பரம்பு மலையின் (பிரான் மலை) இனக்குழுத் தலைவன் பாரியின் கெழுதகை நண்பரும் இயற்கையைப் பாடிய பெரும்புலவருமாகிய செந்தமிழ் அந்தணாளர் கபிலர் வடக்கிருந்து உயிர்துறந்த இடம் திருக்கோவலூர். இப்போது திருக்கோவிலூர் என்று அழைக்கப்பெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணையாற்றின் அருகே அமைந்துள்ள சிறு நகரம். ஓரளவு நீர் வளம் உள்ள பகுதி. இங்கு நெல்லும் கரும்பும் சாகுபடி செய்து வெற்றி பெற்றுவருகிறார் இயற்கை உழவர் அருள்மொழி. இப்பகுதியில் இவர் ஒரு முன்னத்தி ஏர். பலருக்கும் நுட்பங்களைக் கற்றுத் தந்துவருகிறார்.

உரத் தேவை நிறைவு
முப்பது ஏக்கர் நிலம் இவரது தந்தை வழியாக வந்தது. இதில் 15 ஏக்கரில் கரும்பும், 14 ஏக்கரில் நெல்லும் விளைவிக்கிறார். சிறிதளவு தீவனப் புற்களும் வளர்த்துத் தனது மாடுகளுக்குப் பயன்படுத்துகிறார். ஏறத்தாழ 50 மாடுகள் வைத்துள்ளார். இவை பாலுக்கான மாடுகள் அல்ல. சாணத்துக்காகவும் மோளுக்காகவும் (மூத்திரம்) வைத்துள்ளார். இவற்றுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தக் கவனமும் கொடுப்பதில்லை. அருகே உள்ள மேய்ச்சல் பகுதிக்குச் சென்று வந்த பின்னர், அவற்றுக்குச் சிறிது தீவனப் புற்களைக் கொடுக்கிறார். இவரது முப்பது ஏக்கர் பண்ணையத்துக்கான பெரும்பான்மை உரங்களை இவைதான் கொடுக்கின்றன.
அடுத்ததாக மண்ணை வளப்படுத்தும் நடவடிக்கையாக உரக் கரைசல்கள் பலவற்றைப் பயன்படுத்துகிறார். அவற்றை எளிமையாகக் கொண்டு சேர்க்க ஊறல் தொட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் உரநீர் செல்கிறது. அதில் பல்வேறு வகையான ஊட்டங்கள் போடப்படுகின்றன. சாணம், மோள், வெல்லம், பழங்கள், புண்ணாக்கு என்று அனைத்து வகையான ஊட்டப் பொருட்களையும் சேர்க்கிறார். இவை நன்கு ஊறிச் சத்துள்ள கரைசலாக மாறுகின்றன. அதை பாசன நீர் வழியாகக் கொண்டு செல்கிறார். இதன்மூலம் வேலையாட்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்கிறார். இது தவிரச் சில ஊக்கக் கரைசல்களைத் தெளிப்புகளாகக் கொடுக்கிறார். திறமி எனப்படும் திறனுயிர்க் கரைசலைத் தெளிப்பு மூலமாகக் கொடுக்கிறார்.
இயற்கை பூச்சிவிரட்டி
தனது நெல், கரும்பு பயிர்களுக்கு ஆடு, மாடு தின்னாத இலை தழைகளைக் கொண்டு பூச்சிவிரட்டி தயாரித்துப் பயன்படுத்துகிறார் விவசாயி அருள்மொழி. அதன்மூலம் பூச்சி தாக்குதலைக் குறைக்கிறார்.
பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை:
பின்வரும் பண்புள்ள இலை தழைகள் பூச்சிகளை விரட்டப் பயன்படும்.
1. ஆடு, மாடுகள் உண்ணாத இலை, தழைகள்
2. ஒடித்தால் பால் வரும் இலை, தழைகள்
3. கசப்பு சுவைமிக்க இலை, தழைகள்
மேற்குறிப்பிட்ட மூன்று வகைகளிலும், வகைக்கு ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வீதம் இலைகளையும் தழைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக,
1. ஆடுதொடாத் தழை (ஆடு மாடு தின்னாதது)
4. சோற்றுக்கற்றாழை (கசப்பு சுவை கொண்டது)
3. எருக்கிலை (ஒடித்தால் பால் வருவது)
மேற்படி மூன்று இலைகளையும் எடுத்துச் சிறு துண்டுகளாக நறுக்கி, பின்னர் இடித்து ஒரு டிரம்மில் இடவும். அத்துடன் மஞ்சள் தூள் 50 முதல்
100 கிராம் சேர்த்து, மாட்டு மோள் 15 லிட்டர், சாணம் ஒரு கிலோ ஆகிய அனைத்தும் சேர்த்து நன்கு கலக்கி கரைசல் தயாரித்து டிரம்மில் உள்ள இடித்த இலைகள் மீது ஊற்றி நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு வாரம் ஊறவிட வேண்டும். இது நன்கு ஊறிய பிறகு, அதன் சாற்றை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
அனைத்து வகைப் பயிர்களுக்கும் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வடிகட்டிய சாறு என்ற அளவில் கலந்து மாலை நேரம் தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்.
மற்றொரு முறை:
மேலே கூறிய அதே அளவு இலைகளை எடுத்துச் சாணம், மோள் சேர்க்காமல் மூழ்கும் அளவு நீர் விட்டு அரைத்து, அத்துடன் மஞ்சள் தூளை மேலே கூறிய அளவில் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். பின்னர் இந்த வேகல் கரைசலுடன் பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
அருள்மொழி, தொடர்புக்கு: 09487381043
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்