செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் நன்மைகள்!

பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்….செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறித்து விளக்கம் அளிக்கிறார், சித்த மருத்துவர் காசி பிச்சை.

26_16533

செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும்.

குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.

‘செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று’ என்பது பழமொழி. இதன் பொருள் செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றும்போது, அந்நீரை உறிஞ்சி வளரும் செடியின் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவையாக இருக்கும். அக்காய்கறிகளை நாம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு மிகுந்த பயன்கிடைக்கும் என்பதுதான் பொருள். செப்பு பாத்திரத்தின் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லிவைத்துச் சென்ற இப்பழமொழி…விஞ்ஞானக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று.

செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது. மேலும் செம்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகளின் வரவும் தடைபடும்.

செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்னையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.

நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும். குறிப்பாக முந்தையக் காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும்போது, செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து அனுப்புவார்கள். புதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

செம்பு பாத்திரம்

நீரைக் குடிக்கும் முறை:

குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு:

முந்தைய காலங்களில் செம்பு கெண்டியில்தான் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் அந்நீரைக் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்துபோய்விட்டதால், இன்றைய இளம் குழந்தைகளும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை அதிக அளவில் சந்திக்க நேரிடுகிறது. எனவே செம்புப் பாத்திரங்களில் நிரப்பிய நீரை, குழந்தைகளுக்கு பருகக் கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?

செம்பு பாத்திரத்தை, பாத்திரம் துலக்கும் சோப்பு கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. வெறும் அடுப்புச் சாம்பல் மற்றும் புளியைக் கொண்டு, தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வதே சிறந்தது. சாம்பல் கிடைக்காதவர்கள், புளியை மட்டுமே பயன்படுத்தலாம். புளியில் இருக்கும் அமிலத்தன்மை, செம்பு தாதுவுடன் வினைபுரிந்து பளபளப்பைக் கொடுக்கும். பாத்திரத்தைக் கழுவியப் பின்னர், ஒன்றிரண்டு முறை நல்ல தண்ணீரைக் கொண்டு அலசி ஊற்றியப் பின்னர், குடிதண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கப் பயன்படுத்தலாம்.

நன்றி: விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *