இயற்கை முறையில் மண் வளத்தைக் காக்கும் முன்மாதிரி விவசாயி

பொன்னேரியை அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் மண் வளத்தைக் காக்கும் வகையில் விவசாயி ஒருவர் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து சாதனை படைத்து வருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள சிங்கிலிமேடு கிராமத்தில் தனது 3 ஏக்கர் நிலத்தில் பாரம்பரிய, நெல் ரகங்களைக் கொண்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார் விவசாயி ராஜா(50) . அவர் கல்லூரியில் படித்தது வேதியியல் துறை.

அந்தப் படிப்பின்போது, ரசாயான மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்து கொண்டதன் காரணமாக, இயற்கை முறை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு, தனது மூன்று ஏக்கர் நிலத்தில் நான்கு ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களைக் கொண்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறியது:

இயற்கை ஆர்வலர் நம்மாழ்வார் மீது பற்றுதல் கொண்டு அவர் வழியில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய முடிவு செய்தேன்.

இதையடுத்து திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து, அதனை விவசாயிகளுக்கு அளித்து வரும் நெல் ஜெயராமனை நேரில் சந்தித்தேன்.

அப்போது அவரிடம் இருந்து பாரம்பரிய நெல் விதையான ஆத்தூர் கிச்சலி சம்பா, பூங்கா, அறுபதாம் குறுவை ஆகியவற்றை வாங்கி வந்து இப்பகுதியில், ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை உரங்களை இட்டு சாகுபடி செய்தேன்.

அதன் பிறகு அந்தப் பயிருக்கு மேலும் இயற்கை உரங்களான ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், நுண் ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றை தெளித்தேன்.

தற்போது, இயற்கை உரங்களைக் கொண்டு பயிர் செய்யும் நெல் ரகத்துக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இயற்கை உரங்களைக் கொண்டு பயிர் செய்வதால் பூச்சித் தாக்குதல் குறைவாக உள்ளது. அத்துடன் மண் வளத்தைக் காக்கும் மண் புழுக்களும் அதிகரித்துள்ளன.

தவிர, நிலத்தில் தவளைகளின் இனப்பெருக்கமும் அதிக அளவில் உள்ளது. ரசாயன உரங்களைக் கொண்டு பயிர் செய்தால் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். அத்துடன் மண் வளமும் கெட்டுப் போகும். அதே நேரத்தில் இயற்கை உரங்களைப் பயன்படுத்துவதால் செலவு குறைவதோடு, மண் வளமும் காக்கப்படுகிறது.

இயற்கைப் பூச்சி விரட்டி …

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் மற்றும் வேப்பெண்ணெய்க் கரைசலை பூச்சி விரட்டியாகப் பயன்படுத்துகிறேன். கடந்த முறை பாரம்பரிய ரகமான ஆத்தூர் கிச்சலி சம்பா பயிர் செய்தேன். அப்போது, ஒரு ஏக்கருக்கு 25 மூட்டை நெல் விளைந்தது. அதனை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யாமல், மதிப்பு கூட்டி (அரிசியாக மாற்றி) 25 கிலோ பைகளில் அடைத்து நானே நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்தேன்.

இதன் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்தால் அதனை விற்பனை செய்ய சந்தை வாய்ப்புகளும் அதிகமாக உள்ளதை உணர்ந்தேன்.

தற்போது பாரம்பரிய வெள்ளை பொன்னி நெல் ரகத்தை 3 ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். இதில் 90 மூட்டை நெல் அறுவடை செய்ய இயலும். மண் வளத்தை மேம்படுத்தவும், எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தை பேணிக் காக்கவும் இயற்கை முறையிலான விவசாயத்தை தொழிலாகக் கருதாமல் ஒவ்வொரு விவசாயியும் அதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

வேளாண் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்தது என்று கூறினாலும், ரசாயன உரங்களைக் கொண்டு பயிர் செய்வதன் காரணமாக மண்வளத்தைக் காக்கத் தவறி விட்டோம் என்பதே நிதர்சனம். பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கப் பயன்படுத்தும் ரசாயன உரங்கள் காரணமாக, மண் வளம் மெல்ல அழிந்து வருகிறது. இனி வரும் காலத்திலாவது இயற்கை விவசாயி ராஜாவைப் போல் மற்ற விவசாயிகளும் நில வள மேலாண்மை முறைகளைக் கையாண்டு மண் வளத்தைக் காத்து, நிலையான வேளாண்மைக்கு வித்திட வேண்டும்.

தொடர்புக்கு: விவசாயி ராஜா, செல்லிடப்பேசி எண்: 9600000376 .

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “இயற்கை முறையில் மண் வளத்தைக் காக்கும் முன்மாதிரி விவசாயி

  1. Vijayakumar G says:

    நேரடி நெல்விதைப்பில் இடைவெளி மட்டும் குறிப்பிட்டுள்ளீர் எவளவு ஆழத்தில் விதை வூன்றவேண்டும் என்பதையும் சொல்லுங்கள்
    நன்றி
    விஜயகுமார் சேலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *