இயற்கை விவசாயி சிவகங்கை ஜெயலெட்சுமி!

இயற்கை விவசாயம், உயிர்வேலி, தற்சார்பு முறையில் விவசாயம் செய்து வழிகாட்டுகிறார் சிவகங்கை ஜெயலெட்சுமி.

இயற்கை முறை, தற்சார்பு, உழவில்லா விவசாயம், உயிர் வேலி என்று பாரம்பர்யத்தைப் பின்பற்றி தனது 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அசத்தி வருகிறார் இயற்கை விவசாயி ஜெயலெட்சுமி. சிவகங்கை மாவட்டம், பனையூர் கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு ஒரு காலை வேளையில் சென்றோம்.

இயற்கை விவசாயி ஜெயா

இயற்கை விவசாயி ஜெயா

 

“நான், எம்.ஏ.எம்.பில் படிச்சுட்டுப் பல்வேறு தனிப்பட்ட சிறப்பு கோர்ஸ்களும் படிச்சுருக்கேன். பிறகு, அறக்கட்டளை அமைப்புகளோடு இணைந்து களப்பணிகள் செய்திருக்கிறேன். தன்னம்பிக்கை, குழந்தைகள் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆசிரியர்கள், கிராம மக்கள்னு எல்லா தரப்பினருக்கும் பயிற்சி வகுப்புகள் எடுத்திருக்கேன். அப்படி எனக்கு பிடிச்ச வழியில போகும்போதுதான் இயற்கை விவசாயம், நம்மாழ்வார் ஐயா மேல ஈடுபாடு வந்துச்சு.

அய்யாகிட்ட நேரடியா கத்துக்க முடியலை. ஆனா அவரோட புத்தகங்கள், அவரு கூட வேலைசெஞ்சவங்கனு பலபேர்கிட்ட என்று இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டேன். நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்யணும். பிறகு, தற்சார்பு நிலை அடையணும். அதை எல்லோருக்கும் கொண்டு போய் சேர்க்கணும். இதுதான் என்னோட இலக்கு. சிவகங்கை மாவட்டம், பனையூர் கிராமத்தில 2 வருசத்துக்கு முன்ன இடம் வாங்கி விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன்.

இயற்கைப் பண்ணையில்...

இயற்கைப் பண்ணையில்…

என்னோட பண்ணைக்கு மருதவனம்னு பேர் வெச்சிருக்கேன். கொய்யா, நாவல், பலா, வாழை, பூந்திக்கொட்டைனு ஏகப்பட்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டுவெச்சு வளர்க்கிறேன். ஒருங்கிணைந்த பண்ணை மாதிரி ஓரளவுக்கு மாத்திட்டேன். இதுல, ஓரளவு சந்தைப்படுத்துதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பயிர் செய்றேன். மரங்கள் போக மத்த இடத்தில கடலை, சம்பங்கி பூ பயிர் பண்ணியிருக்கேன். விவசாய நிலத்தைச் சுத்தியும் உயிர்வேலி அமைக்கப் போறேன். அதுனால, இப்ப கம்பி வேலி எதுவும் அமைக்கலை.

40 சென்ட் இடத்தில கடலையும், 30 சென்ட் இடத்தில சம்பங்கியும் இருக்கு. கடலையைக் கொஞ்சம் கொஞ்சமா பறிச்சு, நண்பர்கள், தெரிஞ்சவங்களுக்கு விற்பனை செய்றேன்.

ஏற்கெனவே மேட்டுப் பாத்தியில பூங்கார் வகை நெல்லை நடவு பண்ணி, அறுவடை செஞ்ச இடத்துல சம்பங்கி நடவு பண்ணுனேன். அதுனால உழவு செய்ற வேலை இல்லை. உழவில்லா விவசாயம்தான் என்னோட நோக்கம். ஏற்கெனவே இருந்த நெல் மேட்டுப் பாத்திய கையால சீராக்கி, சம்பங்கி கிழங்கை நடவு செஞ்சிருக்கேன்.

அத்திக் கன்றுடன்...

அத்திக் கன்றுடன்…

சம்பங்கி விதைகளை 20 நிமிடம் தசகவ்யாவுல ஊறவெச்சு நட்டேன். ஒவ்வொரு விதைக்கும் ஒரு ஜான் இடைவெளியில விதைச்சேன். பிறகு, ஈரம் காய விட்டு தண்ணி விட்டேன். ஒவ்வொரு பாத்திக்கும் இடையிலும் மூடாக்குப் போட்டுறுக்கே

களை, கரும்புக் கழிவு, இளநீர்க் கூடு, தேவையில்லாத குச்சிகள்னு பலவற்றையும் மூடாக்குக்குப் பயன்படுத்திக்கிறேன். இதனால ஈரத்தை தக்கவைக்க முடியுது. மண் பதமாக மாறுது. வேர்களுக்கு சுலபமா தண்ணி கிடைக்குது. பல்லுயிர்ப் பெருக்கம் உருவாவதற்கு மூடாக்கு உதவியா இருக்குது.

மூடாக்கு முறையில் சம்பங்கி

மூடாக்கு முறையில் சம்பங்கி

மாதம் ஒரு முறை தொழுவுரம் கொடுப்பேன். 5 நாளுக்கு ஒரு முறை அமிர்தகரைசல் கொடுப்பேன். பூ வாட்டமா இருந்தால் தேமோர் கரைசல் கொடுப்பேன். பூச்சி வெட்டு இருந்தால் மூலிகை பூச்சி விரட்டித் தெளிப்பேன்.

சம்பங்கி நட்ட ஒரு மாசத்திலயே பறிப்புக்கு வந்துடுச்சு. 100 கிராம் இருந்து, இப்ப கிலோ கணக்கில கிடைக்குது. இப்ப தினமும் 8 கிலோ வரை சம்பங்கி கிடைக்கிது.

சம்பங்கி

சம்பங்கி

சிவகங்கை பூ மார்க்கெட்டுல கொரோனா காலத்தில கிலோ 70 ரூபாய் வரைக்கும் போகுது. சம்பங்கி சுமார் 3 வருஷம் வரைக்கும் பலன்கொடுக்கும். தொடர்ந்து பூக்களைப் பறிச்சு விற்பனை செய்றேன். சம்பங்கிக்கு இடையே முருங்கை வைச்சிருக்கேன். அதுக வளர்ந்த பிறகு, மதிப்புக்கூட்டி, எண்ணெய்யா விற்பனை செய்யலாம்னு ஐடியா இருக்குது. எங்ககிட்டயே சொந்தமா மாடு இருக்குது. அதுனால உரங்களுக்குப் பிரச்னை இல்லை. அது போக கோழிகளையும் வளர்க்கிறோம்” என்றார்.

நன்றி: பசுமை விகடன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *