40 சென்ட்டில் லாபம் கொடுக்கும் ‘ரெட் லேடி’ பப்பாளி!

ற்போது குறைவான தண்ணீர் மற்றும் குறைவான பராமரிப்புத் தேவைப்படும் பயிர்களைத்தான் விவசாயிகள் விரும்பிச் சாகுபடி செய்கிறார்கள். அப்படிக் குறைந்த பராமரிப்பில் நிறைந்த லாபம் தரும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது, பப்பாளி. அதனால்தான், பல விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இருந்து வருகிறது. அந்தவகையில், பப்பாளியை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன்.

விருதுநகரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீசலூர் கிராமத்தில்தான், தனபாலனின் தோட்டம் இருக்கிறது. ஒரு காலை வேளையில் பப்பாளி அறுவடைப் பணியில் இருந்த தனபாலனைச் சந்தித்தோம்.

“எனக்குச் சொந்த ஊர் இதுதான். வீடும் தோட்டமும் இங்கேயேதான் இருக்கு. பரம்பரையா விவசாயம் செய்றோம். வெண்டை, சீனி அவரை, நிலக்கடலைனு அப்பா விவசாயம் செஞ்சுட்டுருந்தாங்க. நான் 7-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திட்டு அப்பாகூட விவசாயம் செஞ்சுட்டுருந்தேன்.

இடையில வெளிநாட்டு வேலை கிடைக்கவும் போயிட்டேன். அங்க பத்து வருஷம் வேலை பார்த்தேன்.  உடம்புக்கு முடியாமப் போகவும், அங்கயிருந்து ஊர் திரும்பி விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். அப்பா வழியிலேயே நானும் ரசாயன உரம் போட்டு… சம்பங்கி, செண்டுமல்லி, வாழைனு சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். பெரிசா சொல்லிக்கிற மாதிரி மகசூலும் இல்லை, வருமானமும் இல்லை. ஆனாலும் அப்படியே ஓட்டிட்டுருந்தேன்.

என் பொண்ணு மீசலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில படிக்கிறா. அவங்க பள்ளிக்கூடத்துல வேலை பார்க்குற ‘டிராயிங் மாஸ்டர்’ கந்தசாமி சார், ஸ்கூல் பிள்ளைங்களுக்கு இயற்கை விவசாயம் பத்திச் சொல்லிக் கொடுப்பார். அவரும் இயற்கை விவசாயம் செஞ்சுட்டு வர்றார். பிள்ளைங்ககிட்ட பேசி விவசாயம் செய்ற பெற்றோர்களை வரவழைச்சு இயற்கை விவசாயம் பத்தி எடுத்துச் சொல்வார். அப்படி ஒருமுறை என்னையும் வரச்சொல்லி மகள்கிட்ட சொல்லிவிட்டார்.

அவர்கிட்ட நான் செய்ற விவசாயம் பத்திச் சொன்னேன். விளைச்சல் பத்தியெல்லாம் கேட்டுட்டு ‘ரசாயன உரத்தைப் பயன்படுத்தக்கூடாது. இயற்கை விவசாயம் செய்ங்க. நான் இயற்கை முறையில வெள்ளரிச் சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். என் தோட்டத்துக்கு வந்து பாருங்க’னு சொன்ன கந்தசாமி சார், அடுத்தநாளே என் தோட்டத்துக்கு வந்துட்டார். வாழைக் கன்னுகள் வாடிப்போயிருந்ததைப் பார்த்துட்டு, ‘நாலு நாளுக்கு ஒருதடவை பஞ்சகவ்யா கொடுங்க’னு சொன்னார்.

அவர் சொன்ன மாதிரி பஞ்சகவ்யா தயாரிச்சுக் கொடுக்க ஆரம்பிச்சதும், வாழைக்கன்னுகள் செழிப்பா மாறுச்சு. இலையெல்லாம் பச்சையா மாற ஆரம்பிச்சது. தொடர்ந்து அவர் சொல்லிக் கொடுத்த மாதிரி ஜீவாமிர்தம் தயாரிச்சுக் கொடுத்தேன். அதுல ஓரளவுக்கு நல்ல மகசூல் கிடைச்சது. ‘பசுமைவிகடன்’ புத்தகத்துல கந்தசாமி சார் பண்ற வெள்ளரிச் சாகுபடி பத்தி வெளிவந்திருந்தது. அந்தப் புத்தகத்தை என்கிட்ட கொடுத்துப் படிக்கச் சொன்னார். அதுல இருந்து தொடர்ந்து படிச்சுட்டுருக்கேன்.

இப்போ முழுமையா இயற்கை விவசாயம்தான் செஞ்சுட்டுருக்கேன். அடுத்து என்ன பயிர் செய்யலாம்னு கேட்டப்போ கந்தசாமி சார்தான், ‘பப்பாளிச் சாகுபடி செய்ங்க. பராமரிப்பும் குறைவு, செலவும் குறைவு’னு சொன்னார். அப்புறம்தான் 40 சென்ட் பரப்புல ‘ரெட்லேடி’ ரகப் பப்பாளியைப் போட்டேன். இப்போ அறுவடை நடந்துட்டுருக்கு” என்று, தான் இயற்கை விவசாயத்துக்கு வந்த கதை சொன்ன தனபாலன், பப்பாளி வயலுக்குள் அழைத்துச் சென்று காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.

“மொத்தம் 1 ஏக்கர் 60 சென்ட் நிலம் இருக்கு. சுக்காம்பாறை கலந்த மண். கண்மாய் வண்டல் மண்ணைக் கொட்டிப் பரப்பியிருக்கேன். 80 சென்ட் நிலத்துல சக்கை ரக வாழை இருக்கு. 40 சென்ட் நிலத்துல பப்பாளி போக மீதி 40 சென்ட் நிலத்தைச் செண்டுமல்லி நடவு செய்யத் தயார் செஞ்சு வெச்சுருக்கேன்.

வருஷக்கணக்குல ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் கொட்டி மண்ணே மலடாகிப்போச்சு. இப்போ ஒன்றரை வருஷமாத்தான் இயற்கை விவசாயம் பண்ணிட்டுருக்கேன். இயற்கை விவசாயத்துக்கு மாறினதுக்கப்புறம்தான் பயிர்கள்ல செழிப்பைப் பார்க்குறேன். சாகுபடிச் செலவும் குறைவாத்தான் இருக்கு” என்ற தனபாலன், வருமானம் குறித்துச் சொன்னார்.

“மொத்தம் 350 பப்பாளிக்கன்னுகளை நட்டுருந்தேன். அதுல 50 கன்னுகள் பட்டுப்போச்சு. மீதி 300 மரங்கள்ல இருந்து ரெண்டு மாசமா பழங்கள் பறிச்சுட்டுருக்கேன். இதுவரைக்கும் 22 பறிப்புகள் மூலமா 2,123 கிலோ பழத்த ஒரு கிலோ 10 ரூபாய், 12 ரூபாய்னு வித்ததுல 21,830 ரூபாய் கிடைச்சிருக்கு. உழவுல இருந்து இதுவரைக்கும் 13,000 ரூபாய்ச் செலவாகியிருக்கு. ஆரம்பத்துலயே நல்ல மகசூல்தான், போக போக இன்னும் மகசூல் அதிகரிக்கும். அந்தச் சமயத்துல மாம்பழம், பலாப்பழம் சீசன் முடிஞ்சுடுங்கிறதால பப்பாளிக்கு நல்ல விலை கிடைக்க ஆரம்பிக்கும்னு நம்பறேன்” என்ற தனபாலன் நிறைவாக,

“இப்போதைக்கு விருதுநகர் சந்தையில்தான் பழங்களை விற்பனை செய்றேன். இயற்கைப் பப்பாளினு தனி விலையெல்லாம் கிடைக்கிறதில்லை. ஆனாலும், நஞ்சில்லா பழத்தை விற்பனை செய்றோம்னு எனக்குத் திருப்தி கிடைக்குது. காய்ஞ்சு கருகுற நிலையில இருந்த வாழையைக் காப்பாத்துனது இயற்கை விவசாயம்தான். அதேமாதிரி பப்பாளிச் சாகுபடியிலயும் நல்ல மகசூல் எடுப்பேன்” என்று கண்களில் நம்பிக்கை பொங்கச் சொன்ன தனபாலன், அறுவடை செய்த பழங்களைச் சந்தைக்கு எடுத்துச் செல்வதில் மும்முரமானார்.

7 அடி இடைவெளி!

40 சென்ட் பரப்பில் ரெட்லேடி ரகப் பப்பாளியைச் சாகுபடி செய்யும் முறை குறித்துத் தனபாலன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே…

ரெட்லேடி ரகப் பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகைப் பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த நிலத்தில், ஓர் உழவு செய்து, ஒரு மாதம் காயவிட வேண்டும். பிறகு சட்டிக்கலப்பை கொண்டு ஓர் உழவு செய்து பத்து நாள்கள் காயவிட வேண்டும். மீண்டும் டில்லர் கொண்டு உழவு செய்து பத்து நாள்கள் காயவிட வேண்டும்.

பிறகு, 7 அடி இடைவெளியில்… ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி விட்டம் என்ற அளவில் குழிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிக்குள்ளும் தலா 5 கிலோ அளவு தொழுவுரம் போட்டு, கொஞ்சம் மேல்மண்ணைக் கொட்டி, ஒருவாரம் காயவிட வேண்டும். பிறகு ஒவ்வொரு குழியிலும்… 1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் சூடோமோனஸைக் கலந்து ஊற்றி, கன்றுகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 25 முதல் 40 நாள் வரை வயதுள்ள கன்றுகள் நடவுக்கு ஏற்றவை. தொடர்ந்து மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சினால் போதும். சொட்டுநீர்ப்பாசனம் அமைப்பது சிறந்தது.

நடவு செய்த 10-ம் நாள், ஒவ்வொரு கன்றின் தூரிலும்… ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் சூடோமோனஸ், 3 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றைக் கலந்து ஊற்ற வேண்டும். 25-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 30 மில்லி பஞ்சகவ்யா, 30 மில்லி அசோஸ் ஸ்பைரில்லம், 30 மில்லி பாஸ்போ பாக்டீரியா, 30 மில்லி ரைசோபியம் ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு கன்றின் தூரிலும் ஒரு லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும். 10 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

20 நாள்களுக்கு ஒருமுறை 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 40 மற்றும் 70-ம் நாள்களில் களைகளை அகற்ற வேண்டும். பிறகு தேவைப்பட்டால் களைகளை அகற்றலாம்.

60-ம் நாள் ஒவ்வொரு கன்றின் தூரிலும்… 50 கிராம் வேப்பம்பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப்பிண்ணாக்கு, 100 கிராம் ஆமணக்குப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து வைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

140 முதல் 150-ம் நாளுக்குள் ஒவ்வொரு கன்றுக்கும் ஒரு கிலோ மண்புழு உரம், 2 கிலோ தொழுவுரம் ஆகியவற்றைத் தூர்ப்பகுதியில் வைக்க வேண்டும். 6-ம் மாத தொடக்கத்தில் பூக்கள் தென்படும். 6-ம் மாத இறுதியில் பிஞ்சு பிடித்து 7-ம் மாத்தில் காய்க்கத் துவங்கும். 7-ம் மாத இறுதியில் இருந்து காய்களைப் பறிக்க ஆரம்பிக்கலாம். மாவுப்பூச்சிகள் தென்பட்டால் கைத்தெளிப்பான் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி தெளித்தாலே போதுமானது.

தொடர்புக்கு, தனபாலன், செல்போன்: 9566725125.

நன்றி: பசுமை விகடன்

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “40 சென்ட்டில் லாபம் கொடுக்கும் ‘ரெட் லேடி’ பப்பாளி!

  1. ராஜ்சிங் says:

    சிறப்புகள் அருமை நண்பர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் வாழ்த்துக்கள் உறித்தாக்கு

Leave a Reply to ராஜ்சிங் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *