கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தெலங்கானாவில் (முன்னர் ஆந்திரத்தின் ஒரு பகுதி) உள்ள குண்டூர், வாரங்கல் பகுதிகளில் விவசாயிகள் அதிகமாகத் தற்கொலை செய்துகொண்டனர்.
பசுமைப் புரட்சியின் விளைவால் ஏற்பட்ட வேதியியல் உரங்கள் அப்போது பரவலாக இருந்ததுதான் அதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது.
குண்டூர் பூச்சிக்கொல்லிகளின் கட்டுப்பாடற்ற பயன்பாடுகளில் முதல் இடத்தில் இருந்தது. அதற்கு அடுத்த இடத்தை வாரங்கல் மாவட்டம் பிடித்தது. ரசாயனத்தைக் கொட்டி செய்யப்பட்ட விவசாய நிலங்களில் கிடைத்த வருமானத்தைவிட உற்பத்தி செலவு அதிகரித்தது.
இதுதவிர, பூச்சிகளால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பயிர்களும் விவசாயிகளை ஏமாற்றி, தற்கொலை செய்ய வழிவகுத்தது. 90-களின் முற்பகுதியில் தெலங்கானா பகுதியில் நிலக்கடலை, ஆமணக்கு மற்றும் பருத்தி ஆகிய பயிர்கள்தான் பிரதானமாக இருந்தது.
இவையும் பூச்சி தாக்குதலால் முற்றிலும் அழிவைச் சந்தித்தன. விவசாயிகளும் பூச்சித் தாக்குதலைக் குறைக்க ரசாயன பூச்சிக் கொல்லிகளை அதிகமாகத் தெளிக்கத் தொடங்கினர். பயிர் உற்பத்தியாகிக் கிடைக்கும் வருமானத்தைவிட, ரசாயன உரங்களுக்கும், பூச்சிக் கொல்லிகளுக்கும் அதிகமான செலவிட்டனர். இதனால் விவசாயிகள் அதிகமான கடன் சுமை பாதிப்புக்கு ஆளாகினர்.
இதனால் ஏராளமான விவசாயிகள் சூழ்நிலைகளால் தோற்கடிக்கப்பட்டு, விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். இந்தச் சூழலில்தான் வாரங்கல் மாவட்டத்தில் இருந்த ஒரு கிராமம் மட்டும் அதற்கான வழியைத் தேடி பயணிக்க ஆரம்பிக்கிறது. அந்தக் கிராமத்தின் பெயர் எனபவி (Enabavi).
இந்தக் கிராமத்தில் இருந்த 52 குடும்பங்களும், ரசாயன உரங்களைக் கைவிட்டு, பூச்சிகளைக் கட்டுப்படுத்த மாற்று வழிகளைச் செயல்படுத்த முயன்றனர்.
ICAR (Indian Council of Agricultural Research) மண்டல ஒருங்கிணைப்பு பிரிவில் பணிபுரிந்த டாக்டர் என்.கே.சாந்தி மற்றும் உலக ஒற்றுமை மையத்தின் ஸ்ரீ எம்.வி.சாஸ்திரி ஆகியோருடன் இணைந்து டாக்டர் எம்.எஸ்.சாரி மற்றும் குய்யோம் போன்ற ஓய்வுபெற்ற விவசாய விஞ்ஞானிகள் இந்தக் கிராம மக்களுக்கு உதவ முன்வந்தனர். பூச்சிகளின் ஆரம்பகட்டமான லார்வா கட்டத்தை அடைவதற்கு முன்னரே அழிக்க வேண்டும் என அந்த மக்களுக்கு வலியுறுத்தினர்.
இந்த அறிவியலாளர்களின் முக்கிய குறிக்கோள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பதாக இருந்தது.
பூச்சிக் கொல்லிகள் அல்லது செயற்கை நச்சுகளைப் பயன்படுத்தாமல், உயிரியல் பூச்சிக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பூச்சிகளை விரட்ட வேண்டும் என அறிஞர்கள் குழு அந்த மக்களைக் கேட்டுக் கொண்டது.
உயிரியல் பூச்சி விரட்டும் தொழில்நுட்பங்களில் வேம்பு, துளசி இலை, சிட்ரஸ் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், வெங்காயம், பூண்டு தெளித்தல், பூச்சி பொறிகளைப் பயன்படுத்துதல், தகுந்த பட்டங்களில் விதைத்தல், முறையான ஊட்டச்சத்து நிர்வாகம், ஆழமான கோடை உழவு ஆகியவை பின்பற்றப்பட்டன.
இதை விவசாயிகள் எளிதாக உபயோகிக்கத் தொடங்கினர். அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருந்தன. இதற்கு செலவு குறைவு, இரண்டாவது இதைப் பயன்படுத்த ஆரம்பித்தவுடன், பூச்சி தாக்குதல் குறைய ஆரம்பித்தது. இந்தத் தொழில்நுட்பம் விவசாயிகளிடம் வெற்றியடைய ஆரம்பித்தது.
இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு மற்றொரு யோசனையும் தோன்றுகிறது. ரசாயனங்களை முழுமையாகக் கைவிட்டு ஏன் இயற்கை விவசாயத்துக்கு மாறக் கூடாது என்ற எண்ணம் உதிக்கிறது. உடனே அதைச் செயல்படுத்த ஆரம்பிக்கிறார்கள் விவசாயிகள். அதன் பலனாகத் தெலங்கானாவின் முதல் இயற்கை விவசாயக் கிராமமாக உருவெடுத்து நிற்கிறது எனபவி.
இன்று, இந்தப் பசுமையான சோலைவனமாகத் திகழும் ஊருக்குள் நுழைந்தால், ஊரை வரவேற்க வைக்கப்படும் போர்டு ஆச்சர்யத்தைக் கிளப்புகிறது. வரவேற்பு பலகையிலேயே ‘இது முழுமையான இயற்கை விவசாயக் கிராமம்’ என்பதைச் சொல்லிவிடுகிறது. 2005-ம் ஆண்டிலிருந்து இது அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2003-ம் ஆண்டிலிருந்தே முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறிவிட்டது, எனபவி.
நெல், பருப்பு, மக்காச்சோளம், பருத்தி, புகையிலை, மிளகாய் ஆகிய பயிர்களைத் தன்னகத்தே கொண்ட கிராமமாக இன்று வளர்ந்து நிற்கிறது. இயற்கைக்கு மாறிய பின்னர் விவசாயத் தற்கொலைகள் இங்கு நிகழவில்லை என்ற விஷயமும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆகியோரும் இந்தக் கிராமத்துக்குப் பார்வையிட வருகை தருகின்றனர்.
சுற்றியிருக்கும் கிராமங்களுக்கும் விழிப்புஉணர்வு மையமாகவும் இந்தக் கிராமம் திகழ்கிறது. இது, அரச சார்பற்ற நிறுவனங்களின் தொடர்ச்சியான முயற்சி, வேளாண்மை மையம் ஆகியவற்றின் மூலமே சாத்தியப்பட்டிருக்கிறது. இயற்கை விவசாயத்துக்கு மாறிய பின்னர், கிராம மக்கள் நோய்வாய்ப்படுவதும் குறைந்தது. அதேபோல கிராம மக்களின் சுகாதாரமும் மேம்பட்டது.
பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், மண் வளத்தை மேம்படுத்துவதற்கும் லாபம் பெறுவதற்கும் இயற்கை விவசாயம் வழிவகை செய்கிறது. விவசாயிகள் தங்களின் பிள்ளைகளுக்கும் பூச்சிகளைப் பிடிப்பதற்கும், பயிர்களுக்கு வரும் நோயை அடையாளம் காண்பதற்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.
வயலுக்குப் பயன்படுத்தும் உரங்களை, மாடு, கோழிகளின் கழிவுகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேப்பம் விதைச் சாறு, மிளகாய்ப் பூண்டு சாறு ஆகியவற்றையும் பூச்சி விரட்டிகளாகப் பயன்படுத்துகிறார்கள். கடந்த 15 ஆண்டுகளில், இந்தக் கிராமத்தில் பெரிதாகப் பூச்சிகளும் நோய்களும் தாக்குவது இல்லை.
இதே மாவட்டத்தில் உள்ள வேறு கிராமங்களில் பூச்சித் தாக்குதல்கள் அதிகமாகத் திகழ்கின்றன. செயற்கை யூரியாவுக்குப் பதில் அசோலாவை விதைத்துக்கொள்கிறார்கள். வளர்ச்சி ஊக்கிகளாக ஜீவாமிர்தம், பஞ்சகவ்யாவைப் பயன்படுத்துகிறார்கள். தன் நிலத்திலிருந்தே தனக்குத் தேவையான விதைகளைச் சேகரிக்கிறார்கள். அதே நேரத்தில் மற்றவர்களுக்குத் தேவையான விதைகளையும் உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்.
அதேபோல கூட்டாக இயற்கை விவசாயக் கூட்டுறவு இயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதன் மூலம் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை, ஹைதராபாத் சந்தையில் சிறந்த விலையில் நேரடியாக விற்பனையும் செய்துகொள்கிறார்கள்.
இப்போது இக்கிராமத்தைச் சுற்றியிருக்கும் மணிக்கியாபுரம், சிரிபுரம், கல்லேம் போன்ற கிராம விவசாயிகள் இயற்கையை வளர்த்தெடுக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார்கள். முன்னர் எனபவி கிராமத்துக்கு ஒரு குளம் மட்டுமே ஆதாரமாக இருந்தது. இன்று 11 கிணறுகள், 26 ஆழ்துளைக் கிணறுகள் என விவசாயத்தில் பட்டையைக் கிளப்பிவருகிறது.
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்