நம்பிக்கையூட்டும் புதிய பயிர்க் காப்பீடு!

விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை ஓரளவுக்குப் பூர்த்திசெய்யும் வகையில் ‘பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டிருக்கிறது.

ரூ.17,600 கோடி மதிப்பிலான திட்டம் இது. இதை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ளும். காரிஃப் பருவத்தின்போது உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகளைப் பயிரிடும் விவசாயிகள், காப்பீட்டு நிறுவனம் நிர்ணயிக்கும் காப்பீட்டுச் சந்தாவில் 2% மட்டுமே செலுத்தினால் போதும். ராபி பருவத்தின்போது சந்தாவில் 1.5% மட்டுமே செலுத்தினால் போதும். இவ்விரு பருவங்களிலும் பயிரிடப்படும் தோட்டப் பயிர்கள், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பணப் பயிர்களுக்கு சந்தாவில் 5% மட்டும் செலுத்தினால் போதும். எஞ்சிய சந்தாவை மத்திய, மாநில அரசுகள் சமவிகிதத்தில் பகிர்ந்துகொள்ளும்.

இந்தக் காப்பீட்டில் பயிர் இழப்பு ஏற்பட்டால் விவசாயிகள் பெறக்கூடிய இழப்பீட்டுக்கு உச்ச வரம்பு கிடையாது. காப்பீடு செய்யும் அளவுக்கும் வரம்பு கிடையாது. இதுவரை சாகுபடிப் பரப்பில் 25%-ஐ மட்டுமே காப்பீடு செய்ய முடியும். இழப்பீடாகத் தரும் தொகைக்கு முன்னர் உச்ச வரம்பு இருந்தது, இப்போது அதுவும் நீக்கப்பட்டுவிட்டது.

புயல், மழை, பருவம் தப்பிய மழை, வறட்சி, நிலச்சரிவு, அறுவடையின்போதான மழை போன்ற காரணங்களால் ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு பெற முடியும். பயிர்ச் சேதத்தின் அளவையும் தீவிரத்தையும் மதிப்பிட செயற்கைக்கோள்கள், ஆளில்லா சிறுவிமானங்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். விவசாயிகள் தங்களுடைய கைபேசியிலும் புகைப்படங்களை எடுத்துப் பதிவேற்றம் செய்யலாம்.

இத்தகவல் கிடைத்து சரிபார்க்கப்பட்டதும் இழப்பீட்டு மதிப்பில் 25% விவசாயியின் வங்கிக் கணக்கில் உடனடியாகச் சேர்க்கப்படும். பெரிய விவசாயிகள் அதிகப் பரப்பளவில் பயிரிட்டிருந்தாலும் இதில் சேரவும், காப்பீடு பெறவும் எந்தத் தடையும் இல்லை. ஒரு மாநிலம் முழுக்க ஒரேயொரு காப்பீடு நிறுவனம்தான் இப்பணியை மேற்கொள்ளும். எனவே, இழப்பீடு கோருதல், பெறுதல் போன்றவை அலைச்சல் இல்லாமல் நடைபெறும்.

இத்திட்டத்தில் இன்னொரு சாதகமான அம்சம், பயிருக்குக் காப்பீடு செய்யப்படுவதால், அரசுடைமை வங்கிகளில் விவசாயச் செலவுகளுக்குக் கடன் பெறுவதும் எளிது. கடன் வேண்டாம் என்பவர்கள்கூட காப்பீடு செய்துகொள்ளலாம். இதற்கு முன்னால், தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், திருத்தப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டன. அவற்றுக்குப் போதிய வரவேற்பு இல்லாததற்கான காரணங்கள் ஆராயப்பட்டு நீக்கப்பட்டிருக்கின்றன.

நிலம் சொந்தமாக இல்லாமல் குத்தகைக்கு நிலத்தைப் பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகளும் இத்திட்டத்தில் பலன் பெற உரிய சட்டத் திருத்தங்களை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

இத்திட்டத்தை அமலாக்கும்போது பிரச்சினைகளும் இடர்களும் தோன்றக்கூடும். அவற்றை மத்திய, மாநில அரசுகள் இணைந்து களைய வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களின் அதிகாரிகளும் ஊழியர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விவசாயிகள் சங்கம், வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இணைந்து இதை வெற்றிகரமான திட்டமாக உருவாக்கி, விவசாயிகளின் தற்கொலை நடைபெறாமல் தடுக்க வேண்டும். அரசின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று அது!

நன்றி: ஹிந்து

நம் கருத்து:

செயற்கை கோள்கள் மூலம் பாதிப்பான இடங்களை அறிவிப்பது, விவசாயிகள் தன் மொபைல் போன்கள் மூலம் போட்டோ எடுத்து இன்சூரன்ஸ் கம்பனிகளுக்கு அனுப்பி இழப்பீடை வாங்குவது, அது நேரடியாக விவசாயிகளின் பேங்க் அக்கௌன்ட் அனுப்புவது போன்ற தொழிற்நுட்ப முன்னேற்றங்களை இந்த திட்டம் செயல் படுத்தி உள்ளது. இதன் மூலம் இயற்கை மூலம் வரும் பயிர் இழப்புகளை குறைக்க வழி  கூடும். நல்ல எண்ணங்கள் கொண்ட இந்த திட்டம் வெற்றி அடைவது செயல்படுத்துவதில் தான் இருக்கிறது


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நம்பிக்கையூட்டும் புதிய பயிர்க் காப்பீடு!

Leave a Reply to செல்வராஜ் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *