வாகை மரம் வளர்ப்போம்!

வாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற்றிபெற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆடு, மாடுகளுக்குத் தீவனம், நிலத்துக்குத் தழையுரம், வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்ற பலன்களோடு… மண்ணரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது இந்த வாகை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மையுடைய இந்த மரம், நமது தோட்டத்தில் இருந்தால்… அது, வங்கியில் போட்டு வைத்த வைப்புநிதிக்கு ஒப்பானது.

முருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும் இந்த மரம், மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. வாகை மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து, பாலில் கலந்து குடித்து வந்தால்… பசி எடுக்காத பிரச்னை தீரும், வாய்ப்புண் குணமாகும். இதன் பூக்களை நீர் விட்டு பாதியாகச் சுண்டும் அளவுக்குக் காய்ச்சிக் குடித்தால், வாதநோய் குணமாகும். விஷத்தையும் முறிக்கும்.

மானாவாரிக்கு ஏற்றது !

வாகை மரங்கள் வணிகரீதியாகவும் அதிகப் பலன் தருபவை. மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைத்தாலே… 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் கிடைக்கும். அத்துடன் ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது. இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த வாகையை வளர்க்கும் முறைகளைப் பற்றி பார்ப்போமா..?

அனைத்து மண்ணிலும் வளரும் !

வாகை அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம்… என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். தவிர, 0.11% உப்பும், கார, அமில நிலை 8.7 உள்ள நிலங்களிலும்கூட இது வளரும். நிலங்களில் இந்த அளவுக்கு மேல் களர் தன்மை இருந்தாலும், நடவு செய்யும் முன் குழியில் ஒரு கிலோ ஜிப்சம், ஒரு கிலோ தொழுவுரத்தை இட்டு, நடவு செய்தால் போதும்.

ஒன்பது அடி இடைவெளி !

நடவு செய்யும் நிலத்தை நன்றாக உழவு செய்து  ஒரு கன அடி குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்-1 கிலோ, வேர் வளர்ச்சி உட்பூசணம் (வேம்)-30 கிராம், தொழுவுரம்-1 கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா தலா-15 கிராம் ஆகியவற்றை போட்டு, 9 அடிக்கு 9 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்யும்போது ஏக்கருக்கு 540 கன்றுகள் தேவைப்படும்.

நடவு செய்த 6-ம் மாதம் கன்றைச் சுற்றிக் கொத்தி விட்டு, தொழுவுரம், ஆட்டு எரு இரண்டையும் தூள் செய்து 1 கிலோ அளவுக்கு குழியைச் சுற்றி தூவி விட்டால்… விரைவாக வளரும். ஆடு, மாடுகளுக்கு எட்டாத உயரத்துக்கு மரம் வளரும் வரை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

 

ஒரு வரிசையைக் கழிக்க வேண்டும் !

சாதாரண நிலங்களில் ஆரம்ப காலங்களில் ஆண்டுக்கு ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். நல்ல வளமான நிலங்களில் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். நடவு செய்த ஐந்து ஆண்டுகள் வரை வாகையில் கிடைக்கும் தழைகளைக் கால்நடைகளுக்கும், உரத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம், என்பதால்தான் 9 அடி இடைவெளியில் நடவு செய்கிறோம். 5 ஆண்டு வயதுக்கு மேல் வணிகரீதியாகப் பலன் பெற, மரத்தைப் பருக்க வைக்க வேண்டும்.

இதற்காக ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள மரங்களை வெட்டி விட வேண்டும். வெட்டிய மரங்களை விறகுக்கு விற்பதன் மூலம் குறிப்பிட்ட அளவு தொகை வருவாயாகக் கிடைக்கும். மரங்களைக் கழித்த பிறகு, ஒரு ஏக்கரில் 270 மரங்கள் இருக்கும்.

நடவு செய்த 10-ம் வருடத்தில் மரங்களை அறுவடை செய்யலாம். நன்கு வளர்ச்சியடைந்த ஒரு மரம் 80 சென்டி மீட்டர் பருமனும் 18 மீட்டர் உயரமும் கொண்டிருக்கும். ’10 ஆண்டுகள் வளர்ந்த மரம் தற்போது சராசரியாக 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகிறது’ என வியாபாரிகள் சொல்கிறார்கள். சராசரியாக ஒரு மரம் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானாலும்… ஒரு ஏக்கரில் இருக்கும் 270 மரங்கள் மூலமாக 27 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

வேம்பை விட வேகமா வளருது !

வாகையை தனிப்பயிராக சாகுபடி செய்திருக்கிறார் மதுரை மாவட்டம், டி. குன்னத்தூர் சுபாஷ். அவருடைய அனுபவம்… உங்களுக்கு உதவியாக இருக்கும். அவருக்குக் கொஞ்சம் காதுகொடுங்களேன்… ”மூணு ஏக்கர்ல வாகையை சாகுபடி செஞ்சுருக்கேன். 20 அடிக்கு 20 அடி இடைவெளியில நடவு செஞ்சு, நாலரை வருஷமாச்சு. ஏக்கருக்கு 110 மரம் இருக்கு. நடவு செஞ்ச ஆறு மாசம் வரைக்கும்தான் தண்ணி கொடுத்தோம். அதுக்குப் பிறகு பாசனம் செய்யல. மானாவாரியாகவே வளர்ந்துடுச்சு.

வாகை நடவு செஞ்சப்பவே… பக்கத்துல இருக்குற இடத்துல வேம்பு, புளி ரெண்டையும் நடவு செஞ்சேன். என்னோட அனுபவத்துல வேம்பை விட ரெண்டு மடங்கு வேகமா வளருது வாகை. 10 வருஷத்துல இதை வெட்டலாம்னு சொல்றாங்க. இன்னிக்கு நிலவரத்துக்கு பத்து வருஷ மரம் 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது. குறைஞ்ச பட்சம் 10 ஆயிரம்னு வெச்சுக்கிட்டாலும் ஏக்கருக்கு 11 லட்ச ரூபா கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.”

இனி உங்கள் வசதி வாய்ப்பை யோசித்து, வாகையை நடவு செய்யுங்கள்… வாகை சூடுங்கள்!

தொடர்புக்கு சுபாஷ்,
செல்போன்: 9842752825 .

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “வாகை மரம் வளர்ப்போம்!

  1. KD says:

    அய்யா வாகை மரம் சாலை ஓரங்களில் உள்ள தூங்கு மூஞ்சி மரம் என்பார்களே அதுவா.

Leave a Reply to KD Cancel reply

Your email address will not be published. Required fields are marked *