வாழைகளை தாக்கும் வாடல் நோய்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, பர்கூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ஏலக்கி வாழை ரகத்தை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள மல்லிநாயனப் பள்ளியில் 1.5 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ள விவசாயி தேவேந்திரன் (48) கூறியது:

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாழைக் கன்றுகளை வாங்கி நடவு செய்து நன்றாக வளர்ந்துள்ளன. சில நாள்களாக வாழை இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் சிறிது நாள்களிலேயே பாதிக்கப்பட்ட இலையின் காம்புகள் ஒடிந்து விடுகின்றன. 4 அல்லது 5 வாரங்களில் மரங்கள் காய்ந்து விடுகின்றன.இப்போது வாடல் நோய் தாக்குதலால் பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த நோய் குறித்து டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.சுந்தராஜ் கூறியது:

  • பொதுவாக ஏலக்கி வாழை மரத்தில் ஒரு வகை பூஞ்சானால் பரவக் கூடிய பனாமா என்ற ஃப்யூசேரியம் என்ற வாடல் நோய் தாக்குவதில்லை.
  • இந்த பூஞ்சானின் வீரியம் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருப்பதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த நோய் தாக்குதல் அதிகமாக இருக்கிறது.
  • வளமான, சிறிது கார குணமுடைய மண் வகைகளில் நல்ல வடிகால் வசதிகள் செய்து கரும்புச் சக்கையை பரப்பி யூரியா, உரமிடுதல் மூலம் வாழையை இந்த நோயிலிருந்து காப்பாற்ற சிறந்த வழியாகும்.
  • வயலில் நீரைத் தேக்கி வடித்து 6 மாதங்கள் வேறு பயிர் செய்யாமல் காய விடுவதன் மூலம் நோய்க் கிருமிகள் வாழ்விழந்து தோட்டம் தூய்மையாக்கப்படும்.
  • நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மரத்தை கிழங்கோடு தோண்டி எடுத்து எரிக்க வேண்டும்.
  • மேலும் நோய் பரவுவதைத் தடுக்க நோய் காணும் குழியில் சுண்ணாம்பை குழிக்கு 1.2 கிலோ வீதம் போட்டி ஆற செய்யலாம்.
  • 3 மில்லி 2 சத கார்பென்டாசிம் கரைசலை 45 டிகிரி கோணத்தில் கிழங்கில் 10 செ.மீ. ஆழத்தில் ஊசி மூலம் உள் செலுத்த வேண்டும்.
  • ஒரு மாத இடைவெளியில் மீண்டும் ஊசி மூலம் மருந்தை செலுத்துவன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • மேலும் விவரங்களுக்கு 04343296039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்

நன்றி:தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *