நெல் பயிரில் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த வழிகள்

நெல் சாகுபடியில் நோய் கட்டுப்பாடு மிகவும் அவசியம். நெல் பயிரைக் குலை நோய், இலைப்புள்ளி நோய், இலை உறை கருகல் நோய், கதிர் உறை அழுகல் நோய், நெல் மணி அழுகல் நோய் போன்ற பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.

இந்த நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையூர் மண்டல வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய நோயியில் துறை உதவிப் பேராசியர் கி.கல்பனா கூறியது:

குலை நோய்:

  • இந்த நோய் நாற்றங்காலில் தொடங்கி கதிர் விடும் பருவம் வரை எல்லா நிலைகளிலும் தாக்குகிறது.
  • நோயின் அறிகுறிகளை இலை, கதிரின் கழுத்துப் பகுதி மற்றும் தானிய விதைகளின் மீது காணலாம்.
  • நோயின் தொடக்க நிலையில் சிறிய ஊதா கலந்த பச்சை நிறத்தில் புள்ளிகளாகத் தோன்றி, பின்னர் நீள் வடிவத்தில் சாம்பல் நிற மையப் பகுதியையும், பழுப்பு நிற ஓரத்தையும் கொண்ட பெரிய புள்ளிகளாக மாறும். கடுமையாகத் தாக்கப்பட்ட நாற்றங்கால், நெல் வயல் எரிந்து போனது போலத் தோற்றமளிக்கின்றன.

மேலாண்மை:

  • நோய் எளிதில் தாக்கும் ரகங்களை பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • கார்பென்டசிம் அல்லது திரம் (2 கிராம் 1 கிலோ விதைக்கு) போன்ற பூசணக் கொல்லி கொண்டு விதையை நேர்த்தி செயவதன் மூலமும், கார்பென்டசிம் 200 கிராம் அல்லது டிரைசைக்லோஸ் 400 கிராம் அல்லது கார்பென்டசிம் 200 கிராம் (ஒரு ஹெக்டருக்கு) தெளிப்பதின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இலைப்புள்ளி நோய்:

  • பயிரின் எல்லாப் பருவங்களிலும் இந்த நோய் தாக்கும்.
  • பழுப்பு நிற சிறு புள்ளிகளாக இலைகளில் தோன்றி, பின்னர் பெரிதாகி புள்ளிகள் இணைந்து பெரிய புள்ளிகளாகத் தோன்றும். இதனால், இலை கருகி விடும். இந்த நோய் தாக்குவதால், விதை முளைக்கும் திறன் குறைகிறது. இளம் நாற்று இறந்து விடும்.

மேலாண்மை:

  • வயல் மற்றும் வரப்புகளை களையின்றி வைத்திருத்தல், நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களைப் பயிரிடுதல், திரம் அல்லது கோப்டன் அல்லது கார்பென்டாசிம் (2 கிராம் 1 கிலோ விதைக்கு) கொண்டு விதை நேர்த்தி செய்தல் மற்றும் மேங்கோசெப் 80 கிராம் அல்லது கேப்டபால் 40 கிராமை 8 சென்ட் நாற்றங்காலுக்கும், நடவு வயலில் ஹெக்டருக்கு கார்பென்டாசிம் 250 கிராம் அல்லது மேங்கோசெப் 1 கிலோ அல்லது புரப்பிகொனசோல் 200 மி.லி. தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.

இலை உறை கருகல் நோய்:

  • இந்த நோய் பயிரை தூர் விடும் சமயத்திலிருந்து கதிர் விடும் சமயம் வரை தாக்குகிறது.
  • முதலில் தண்ணீருக்கு அருகில் உள்ள இலைகளில் காணப்படும். பிறகு நீள் வட்ட வடிவ பச்சை கலந்த பழுப்பு நிறப் புள்ளிகளாக காணப்படும். பிறகு, இந்தப் புள்ளிகள் பெரிதாகி சாம்பல் நிற மையப் பகுதியையும் பழுப்பு நிற ஓரப் பகுதியையும் கொண்டு இருக்கும். பிறகு இந்தப் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேல் நோக்கிப் பரவி இலை உறை கருகல் நோயை ஏற்படுத்துகிறது.

மேலாண்மை:

  • அதிக நெருக்கமாகப் பயிரை நடவு செய்யாமல், போதிய இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
  • நோய் தாக்கிய வயலிலிருந்து அறுவடைக்குப் பின்னால் கிடக்கும் பயிர் பாகங்களை நீக்கி விட வேண்டும்.
  • வயல் வெளிகளையும் வரப்புகளையும் களைகள் இன்றி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
  • தழைச்சத்து உரத்தை பிரித்து இடுதல் அவசியம்.
  • யூரியாவை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இடுதல் வேண்டும்.
  • நோய் தாக்கிய வயலிலிருந்து அடுத்த வயல்களுக்குப் பாசன நீர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • ஹெக்டருக்கு கார்பென்டாசிம் 250 கிராம் அல்லது புரப்பிகொனசோல் 200 மி.லி. மருந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

கதிர் உறை அழுகல் நோய்:

  • இந்த நோய் கதிரை மூடியுள்ள இலை உறையைத் தாக்கும்.
  • இந்தப் பூசணம் நீள வட்ட அல்லது ஒழுங்கற்ற சாம்பல் பழுப்பு நிற புள்ளிகளாகத் தோன்றும். இவை பெரிதாகி சாம்பல் நிற மையத்தையும் பழுப்பு நிற ஓரப் பகுதியையும் கொண்டிருக்கும்.

மேலாண்மை:

  • பரிந்துரையின் படி விகிதத்தில் உரங்களை இடுதல், சரியான இடைவெளியில் பயிர்களை நடுதல் மற்றும் கார்பென்டாசிம் 250 கிராம் அல்லது குளோரோதிலோனில் (1 கிலோ ஒரு ஹெக்டருக்கு) என்ற அளவில் பூட்டைப் பருவத்தில் 15 நாள்கள் இடைவெளியில் விட்டு இரு முறை தெளிக்க வேண்டும்.

நெல்மணி அழுகல் நோய்:

  • இந்த நோய் நெல் மணிகளில் மட்டுமே காணப்படும். நோய் தாக்கிய நெல் கதிரில் உள்ள நெல் மணியும் பூஞ்சாணத் தாக்குதல் மஞ்சள் நிறமடைந்துவிடும். இதனால், நெல் மணியின் தரம் குறைந்து மணி பிடிப்புத் திறனும் பாதிக்கும்.

மேலாண்மை:

  • நோய் தாக்கதாத விதைகளைப் பயன்படுத்துதல், முன் கூட்டி நடவு செய்தல், வயல்கள் மற்றும் வரப்புகளைச் சுத்தமாக வைத்திருத்தல், அதிக தழைச் சத்து இடுவதைத் தவிர்த்தல், அறுவடை செய்யும் போது நோய் தாக்கிய நெல்மணிகளை அகற்றுதல் ஆகியவற்றின் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நெல் பயிரில் அதிக லாபம் ஈட்டலாம்.

தொடர்புக்கு: 04343290600.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நெல் பயிரில் பூஞ்சாண நோய்களை கட்டுப்படுத்த வழிகள்

Leave a Reply to R.Meganathan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *