ஆயுளுக்குமான பென்ஷன் என்ன தெரியுமா? நம்மாழ்வாரின் டிப்ஸ்

நம்மாழ்வாரின் யோசனை
‘பசுமை விகடன்’ மற்றும் ‘எழில்சோலை அறக்கட்டளை’ ஆகியவை இணைந்து, 2013-ம் ஆண்டு, ஜனவரி 27 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், கைத்தண்டலம் கிராமத்தில் ‘மாபெரும் மரம் வளர்ப்பு’ கருத்தரங்கை நடத்தின. சுமார் ஆயிரம் விவசாயிகள் ஆர்வத்தோடு பங்கேற்ற இந்நிகழ்வில்… ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ. நம்மாழ்வார் மரம் வளர்ப்பு குறித்துச் சொன்ன தகவல்கள் இங்கே இடம்பெறுகின்றன.

‘‘இன்றைக்கு பல்வேறு பிரச்னைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது, பருவநிலை மாற்றம்தான். அதைச் சரிசெய்யணும்னா, கண்டிப்பாக காடுகளை வளர்க்கணும். அப்பதான் வருமானத்தோட, பல்லுயிர் பெருக்கத்தையும் நிலை நிறுத்த முடியும். அந்தக் காடுகள் மேகக் கூட்டங்களை இழுத்து, மழையைப் பொழிய வைக்கும். மழைத் தண்ணியை மண்ணும், மரங்களோட வேரும் சேர்ந்து புவிஈர்ப்பு விசை மூலமா பூமிக்கு அடியில சேமிச்சு வெச்சுக்கும். மரங்களுக்குத் தண்ணி தேவைப்படுறப்ப வேர் மூலம் இலைகளுக்குப் போயிடும். 3 மாச பயிரும், 6 மாச பயிரும் தண்ணி இல்லாம காயும்போதுகூட, மரங்கள் மட்டும் வாடாம இருக்கிறதுக்கு இதுதான் காரணம். தென்னை மரத்தோட ‘சல்லிவேர்’ தண்ணியை அதிகமா உறிஞ்சி எடுத்துக்கிற குணமுடையது. அதனால, மத்த மரங்களுக்குத் தண்ணி பத்தாம போயிடும். ஆக, தென்னையைத் தேவைக்கு மட்டும் வெச்சு வளர்த்தால் போதும்.

விவசாயிக்கு மரம் வளர்ப்பு மட்டும்தான் நிரந்தரமான வருமானத்தைக் கொடுக்கும். வீட்டைச் சுத்தி இருக்கிற இடங்கள்ல வேம்பு, நெல்லி, கொய்யா, பப்பாளி, முருங்கையை வைக்கலாம். குளியல், பாத்திரம் கழுவும் தண்ணீர் போகுற இடங்கள்ல வாழை, தென்னை வைக்கலாம். வேலியில் சவுண்டல், சீத்தான்னு வெயில்படும் இடங்கள்ல எல்லாம் தேவையான மரங்களை நட்டு வளர்க்கலாம். நிழல் பகுதியில கறிவேப்பிலை வளர்க்கலாம். தேக்கு, வருமானம் கொடுக்கிறதுக்கு நீண்ட காலமாகும். ஆனா, வேப்ப மரம் 5 வருஷத்துல வருமானம் கொடுத்திடும். இதுவரைக்கும் மலைப் பகுதிகள்ல மட்டும் வளர்ந்த ரோஸ்வுட், செஞ்சந்தனம் மரங்கள் எல்லாம் இப்போ சமவெளியிலயும் நல்லா வளருது.

நம்மாழ்வார்

ஒரே வகையான மரங்களை மட்டும் வளர்க்காம, காடுபோல பல அடுக்கு முறையில… பழங்கள் கொடுக்கும் மரம், தீவன மரம், உரங்களைக் கொடுக்கும் மரம், எரிவாயு கொடுக்குற மரம், வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்திக்கு உதவுற மரம்,  நார் மரம், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரம், வேலிக்கு உதவுற மரம், மருத்துவக் குணமுடைய மரம், இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான மரம்னு 10 வகையான மரங்களை நடவு செய்து தோட்டத்தைக் காடாக்கிட்டா போதும்.

நமக்குத் தேவையான எல்லாத்தையும் அது கொடுத்திடும்.

அரசாங்க வேலை பார்க்கறவங்களுக்குக் கிடைக்குற பென்ஷன் (ஓய்வூதியம்) மாதிரி… மரங்கள் வளர்ந்து நம்மோட கடைசிக் காலத்துக்குப் பென்ஷன் கொடுக்கும்’’ என்று நம்மாழ்வார் சொல்லியுள்ள இந்த மரம் வளர்ப்பு நுட்பங்கள் எக்காலத்துக்கும் கைகொடுக்கும்”.

நன்றி: ஆனந்த விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *