உரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி?

திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி.

ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் இவருடைய ரகசியம் உரகுழி.  இதை பற்றி அவர் கூறுகிறார்:
“ஒன்றரை ஏக்கர்ல உளுந்து விதைச்சுருக்கேன். மொத்தத்துக்கும் உரக்குழி தண்ணிதான் பாசனமாயிட்டிருக்கு. இந்த உளுந்துச் செடியில இலைகள் அடர்த்தியாகவும், அகலமாகவும் இருக்குறதுனால களைகளே இல்ல. ஒரு செடிக்கு சராசரியா 20 கிளைகளும், மொத்தம் 150 முதல் 200 காய்களும் பிடிச்சிருக்கு. கொஞ்சம்கூட பொக்கையே இல்லாம எல்லா காய்களுமே நல்ல திரட்சியா இருக்கு. விதைச்சு 50 நாட்களுக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதல் கொஞ்சம்கூட இல்ல.

இதுவே ரசாயன முறையில உளுந்து சாகுபடி செஞ்சப்ப, 25ம் நாள் அசுவணித் தாக்குதல், 35-ம் நாள் மஞ்சள் நோய் தாக்குதல், இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதல், 40-50 நாட்கள்ல காய்ப்புழுத் தாக்குதல்னு தொடர்ச்சியா பூச்சிமருந்து அடிச்சுக்கிட்டே இருப்போம்.

விதைச்ச 25-ம் நாள், ஒரு ஏக்கருக்கு ஒண்ணரை மூட்டை டி.ஏ.பி. போடுவோம். 35-ம் நாள் மற்றும் 60-ம் நாள் தலா ரெண்டு லிட்டர் டி.ஏ.பி. கரைசல் தெளிப்போம். ஆனாலும், விளைச்சல் சுமாராதான் இருக்கும் . ஒரு செடிக்கு அதிகபட்சம் 100 காய்கள்தான் இருக்கும். அதிலும்கூட 15 பொக்கையா இருக்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு 6 குவிண்டால் கிடைச்சதுதான் பெரிய மகசூல்.

போன வருஷத்துல இருந்து ரசாயனத்தை முழுமையா தவிர்த்துட்டு, இந்த இயற்கை உரக்குழி வழியா தண்ணி பாய்ச்சி, உளுந்து சாகுபடி செய்யத் தொடங்கினேன். இதுல, ஒரு தடவை மட்டும்தான் களையெடுக்கற செலவு. அதைவிட்டா… அடுத்தது அறுவடைதான் (ரசாயன முறையில் இரண்டு தடவை களை எடுக்க வேண்டும்).

உரக்குழி மூலமா போன வருஷம் சாகுபடி செஞ்சப்ப, ஒரு செடிக்கு 140-170 காய்கள் இருந்துச்சு. ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை மகசூல் கிடைச்சுது. இந்த வருஷம் அதைவிட அதிகமாக கிடைக்கும்னு தோணுது. ஒரு செடிக்கு 200 காய்கள் வரைக்கும் இருக்குறதுனால கண்டிப்பா 12 குவிண்டால் மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்” என நம்பிக்கையோடு பேசிய கணேசன், பக்கத்திலிருந்த மற்றொரு விவசாயியின் உளுந்து வயலுக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டினார்.

“ இது ரசாயனத்துல விளைஞ்சது பசுமையே இல்லாம காய்ஞ்சு கிடக்கு. இலைகள் அடர்த்தியா இல்லாம, அதிகமாக களை  மண்டிக் கிடக்கு. மஞ்சள் நோய் தாக்குதல், இலைச்சுருட்டுப்புழுத் தாக்குதலும் அதிகமா இருக்கு. என் வயல்ல ஆடுதுறை 5 ரக உளுந்தை ஏக்கருக்கு 12 கிலோ விதைச்சேன. அதே நாள், அதே அளவு, அதே ரச விதையைத்தான் இங்கயும் விதைச்சாங்க. என் வயல்ல இருக்கற, அதே மண்கண்டம்தான் (செம்மண், மணல் கலந்த மண்) இங்கயும் இருக்கு. அபப்டியிருந்தும் இந்த ரெண்டு வயலுக்கும் மகசூல்ல மலையளவு வேறுபாடு இருக்குனா.. அதுக்குக் காரணம் உரக்குழி மூலமா பாசனம் பண்றதைத் தவிர வேற என்னவா இருக்க முடியும்”. என்று சொல்லி முடித்தார்.

உரக்குழி செய்முறை:

  • 100 அடி நீளம், 9 அடி அகலம், 3 அடி ஆழம் கொண்ட குழியெடுத்து, மாட்டுக் கொட்டகையிலிருந்து வரும் கழிவுநீர்க் குழாயை அந்தக் குழியில் அணைத்திருக்கிறார்.
  • அந்தக் குழியின் கரைகளில் கொட்டாரப் பந்தல் அமைத்து,  அதில் அவரை, புடலை போன்ற கொடிகளை நிழலுக்காகப் படரச் செய்துள்ளார்.
  • இந்தக் கொடிகள் உதிர்க்கும் இலை, தழைகள் குழியில் விழுந்து கொண்டே இருக்கின்றன.
  • இதோடு, துளசி ஆடுதொடா இலை, வேம்பு உள்ளிட்ட இலை, தழைகளையும் இதில் கொட்டுகிறார்.
  • இவற்றோடு… சாணம், மூத்திரம் எல்லாம் ஒன்றாகக் கலந்து, உரக்குழியாக மாறியிருக்கிறது.
  • பயிர்களுக்கான தண்ணீரை, இந்த உரக்குழி வழியாகப் பாய்ச்சுவதுதான் கணேசனின் வெற்றிப்பாட்டை

தொடர்புக்கு
கணேசன்
சோழகன்கரை கிராமம்
தஞ்சாவூர் மாவட்டம்
அலைபேசி 09626695141

நன்றி: தமிழ்நாடு வேளாண்மை பலகலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *