வறட்சிப் பகுதிகளிலும் வருமானம் கொடுக்கும் ‘புளி’!

  • புரட்டாசிப் பட்டம் ஏற்றது
  • புளியங்கொட்டை ஒரு கிலோ 15 ரூபாய்
  • இரும்புச்சத்து அதிகம் கொண்டது
  • பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை அறுவடை
  • நாட்டு ரகத்தில் 10 ஆண்டுகளில் பலன்
  • விற்பனையில் பிரச்னையில்லை
  • ஒட்டு ரகத்தில் 4 ஆண்டுகளில் பலன்

று சுவைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது… இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளைத்தான். அதில், புளிப்புச் சுவைக்காக உணவில் நாம் பயன்படுத்தும் விளைபொருள் புளி. அன்றாட உணவுகளில் சுவை கூட்டுவதில் புளிக்கு முக்கிய இடமுண்டு. தேவை அதிகமிருப்பதால், பல இடங்களில் தனிப்பயிராகவே ஏக்கர் கணக்கில் புளி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புளி சாகுபடியும், அது சார்ந்த வணிகமும் பரவலாக உண்டு. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் புளி வணிகத்துக்குப் பெயர் போனவை. இப்பகுதிகளில் புளி சாகுபடியில் ஈடுபட்டு வருவர்களில் பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் ஒருவர்.

புளியந்தோப்பில் வேலையில் இருந்த முருகேசனைச் சந்தித்தோம். “விவசாயக் குடும்பம்னாலும், அப்பாவுக்கு புளி வியாபாரம்தான் முக்கியத் தொழில். ஊர் ஊரா சுத்தி புளி வாங்கிட்டு வருவார். அந்தச் சமயத்துல குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்துல கடலைக்காய் (நிலக்கடலை), சோளம்னுதான் வெள்ளாமை வெப்போம். ஒரு கட்டத்துல நாமளே புளி சாகுபடி செய்யலாம்னு 1970 வருஷம் வாக்கில புளியங் கன்றுகளை நடவு போட ஆரம்பிச்சோம். உரிகம் புளிங்கிற ரகத்துக்கு நல்ல விலை கிடைக்குங்கிறதால, அந்த ரகங்களை அதிகமா நடவு செஞ்சோம். அடுத்தடுத்து மத்த ரகங்களையும் கலந்து நட்டுக்கிட்டே வந்ததுல இப்போ, முப்பது ஏக்கர் பரப்புல புளிய மரங்கள் இருக்குது. அப்பறம், குடும்பத்துல சொத்து பிரிக்கிறப்போ, பன்னிரண்டரை ஏக்கர் நிலம் என் பங்காக வந்தது. அதுல 9 ஏக்கர் புளியந்தோப்பு. மீதி நிலத்துல நெல், நிலக்கடலை, மல்லிகைப் பூ…னு விவசாயம் செய்றேன். இந்த 9 ஏக்கர்ல 300 உரிகம் புளி மரங்களும், 100 மகாராஷ்டிரா ரக மரங்களும், 100 நாட்டு ரகமும், 60 ஒட்டு ரகங்களும் இருக்கு” என்ற முருகேசன், ஒவ்வொரு ரக மரங்களையும் அடையாளம் காட்டினார்.

சாகுபடிச் செலவு குறைவு!

“புளி சாகுபடியில் பெருசா செலவு கிடையாது. செடியை நட்டு வளர்ற வரைக்கும் ஆடு, மாடுகள்ட்ட இருந்து காப்பாத்தறதுதான் வேலை. அதுக்கப்பறம் தானாவே மரங்கள் வளர்ந்துடும். ஒட்டுக்கட்டி வர்ற உரிகம் புளி, கலப்பின புளி ரகங்கள் எல்லாம் நாலாவது வருஷத்துல இருந்தே மகசூல் கொடுக்க ஆரம்பிச்சிடுது. ஆனா, நாட்டு ரகங்கள் பலன் கொடுக்க 10 வருஷம் ஆகும். நாங்க வெச்சது எல்லாமே நாட்டு ரகங்கள்தான். பொதுவா புளியமரங்கள் மலை சார்ந்த, மிதமான குளிர் இருக்கிற பகுதிகள்ல நல்லா வளரும். ஆனா, வறட்சியான தர்மபுரி மாவட்டத்துலயும் கூட நல்லா வளருது. மழை கிடைச்சா மகசூல் நல்லா இருக்கும். மழை இல்லாட்டி மகசூல் குறைஞ்சிடும். இப்போ, இந்தப் பகுதிகள்ல சிறு விவசாயிகள்கூட புளிய மரத்தை வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

இருப்பு வைத்து விற்கலாம்!

பிப்ரவரி மாதத்துல இருந்து ஏப்ரல் மாதம் வரை புளி அறுவடையாகும். விற்பனைக்கு பிரச்னையே இல்லை. இதை பத்து மாசம் வரை இருப்பு வெச்சி கூட விற்பனை செய்யலாம். இப்போ குளிர்பதனக் கிடங்குகள்ல பத்து மாசத்துக்கும் மேல இருப்பு வைக்க முடியுது. அதனால, மார்க்கெட்ல விலை ஏறும்போது, விற்க முடியும். சேலம், ‘லீ பஜார்’ல இருக்கிற புளி மார்க்கெட்தான் விற்பனைக்கு முக்கிய சந்தை. இந்தப் பகுதி விவசாயிகளும், வியாபாரிகளும் அங்கதான் விற்பனை செய்றோம். புளியைப் பறிச்சு, காயவெச்சி, கொட்டையெடுத்து வட்டமா தட்டி (வட்ட வடிவில் தட்டிய புளியை ‘சப்பாத்தி’ என்று சொல்கிறார்கள்) விற்பனைக்குக் கொண்டு போவோம்” என்ற முருகேசன், மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

ஓடு, கொட்டை அனைத்திலும் வருமானம்!

“9 ஏக்கர்ல இருந்து ஓட்டோடு கூடிய 8 டன் புளி கிடைக்கும். இதை அப்படியே விற்பனைக்கு அனுப்பினா ஒரு டன் புளிக்கு 22 ஆயிரம் ரூபாய் வரை விலை  கிடைக்கும். நான் கொட்டை நீக்கி, சப்பாத்தி ஆக்கித்தான் விற்பனை செய்கிறேன். ஓடு நீக்கும்போது ஒரு டன்னுக்கு 250 கிலோ ஓடு கழியும். 8 டன் புளியை ஓடு நீக்கும்போது, 6 டன் ஓடு நீக்கின புளி கிடைக்கும். அதுல கொட்டை நீக்கும் போது, 4 டன் புளியும் 2 டன் கொட்டையும் கிடைக்கும். 4 டன் புளியில நாரைப் பிரிச்சா 3 ஆயிரத்து 600 கிலோ புளி கிடைக்கும். அதைத்தான்  சப்பாத்தி வடிவத்துல மாத்தி விற்பனை செய்வோம்.

ஒரு டன் சப்பாத்தி புளி, 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகுது. இப்படி பார்க்கும்போது மொத்தம் 2 லட்சத்து 77 ஆயிரத்து 200 ரூபாய் கிடைக்கும். ஒரு டன் ஓடு 5 ஆயிரம் ரூபாய்னு விலை போகும். 2 டன் ஓடு விற்பனை மூலம் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு டன் கொட்டை 15 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். 2 டன் கொட்டை மூலமா 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆக, மொத்தம் 9 ஏக்கர் நிலத்தில இருந்து 3 லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல புளி பறிப்பு, நசுக்கிற கூலி, அதை சப்பாத்தி ஆக்கி பண்டல் கட்டும் கூலி உட்பட 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும். 1 லட்சத்து 92 ஆயிரத்து 200 ரூபாய் லாபமா நிக்கும். நல்ல மழை கிடைச்சா… இன்னும் காய்ப்பு அதிகரிச்சு லாபமும் அதிகரிக்கும். மரங்களுக்கு எந்தப் பராமரிப்பும் இல்லாமலே லாபம் கொடுக்கிறது புளிய மரங்கள் மட்டும்தான்” என்றார், சந்தோஷமாக!

புளி சாகுபடி குறித்து முருகேசன் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே…

“நாட்டு ரகங்களுக்கு 40 அடி இடைவெளி தேவை. இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 25 மரங்கள் நடவு செய்யலாம். ஒட்டு ரகங்களுக்கு 25 அடி இடைவெளி போதுமானது. இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 60 மரங்கள் நடவு செய்யலாம். புரட்டாசிப் பட்டம் புளி நடவுக்கு ஏற்றது. தேர்ந்தெடுத்த நிலத்தில், 2 அடி சதுரம் 2 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ களிமண்ணைக் கொட்டி, கன்றுகளை நடவு செய்து பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு 3 மாதங்களுக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மழையைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது. செடிகள் வளரும் நேரத்தில் ஊடுபயிர்களை சாகுபடி செய்து கொள்ளலாம். வேறு பராமரிப்புகள் தேவையில்லை. மரங்கள், காய்ப்புக்கு வந்த பிறகு… மரத்தின் அடியில் தார்ப்பாய் விரித்து கிளைகளை உலுக்கினால், பழங்கள் உதிர்ந்து விடும். அறுவடை முடிந்ததும் மரங்களை கவாத்து செய்து விட வேண்டும்.”

உரிகம் புளிக்கு கூடுதல் விலை!

தர்மபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச்சங்க துணைத் தலைவர் பி. பச்சை உரிகம் புளி பற்றிய சில விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“நாட்டு ரகங்கள்ல நல்ல தரமான ரகம் ‘உரிகம் புளி’ங்கிற ரகம். இது, நீளமா அதிக சதையோட இருக்கும். இனிப்போடு கூடுதல் புளிப்பு கலந்த சுவை இருக்கும். பிசுபிசுப்புத் தன்மை அதிகமா இருக்கும். உரிகம் புளிக்கு மற்ற ரகங்களை விட கிலோவுக்கு 20 ரூபாய் வரை கூடுதல் விலை கிடைக்கும். இந்தப் புளி, சதை அதிகமா இருக்குறதால மகசூலும் அதிகமா இருக்கும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை தாலூகா அஞ்செட்டிக்கு பக்கத்தில் ‘உரிகம்’னு ஒரு கிராமம் இருக்குது. இந்த கிராமத்துல இருக்கிற நூறு வருஷம் பழமையான ஒரு நாட்டு ரக புளிய மரத்துல இருந்துதான் உருவாக்குற கன்றுகளை அந்த ஊர் பெயர்லயே  ‘உரிகம் புளி’னு சொல்றாங்க. இந்த மரத்தை அரசாங்கம்தான் பராமரிச்சுக்கிட்டு இருக்கு. பாப்பாரப்பட்டி பகுதிகள்ல 40 வருஷங்களுக்கு மேல புளி வியாபாரம் குடிசைத் தொழிலா நடக்குது. மைசூர் பக்கம் இருந்து வர்ற நாட்டு ரக புளியும் உரிகம் புளி மாதிரியே இருக்கும். பொதுவாக சந்தையில் நீளமான, சதைப் பற்றுள்ள புளிக்கு நல்ல கிராக்கி இருக்கும்” என்றார்.

குடிசைத் தொழில் வாய்ப்பு!

மரத்தில் இருந்து அறுவடை செய்த புளியை வாங்கி, கொட்டை எடுத்து விற்பனை செய்து வருகிறார், சிட்லகரம்பட்டியைச் சேர்ந்த தருமராஜா.

“50 சென்ட் நிலத்துல புளிய மரங்கள் வெச்சிருக்கேன். மைசூர் பக்கம் இருந்து புளியம்பழங்களை வாங்கிட்டு வந்து காய வெச்சி, ஓடு, கொட்டை, நார் பிரிச்சு விற்பனை செய்துட்டு இருக்கேன். எல்லா வேலைகளுக்கும் இங்க ஆட்கள் கிடைக்கிறாங்க. புளியை சப்பாத்தி மாதிரி தட்டி ஓலைப்பாயில் சுருட்டி, கட்டு கட்டுவோம். ஒரு கட்டுக்கு 40 கிலோ புளி இருக்கும். இந்தப் பகுதியில கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேருக்கு மேல இந்தத் தொழில்ல இருக்கோம்” என்றார்.

நாட்டு ரகங்களில்தான் பலன் அதிகம்!

20 ஆண்டுகள் வளர்ந்த மரத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 300 கிலோ அளவு புளி கிடைக்கும். 50 ஆண்டுகளுக்கு மேல் வளர்ந்த மரங்களில் ஒரு டன் வரை புளி கிடைக்கும். ஒட்டு ரகங்களில் 4 ஆண்டுகளிலேயே ஒரு மரத்திலிருந்து சராசரியாக 100 கிலோ வரை புளி கிடைக்கும். நாட்டு ரக மரங்கள் வளர்வதற்கு ஆண்டுகள் அதிகமானாலும், நன்றாகக் கிளைத்து வளரும். அதனால் மகசூல் கூடுதலாகக் கிடைக்கும். நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், நாட்டு ரகங்கள் மூலமாகத்தான் அதிக பலன் எடுக்க முடியும்.

 

தொடர்புக்கு,
முருகேசன், செல்போன்: 09443272149

நன்றி: பசுமை விகடன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *