வேலையாட்கள் பற்றாக்குறையை போக்கும் பண்ணைக் கருவிகள்

நெல் சாகுபடியின்போது வேலையாட்கள் பற்றாக்குறையை போக்க பண்ணைக் கருவிகளை பயன்படுத்தலாம் என ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் ச.சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:

  • நெல் பயிரிடும்போது நிலம் தயாரிப்பில் இருந்து அறுவடை வரை பல்வேறு உழவியல் பணிகளை மேற்கொள்வதற்கு வேலையாட்கள் பற்றாக்குறையின் காரணமாக விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
  • ஒரே சமயத்தில் நெல் சாகுபடி தொடங்குவதாலும், வேளாண் பணிகளை செவ்வனே செய்யவும் மட்டுமே மொத்த சாகுபடி செலவில் 60 சதவீதம் வரை செலவிட வேண்டியுள்ளது.
  • நெல் சாகுபடிக்கு, நிலத்தை பண்படுத்துவதில் இருந்து அறுவடை செய்வது வரையிலான பல்வேறு பணிகளை செய்வதற்கு திறன்மிக்க பல கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இக் கருவிகளை சரியான தருணத்தில் பயன்படுத்துவதன் மூலம் வேலையாட்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன் குறுகிய காலத்தில் பணிகளை முடிக்கலாம்.

நிலத்தை பண்படுத்துதல்:

  • நெல் சாகுபடிக்கு ஏற்றவாறு நிலத்தைப் பண்படுத்துவதற்கு முதல் உழவு, சேறு கலக்குதல், சமப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வது அவசியம். உழவு செய்வதற்கு இரும்பு கலப்பை முதல் சட்டிக் கலப்பை வரை பல்வேறு இயந்திரங்களும், சேறு கலக்குதவற்கு டிராக்டருடன் கூடிய இரும்பு சக்கரங்கள் மற்றும் சுழல் கலப்பைகள் பயன்படுத்தலாம்.
  • மேலும் இவை பயன்படுத்துவதற்கு முன், பசுந்தழை உரங்களை பரப்பி பின்னர் பயன்படுத்துவதன் மூலம், இவை நிலத்துடன் நன்கு கலந்து மண்ணின் வளத்தை மேம்படுத்த உதவுகின்றன.
  • இத்தகைய இயந்திரங்களை பயன்படுத்துவதால், 30 முதல் 40 சத நேரத்தையும், வேலையாட்களின் பளுவையும் குறைக்கலாம்.

நாற்று நடுதல்:

  • நெல் நாற்றுகளை தகுந்த பருவத்தில் நடவு செய்தால்தான், அவை குறிப்பிட்ட காலத்துக்குள் நன்கு வளர்ந்து அதிக மகசூலை கொடுக்கும்.
  • பணியாட்களின் பற்றாக்குறை காரணமாக, சரியான வயதில் நாற்றுகளை நட இயலவில்லை. எனவே இதை நிவர்த்தி செய்ய நேரடி நெல் விதைப்புக் கருவி மற்றும் நாற்று நடும் கருவியை பயன்படுத்தலாம்.

நாற்று நடும் கருவி:

  • பாய் நாற்றாங்காலின் மூலம் வளர்க்கப்படும் நெல் நாற்றுகளை வரிசைக்கு வரிசை மற்றும் பயிருக்கு பயிர் 25 செ.மீ. இடைவெளியில் இருக்குமாறு இக்கருவியின் மூலம் நடவு செய்யலாம்.
  • இரண்டு பெண் பணியாளர்கள் மற்றும் இக்கருவியை இயக்குபவர் என மூன்று நபர்களின் மூலம் நாள் ஒன்றிற்கு 1 முதல் 1.5 ஏக்கர் வரை நடவு மேற்கொள்ளலாம். சாதாரண முறை நடவில் ஒரு ஏக்கருக்கு 20 வேலையாள்கள் தேவைப்படுகின்றனர்.

நேரடி நெல் விதைக்கும் கருவி:

  • நான்கு உருளை வடிவப் பெட்டிகளைக் கொண்ட இக் கருவியின் மூலம் 15 செ.மீ. இடைவெளியில் முளைகட்டிய விதைகளை நேரடியாக விதைக்கலாம்
  • ஒருவர் மட்டுமே தேவைப்படும் இக்கருவியை கொண்டு நாளொன்றுக்கு 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் விதைகளை விதைக்கலாம்.

களை எடுத்தல்:

  • ஓர் ஏக்கருக்கு ஒரு முறை களை எடுக்கவே 10 முதல் 12 ஆட்கள் தேவைப்படுகின்றனர்.
  • கோனோ களைக் கருவி கொண்டு நாள் ஒன்றுக்கு 30 சென்ட் வரை களைகளை நீக்குவதுடன் அவை மண்ணோடு மட்க வைக்கப்படுகின்றன.
  • மேலும் இக் கருவிகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், வேர்களுக்கு காற்றோட்டம் கிடைக்கிறது.
  • இதனால் பயிரில் அதிக தூர்கள் வெடிக்க உதவுவதுடன் பயிர்கள் நன்கு வேரூன்றி வளர உதவுகிறது. இதனால் பயிர் உற்பத்திச் செலவு குறைவதுடன் துரித முறையில் களையே உரமாக மாற்றப்படுகிறது.
இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணி. Courtesy: Dinamani
இயந்திரம் மூலம் நெல் நடவு செய்யும் பணி. Courtesy: Dinamani

 

 

 

 

 

 

 

 

அறுவடை:

  • நெல்பயிரை அறுவடை செய்து கதிரடிப்பதற்கு மிகுந்த ஆட்களும், நேரமும் தேவைப்படுகின்றன.
  • மொத்த உற்பத்தியில் 10 முதல் 35 விழுக்காடு பணியாட்கள் இப்பணிக்கே பயன்படுத்தப்படுகின்றனர்.
  • இப்போது அறுவடை, கதிரடித்தல், தூற்றுதல் போன்ற அனைத்து பணிகளையும் ஒரே சயமத்தில் செய்யும் ஒன்றுபட்ட கூட்டு அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • இதன் மூலம் ரூ.2,500 முதல் ரூ.3,000 செலவில் ஓர் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிரானது எளிதில் அறுவடை செய்யப்படுகிறது.

இவ்வாறு நெல் சாகுபடியில் பல்வேறு இயந்திரங்கள் உதவிகரமாக இருப்பதால், இவற்றை திறன்பட உபயோகிப்பதன் மூலம் 15 விழுக்காடு மகசூல் அதிகரிப்பதுடன் வேலையாட்களின் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “வேலையாட்கள் பற்றாக்குறையை போக்கும் பண்ணைக் கருவிகள்

Leave a Reply to saravanan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *