ஸ்வீடன் மாணவிகளின் ‘இயற்கை விவசாய’ ஆர்வம்!

தமிழ்நாட்டிலேயே இயற்கை விவசாயம், அதை வலியுறுத்திய நம்மாழ்வார் ஆகியோரை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நம்மாழ்வார் தொடங்கிய குடும்பம் அமைப்பு நடத்தும் இயற்கைப் பண்ணையில், இயற்கை விவசாயம், சூழலியல் பற்றி அறிந்துகொள்ள ஸ்வீடனில் இருந்து வந்திருக்கிறார்கள் மாணவிகள். ப்ரெட், ஜாம் என்று உடலுக்கு உன்னதம் தராத துரித உணவுகளையே இதுவரை சாப்பிட்டு வந்த அவர்கள், இங்கே கம்பங்கூழ், ராகி ரொட்டி என்று சாப்பிட்டு, அதன் ருசிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். அதோடு, இயற்கை வேளாண்மை, இயற்கையைக் காக்க இங்கே ஏற்பட்டிருக்கும் எழுச்சிக்குக் காரணமான நம்மாழ்வார் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டபின், “இனி எங்கள் உணவு கூழ்தான். குரு நம்மாழ்வார்தான்” என்று சிலாகித்துச் சொல்கிறார்கள்.

நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட குடும்பம் அமைப்பு, புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் உள்ள ஒடுகம்பட்டியில் இயங்கி வருகிறது. அங்கே இயற்கைப் பண்ணை, இயற்கை வாழ்வியல், வயல், பள்ளி என்று அமைத்து, இயற்கை ஆர்வலர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள். அந்த வகையில், இங்கே ஒரு வருட கோர்ஸ் படிக்க ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இல்வாவும், ஐரினும், ஃபெலிசியாவும் வந்திருக்கிறார்கள். அவர்களின் இயற்கை குறித்த ஆர்வத்தைப் போற்றும்விதமாக சமீபத்தில் கரூர் மாவட்டம், வானகத்தில் நடந்த நம்மாழ்வார் பிறந்தநாள் விழாவில் அவர்களை அழைத்து வந்து கௌரவித்தார்கள்.

  நம்மாழ்வார் ஸ்வீடன் மாணவி

முதலில் பேசிய இல்வா, “நாங்க ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள பிஸ்காஃப் எரேனா என்கிற கல்லூரியில் சுற்றுச்சூழல் மற்றும் சகோதரத்துவம் என்கிற மூன்று வருடப் படிப்பை படித்து வருகிறோம். எங்க நாட்டு கல்வி அமைப்பில், மூன்று வருட படிப்பில் ஒரு வருடம் வெளிநாடுகளில் நாங்க கோர்ஸ் படிக்க வேண்டும். அதன்படிதான், நாங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்து, இங்க வந்தோம். ஸ்வீடனில் உள்ள ‘பியூச்சர் எர்த்'(எதிர்கால பூமிக்கான கூட்டமைப்பு) மூலமா இந்தியாவைத் தேர்ந்தெடுத்து, இங்க ஒரு வருஷ பயிற்சி கோர்ஸூக்கு வந்தோம். வந்த புதுசுல எங்களுக்கு இங்க உள்ள சாப்பாடு பிடிக்கலை. பிரெட், ஜாம்ன்னு சாப்பிட்டோம். ஆனால், மெள்ள மெள்ள இங்க உள்ள கம்பங்கூழ், கேப்பை கூழ், ராகி ரொட்டி, அரிசி சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவுகள் எங்களுக்குப் பிடிக்க ஆரம்பித்தது. குறிப்பா, கூழ் எங்க பேவரைட். அதேபோல், இங்குள்ள கொய்யாப்பழம், பப்பாளி, தர்பூசணி, பலாப்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட நாட்டுப்பழங்கள் நிறைய பிடிக்கிறது. இங்குள்ள காய்கறிகளும் எங்களுக்குப் சாப்பிடப் பிடிக்கிறது. கிட்டத்தட்ட எங்கள் நாட்டு உணவுகளையே நாங்கள் மறந்துட்டோம். `நாங்கள் இதுவரை சாப்பிட்டது சாப்பாடு அல்ல, முழுக்க முழுக்க விஷம்’ என்பதை இப்போது முழுமையாக உணர்ந்துகொண்டோம்.

ஸ்வீடன் மாணவிகள்

இங்க வெறும் படிப்புக்காகத்தான் வந்தோம். ஆனால், இப்போது ஆர்கானிக் ஃபார்ம்ஸ் மேல் மிகப்பெரிய மரியாதை வந்திருக்கு. வெறும் படிப்பு, வேலையென்று நிக்காம, எங்க நாட்டுல போய் இங்க கத்துக்கிட்ட விஷயங்களை, இயற்கை குறித்த முக்கியத்துவத்தை, இயற்கை உணவு உண்ண வேண்டியதின் அவசியத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தும் செயல்களில் எங்களை அர்ப்பணிப்போம். முடிந்தால் நாங்களே இயற்கை உணவு தானியங்களை உற்பத்தி செய்வோம். இங்குள்ள கூழ் பற்றி, தொன்னூறு வயசு பாட்டி ஒருவரிடம் கேட்டப்ப, `கூழ்தான் என்னை இத்தனை வருஷம் வாழ வச்சுருக்கு’ன்னு சொன்னார். அதனால், எங்கள் நாட்டில் கூழோட அருமை பெருமைகளை சொல்லி, அங்க அந்த உணவை அறிமுகப்படுத்துவோம். எங்கள் நாடு பொதுவா கல்வியறிவு அதிகம் உள்ள, விழிப்பு உணர்வு அதிகம் உள்ள மக்களைக் கொண்ட நாடுதான். இருந்தாலும், இயற்கை உணவு குறித்த போதிய விழிப்பு உணர்வு இன்னும் அங்கே முழுமையாக வரவில்லை. நாங்கள் வர வைப்போம்” என்றார்.

அடுத்துப் பேசிய, ஐரின், “இங்கே இயற்கை வேளாண்மை குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டோம். குறிப்பா, நம்மாழ்வார் அய்யா ஐரின்

பற்றி அதிகம் தெரிந்துகொண்டோம். ‘இயற்கை வேளாண்மை’ என்று பேச ஆரம்பித்தாலே, சொல்லி வைத்தாற்போல் எல்லோரும், ‘நம்மாழ்வார்’ங்கிற பேரைதான் சொல்கிறார்கள். அதுவும், வானகத்தில் அவரது பிறந்தநாளுக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து அசந்துபோயிட்டோம். எங்க நாட்டுல பிறந்தநாள் விழாக்கள்ல இருபது, முப்பது பேர் கலந்துகிட்டாலே அதிசயம். அதுவும் தனிமனித கொண்டாட்டமாக எந்த அர்த்தமும் இல்லாமல் முடிந்துபோகும். ஆனால், இங்கு நம்மாழ்வாருக்காக நூற்றுக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள். அதுவும் இந்த மாநிலமே நல்ல காத்து, நல்ல சாப்பாடு, நல்ல தண்ணி கிடைத்து, நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ வேண்டி, அதற்கு முன்னேற்பாடா இந்த விழாவில் பல விஷயங்களை செய்கிறதை பார்க்கும்போது எங்களுக்குச் சிலிர்த்துப் போச்சு. அந்த விழாவில் எங்களையும் அழைச்சு கௌரவிச்சது பெருமையா இருந்துச்சு. அந்த மேடையில் நின்னப்ப, எங்களுக்குள்ள ஏதோ ஒரு பவர் பாய்ஞ்ச மாதிரி இருந்துச்சு. இனி எங்க குரு நம்மாழ்வார்ன்னு முடிவு பண்ணி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைப் பத்தி அதிகம் படிக்கிறோம். நாங்கள் இங்க இயற்கை வேளாண்மை, வாழ்வியல், சூழலியல் பற்றி எங்கள் படிப்புக்காக டாகுமென்டரி பண்றோம்.

அதை ஸ்வீடனுக்கு அனுப்பி, அங்குள்ள பத்திரிகைகளில் பிரசுரம் ஆக வைக்கிறோம். தனியாக நம்மாழ்வாரைப் பத்தியும், அவர் ஆற்றிய பெரும் பணிகளைப் பற்றி டாகுமென்டரி செய்து, அதையும் ஸ்வீடனுக்கு அனுப்புகிறோம். அதற்கு, அங்கிருந்து நல்ல ரெஸ்பான்ஸ். இந்தியாவை நாங்கள் என்றைக்கும் மறக்கமாட்டோம். இங்குள்ள கூழ்தான் நாங்கள் வாழ்நாள் முழுக்க சாப்பிடுற உணவா இருக்கும்” என்றார் உற்சாகமாக!.

குடும்பம் அமைப்பின் துணை இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கண்ணாவிடம் பேசினோம். “ஒவ்வொரு வருஷமும் இப்படி வெளிநாட்டில் இருந்து மாணவர்கள், மாணவிகள் இயற்கை வேளாண்மை, வாழ்வியல், சூழலியல் தொடர்பாக கோர்ஸ் படிக்க, தெரிஞ்சுக்க இப்படி இங்க வருவாங்க. அவங்களுக்குத் தகுந்த பயிற்சியைக் கொடுப்போம். இந்த வருஷம் மூன்று மாணவிகள் ஸ்வீடன்ல இருந்து வந்திருக்காங்க. இப்படி இங்க பயிற்சி எடுத்துட்டு, இங்க விவசாயிகளிடம் நேரடியாக கற்றுக்கொள்ளும் விஷயங்களை வைத்து, தீசிஸா தங்கள் கல்லூரிகளில் சமர்ப்பிப்பாங்க. இதுவரை வந்தவர்களைவிட, இப்ப வந்திருக்கிற இல்வா, ஐரின், ஃபெலிசியா ஆகிய மூவரும் இயற்கை மேல தீராத காதலோடு இருக்காங்க. நம்மாழ்வாரைப் பத்தி தெரிஞ்சதும்,அவரை தங்கள் குருவா ஏத்துக்கிட்டாங்க. அதேபோல், இங்கு பயிற்சி பெற்றவர்கள் சேர்ந்து ஸ்வீடனில் ‘குடும்பம் நண்பர்கள் குழு’ன்னு ஆரம்பிச்சுருக்காங்க. அந்த அமைப்பின் ஒரு பங்கு நிதி மற்றும் அந்த அரசாங்கத்தின் ஒன்பது பங்கு நிதியோடு, நாங்க இங்க பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை செய்துட்டு வர்றோம்.  நம்மாழ்வார் ஏற்றி வைத்த இயற்கை குறித்த விழிப்பு உணர்வு தீ அணையவே அணையாது” என்றார் நெக்குருகிப் போய்!.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *