வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை கருத்தரங்கு

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான அங்கக வேளாண்மை கருத்தரங்கில், இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது:

 • உலகத்தை பயமுறுத்தும் அச்சுறுத்தல் பூமி வெப்பமயமாதல் ஆகும். பூமி வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து, கடலோரப் பகுதிகளில வசிப்பவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் வரும்.
 • இதற்கு காடுகளை அழித்தல், பெருகி வரும் தொழில்சாலைகள், வாகனப் பெருக்கம், நவீன வேளாண்மை ஆகியவையே பெரும் காரணிகளாக உள்ளன. இதிலும், பூமி வெப்பமயமாதலுக்கு நவீன வேளாண்மை முறை 35 சதவீதக் காரணமாக உள்ளது.
 • பூமி வெப்பமயமாதல் காரணமாக பாதிக்கப்படப் போவது ஏழை நாடுகளே ஆகும். குறிப்பாக, இந்தியாவில் 44 கோடிப் பேர் வறுமையில் வாடுகின்றனர். இவர்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவர்.
 • பூமி வெப்பமயமாதலுக்கான காரணத்தைக் கண்டறிந்து உடனே நிறுத்த வேண்டும். பூமி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் 150 ஆண்டுகள் ஆகும். நிலம்
  உயிரோட்டத்தை இழந்து கொண்டிருக்கிறது; வாழ்க்கை வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்ட உணவை உள்கொள்ளும் மக்களும் புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு ஆளாகின்றனர்.
 • கடந்த 15 ஆண்டுகளில், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத 2.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
 • இயற்கை விவசாயத்தின் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைத்திட முடியும். இதற்கு, விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உதவ வேண்டும். மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றார்.

அடுத்து பெங்களூரில் உள்ள அங்கக வேளாண்மை முகமை மற்றும் அம்ருதபூமி திட்டக் குழுவின் தலைவர் ஏ.எஸ்.ஆனந்த் பேசியது:

 • கர்நாடகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 100 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். திராட்சையைத் தவி அனைத்து உணவுப் பொருள்களும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 • இயற்கை விவசாய முறையைக் கண்டறிந்துகொள்ள தமிழக விவசாயிகள், கர்நாடகத்திற்கு வந்து பார்வையிட வேண்டும். இரு மாநில விவசாயிகளும் தகவல் பரிமாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டிய தருணம் இது.

கேரளத்தில் உள்ள மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் ஆர்.இளங்கோவன் பேசியது:

 • விஷமாக்கப்பட்ட உணவுகளை உள்கொள்வதால் விஷ உணர்வுதான் மக்களுக்கு வருகிறது. இயற்கை விவசாயத்தை மேம்படுத்த பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

அங்கக வேளாண் விவசாயி மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் கோ.சித்தர் பேசியது:

 • கடந்த 20 ஆண்டுகளாக தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். உடல் நலத்தைப் பேணிக் காக்க இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்பட்ட பொருள்கள் பயன்படுகின்றன.
 • விவசாயி என்பவர் நல்ல வியாபாரியாகவும் இருக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட பொருள்களை முறையான வகையில் அதிக விலை வைக்காமல் விற்பனை செய்து வருகிறேன். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து, பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகளுக்கும் உதவி வருகிறேன் என்றார்.

நன்றி: தினமணி

 

Related Posts

நம்மாழ்வார் விட்டுச்சென்ற ‘வானகம்’!... இன்று லட்ச ரூபாய் சம்பளம் தரும் ஐ.டி வேலையை வி...
இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் 2013 ஏப்ரல் Calendar... இயற்கை வேளாண் விஞானி நம்மாழ்வார் அவர்களின் 2013 ஏப...
இயற்கை விவசாயமே நம்மை வாழ வைக்கும் – நம்மாழ்வார்... ""இயற்கை விவசாயம் மட்டுமே நம்மையும், நம் சந்ததியின...
ஆயுளுக்குமான பென்ஷன் என்ன தெரியுமா? நம்மாழ்வாரின் டிப்ஸ்... ‘பசுமை விகடன்’ மற்றும் ‘எழில்சோலை அறக்கட்டளை’ ஆக...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *