆண்டில் செழித்து வளர்ந்த மரங்கள் அடுத்த இரண்டரை ஆண்டில் பூத்து, காய்த்துக் குலுங்கின. நான்கரை ஆண்டுகளில் விளைச்சல் அதிகரித்தது. இடையில் அடிஉரம், தொழு உரம், ஆட்டுக் கழிவுகளின் இயற்கை உரங்களை இட்டதால் பூக்கள் விரைவாக பூக்கத் துவங்கின.
அதிக எடையுடன் நெல்லி மொத்தம் 265 பெருநெல்லி மரங்களில் மரத்திற்கு 100 கிலோ முதல் 150 கிலோ வரை விளைச்சல் இருந்தது. நன்கு விளைந்த ஒரு நெல்லிக்காயின் எடை 105 முதல் 110 கிராம் வரை இருந்தது. இதுதவிர இயற்கை முறையில் விளைந்த நெல்லி  என்பதால் விற்பனை செய்வதும் சுலபமாக இருந்தது.
முதல் 4 ஆண்டுகளில் உள்ள விளைச்சலை விட தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு 10 டன் அளவில் விளைச்சல் கிடைக்கிறது. அவ்வப்போது கவாத்து எடுப்பதும் விளைச்சல் அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கிறது. நெல்லிக் காய்களின் அளவை பொறுத்து விலை கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது. ஏக்கருக்கு செலவு போக ஒரு லட்சம் கிடைக்கிறது, என்றார். அதிக மகசூலுக்காக தோட்டக்கலைத்துறையின் மூலம் ஊக்கத்தொகையாக ரூ.5 ஆயிரமும் பெற்றுள்ளார் விவசாயி ராஜூ.

இவரை 9976621067 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-வீ.ஜெ.சுரேஷ், திண்டுக்கல்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நெல்லி சாகுபடியில் லாபம் எடுக்கும் விவசாயி

Leave a Reply to senthilkumar.R Cancel reply

Your email address will not be published. Required fields are marked *