இயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்

இப்போது மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ரசாயன உரங்களின் பாதிப்பு குறித்தும் பற்றியும் நம் பாரம்பரிய விவசாய முறைகளைக் குறித்தும் மக்கள் ஆர்வம் காட்டாத எண்பதுகளிலேயே மண்புழு வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கியவர் பேராசிரியர் ஜி.எஸ்.விஜயலட்சுமி.தென்னிந்தியாவில் மண்புழு வளர்ப்பு தொடர்பான விழிப்புணர்வை அடிமட்டம்வரை எடுத்துச்சென்றவர்களில் முதன்மையானவர். குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 49 மண்புழு வளர்ப்பு தொட்டிகளை அமைத்திருக்கிறார்.

தமிழக அரசின் பசுமைப் படை சார்பாகக் கழிவு மேலாண்மையை முக்கியக் கடமையாக எடுத்துச் செயல்படுத்தி வருகிறார்; திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டிருக்கிறார். கடல்வாழ் உயிரினப் படிப்பில் இந்தியாவில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆஸ்திரேலியாவில் 1981-ல் நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் அளித்த ஆய்வுக் கட்டுரைக்காக அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருக்கிறார். 1975-ல் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆசிரியர் பணிக்குச் சேர்ந்த அவர் அன்று முதல் இன்றுவரை காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, மரம் நடுதல் எனச் சுற்றுச்சூழல் சார்ந்த பல செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.

பணி நிறைவு பெற்றுவிட்ட பிறகும் விஜயலட்சுமி ஓய்வாக அமரவில்லை. இப்போதும் அதே சுறுசுறுப்புடன் செயல்பட்டுவருகிறார். “பராசக்தி கல்லூரியில் கிடைத்த ஊக்கத்தால் கழிவுப் பொருள்கள் உதவியுடன் காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டேன்” என்று சொல்லும் அவர், 1962-லேயே இந்தியாவிலேயே முதன்முறையாகக் கல்லூரி அளவில் பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பு நிறுவப்பட்டிருந்ததைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அப்போது அமைத்த சாண எரிவாயு அமைப்பு இன்றுவரை தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் தெரிவிக்கிறார்.

பராசக்தி கல்லூரியில் சாண எரிவாயு அமைப்பிலிருந்து கிடைத்த கழிவுப் பொருள்கள் மூலம் மீன் வளர்த்திருக்கிறார். சாதாரண நீரில் மீன் வளர்ப்பதைவிட இந்தக் கழிவுப் பொருள் நீரில் மீன் வளர்ப்பதால் பத்துப் பதினைந்து நாட்களுக்குள் மீன் உணவான மிதவை உயிரிகள் மிகவும் விரைவாக உற்பத்தியாகிவிடும் என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மீன் வளர்ப்பில் கிடைத்த உற்சாகத்தால் கழிவு நீரில் காளான் வளர்க்கத் தொடங்கியதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

“செயற்கையாகக் காளான் வளர்க்கலாம் என்னும் உத்தி இப்போது நன்கு பரவி திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே இந்தக் காளான் வளர்ப்பு பலன் தரத் தொடங்கியிருக்கிறது” என்கிறார் விஜயலட்சுமி. தென்காசி அருகே இருக்கும் வல்லம் கிராமத்தை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்.

1980-ல் மதுரை விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, அவர் சந்தித்த பல்கலைக்கழக டீன் கிருஷ்ணமூர்த்தி என்பவர்தான் காளான் வளர்ப்பில் கிடைக்கும் வைக்கோல் கழிவிலிருந்து மண்புழுவை வளர்க்கலாம் என்ற திட்டத்தைச் சொல்லியிருக்கிறார். அதுதான் பேராசிரியர் விஜயலட்சுமிக்கு உந்துதலாக இருந்துள்ளது. ‘மண் புழு மண்ணிலேயே இருக்கிறதே அதை ஏன் செயற்கையாக வளர்க்க வேண்டும்?’ என விஜயலட்சுமி கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த கிருஷ்ணமூர்த்தி, ‘நீங்கள் நினைப்பது போல் அல்ல, இப்போதெல்லாம் மண்ணைத் தோண்டினால் மண்தான் வரும், மண்புழு வராது’ என்று சொல்லியிருக்கிறார். அந்தப் பதில்தான் மண்புழு வளர்ப்பை நோக்கி விஜயலட்சுமியைத் திருப்பியது. மண்புழு வளர்ப்பு தொடர்பாக பெங்களூர் விவசாயக் கல்லூரியில் பணியாற்றிய முனைவர் ராதா அவருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இயற்கையான எல்லாக் கழிவுகளிலும் மண்புழுவை வளர்க்கலாம் என முனைவர் ராதா தெரிவித்துள்ளார்.

“இந்திய மண்புழு, ஆப்பிரிக்க மண்புழு, சீன மண்புழு ஆகிய மூன்று வகைகளை நான் வளர்த்திருக்கிறேன். சீன மண்புழுவையும், ஆப்பிரிக்க மண்புழுவையும் வளர்க்க மண்ணே தேவையில்லை, வெறும் இலையிலும் கழிவுகளிலுமே அவை வளரும்” என்கிறார் பேராசிரியர் விஜயலட்சுமி. மேலும், “சீன மண்புழு ஒன்றரை அங்குலம் நீளமே இருக்கும். எனவே அதிக இடம்கூடத் தேவையில்லை. இலை, தழைகளை மட்டுமே அவை சாப்பிடும். தினசரி சாணிப்பால் மட்டும் தெளிக்க வேண்டும். நாற்பத்தி ஐந்து நாட்களில் உரம் தயாராகிவிடும்” என்கிறார் அவர்.

Courtesy: Hindu
Courtesy: Hindu

இப்போதும் குற்றாலம் அருகே இருக்கும் தனது வீட்டின் அருகே செயல் விளக்கம் செய்து காட்டுவதற்காக மண்புழு உரக் கூடம் ஒன்றை நடத்திவருகிறார். இவரது செயல் விளக்கப் பயிற்சியின் மூலம் சிறு சிறு தொழிற்சாலைகளில் தங்களுக்குக் கிடைக்கும் கழிவுப் பொருளிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கல்லூரி மாணவிகளுக்கு மண்புழு வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கிவருகிறார்.

“மண்புழு உரம், மற்ற உரங்களைவிட சிறப்பானது. தீங்கிழைக்கக்கூடிய பாக்டீரியாக்கள் மண்புழு உரத்தை நெருங்காது. ஒரு ஏக்கருக்கு இரண்டு டன் மண்புழு உரம் போதுமானது. இதனுடன் மேல் உரம், அடி உரம் போட்டால் போதும்” என்று சொல்லும் விஜயலட்சுமி, மண்புழு உரத் தயாரிப்பை லாப நோக்கில் செயல்படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார்.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இயற்கை வழியில் செல்லும் பேராசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *